உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பழி தீர்க்கும் முகமாக குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்பு நாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசியல் பின்புலத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த வன்செயல்களால் முஸ்லிம்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. வீடுகள், கடைகள், தீக்கிரையாக்கப்பட்டன.
அல்லாஹ்வின் மாளிகையாக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள பள்ளிவாசல்கள் இனவாதிகளினால் தாக்கப்பட்டன. புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன. வன்செயல்கள் தொடராதிருப்பதற்காக குறிப்பிட்ட மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
வன்செயல்களினால் குருணாகல், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களே பாதிப்புக்குள்ளாகின.
கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் குருணாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்தந்த பிரதேச செயலாளர்களினால் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சேதமாக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கான நஷ்டங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் நஷ்டஈடுகள் வழங்கப்படுமெனவும் அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் இழப்பீட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 826 சொத்தழிவுகளில் பள்ளிவாசல்களும் உள்ளடங்கியுள்ளன. ஆனால் பள்ளிவாசல்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படமாட்டாதெனவும் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சினால் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் ஆலோசனைக்கமைய இராணுவத்தினரினதும் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டுள்ள 27 பள்ளிவாசல்கள் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையும் வழங்கியுள்ளது. 27 பள்ளிவாசல்களையும் புனரமைப்பதற்கு 67 ½ இலட்சம் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டு அந்நிதியை ஒதுக்குமாறு திறைச்சேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திறைச்சேரி உரிய நிதியை இதுவரை ஒதுக்கீடு செய்யாமையே புனரமைப்புப் பணிகள் தாமதமடைவதற்குக் காரணம் என முஸ்லிம் சமய விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் 4 பள்ளிவாசல்களின் சேத விபரங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களினால் சேதங்களுக்குள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டி செபஸ்தியார் தேவாலயம் என்பவற்றின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய புனரமைப்புப் பணிகள் நிறைவுற்றுள்ளன. ஆனால் இனவாதிகளினால் தாக்கப்பட்ட பள்ளிவாசல்களின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. திறைச்சேரி அதற்கான நிதியினை ஒதுக்குவதில் காலம் தாழ்த்தி வருகிறது.
மதஸ்தலங்கள் அவை எந்த சமயத்துக்கு உரித்தானவை என்றாலும் தாமதமில்லாமல் புனரமைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அங்கீகரித்த நிதியினை ஒதுக்குவதில் திறைச்சேரி அசிரத்தையுடன் இருப்பதை முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனத்தில் கொள்வதுடன் நிதியமைச்சுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு ஓரிரு தினங்களின் பின்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விரைவில் புனரமைப்பு செய்யப்படும் என உறுதியளித்திருந்தார். அவரது உறுதிக்கு இன்று வயது இரண்டு மாதங்கள். அரசியல்வாதிகள் அவர்கள் பிரதமராக இருந்தாலும் சரி அமைச்சர்களாக இருந்தாலும் சரி வாக்குறுதிகளை உரியகாலத்தில் நிறைவேற்ற வேண்டும்.
நாட்டில் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் இன ஒற்றுமைக்கும் முன்னுரிமை வழங்கியுள்ள அரசு இவ்வாறான விடயங்களில் மந்தகதியில் நகராது துரிதகதியில் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
vidivelli