‘இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் கலவன் பாடசாலைகளாக மாற்ற வேண்டும். இன ரீதியான பாடசாலைகள் இயங்கக் கூடாது. அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளும் ஒரே சீருடை அணிய வேண்டும். முகத்தையோ, தலையையோ மறைக்க முடியாது. அவ்வாறு அவர்கள் மறைக்க வேண்டுமென்றால் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் விடுங்கள்’ என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டில் ஒரு தேசிய இனத்தை உருவாக்க வேண்டுமென்றால் உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். அத்தோடு அவர்களுக்கு நாட்டின் வரலாறு போதிக்கப்பட வேண்டும்.
டாக்டர் ஷாபி சிஹாப்தீன் சம்பவம், சஹ்ரானின் சம்பவம் போன்றதல்ல. சஹ்ரான் உட்பட 8 தற்கொலைக் குண்டுதாரிகள் வந்தார்கள். திடீரென மக்களைக் கொன்றார்கள். டாக்டர் சாபி சிஹாப்தீன் சிங்களவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு பெண்களுக்கு கர்ப்பத்தடை செய்தார். தற்போது 900 பெண்கள் கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இல்லாவிட்டால் டாக்டர் விடுதலை செய்யப்பட்டிருப்பார். இவருக்கு சவூதியிலிருந்து நிதி கிடைத்துள்ளது. அவரது வங்கி கணக்குகள் முறையாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை.
அரபு மத்ரஸாக்களில் 30 ஆயிரம் மாணவர்கள் வரையில் கல்வி கற்கிறார்கள். அவர்கள் 30 ஆயிரம் பேரே எதிர்காலத்தில் அடிப்படைவாதிகள். புத்தர் சிலைகளை உடைக்க வேண்டும். அல்லாஹ் மாத்திரமே வணங்கப்பட வேண்டும். புத்தரை வணங்குபவர்கள் மடையர்கள். அல்லாஹ்வை வழிபடாதவர்களைக் கொலை செய்ய வேண்டும். அவ்வாறு கொலை செய்தால் நாங்கள் சுவர்க்கத்துக்குச் செல்லலாம் என்று அவர்கள் உறுதி கொண்டுள்ளார்கள்.குண்டுத்தாக்குதல்தாரிகள் அல்ல பிரச்சினை. ஹிஸ்புல்லாஹ் பல்கலைக்கழகம் என்று ஒன்று நிர்மாணிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான சவூதி நிதி இதற்கு செலவிடப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாஹ்வை ஆளுநர் பதவியிலிருந்து அகற்றுவதற்கே நான் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டேன். சஹ்ரானை விட ஹிஸ்புல்லாஹ் பயங்கரமானவர். சஹ்ரானை விட டாக்டர் ஷாபி சிஹாப்தீன் பயங்கரமானவர்.
முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதாரத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். நகரங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளார்கள். காணிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சிங்களவர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு கைகோர்க்க வேண்டும்.
நாட்டில் ஒரே ஒரு தேசிய கல்வி கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு மாணவர்கள் இன, மத பேதங்களின்றி அக்கட்டமைப்புக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றார்.
vidivelli