முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : அமைச்சரவை பாத்திரம் விரைவில் தயாராகும்
முஸ்லிம் சமய அமைச்சும் நீதியமைச்சும் இணைந்து நடவடிக்கை என்கிறார் தலதா
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் அடங்கிய பிரேரணை என்னிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை. இதுதொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் நீதி அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரிக்கவே எதிர்பார்க்கின்றோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் அடங்கிய பிரேரணை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கடந்த வருடம் என்னிடம் கையளிக்கப்பட்டபோதும் அதில் இரு வேறு அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்டதொரு சமயத்துடன் தொடர்புபட்ட விடயம் என்றபடியாலும் நான் ஒரு முஸ்லிம் பிரஜை அல்ல என்பதாலும் என்னால் இது தொடர்பாக தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாதிருந்தது. இதனால் இதுதொடர்பாக பொதுவான இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தெரிவித்திருந்தேன்.
அதன் பிரகாரம் கடந்த வாரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் இது தொடர்பாக கலந்துரையாடி, சில திருத்தங்களை மேற்கொள்ள இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக அறிவித்திருந்தனர். எனினும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய பிரேரணை என்னிடம் இதுவரை கையளிக்கவில்லை. என்றாலும் இதுதொடர்பாக எனது அமைச்சும் முஸ்லிம் விவகார அமைச்சும் இணைந்து ஒரு அமைச்சரவை பத்திரம் தயாரித்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவிடம் வினவியபோது, முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்தச்சட்ட மூலத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆராய்ந்து பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்தோம். குறிப்பாக பெண்களின் திருமண வயதை 18ஆக அதிகரித்தல், பெண் காதி நீதிவான்களை நியமித்தல், விவாக அத்தாட்சிப் பத்திரத்தில் பெண்ணும் கைச்சாத்திடல் மற்றும் காதி நீதிவான்களை நியமிக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய தகைமைகளை அதிகரித்தல் போன்ற விடயங்களுக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தனர்.
தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் விடயங்களை அடிப்படையாகக்கொண்டு நீதி அமைச்சருடன் இணைந்து முஸ்லிம் விவகாரத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஹலீம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரிக்கவேண்டும். அத்துடன் திருத்தம் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் ஹலீம் தெரிவித்திருக்கின்றார்.
கலந்துரையாடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் தொடர்ந்து இதனை காலம் தாழ்த்தாமல் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நீதி அமைச்சுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் தயாரித்த பின்னர், அதுதொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இறுதித் தீர்மானத்துக்கு வரவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.
எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli