ரிஷாதுக்கு எதிராக ரதன தேரர் பிரேரணை கொண்டுவந்தால் அதனையும் தோற்கடிப்போம்
இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார
அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் ரிஷாத் பதியுதீனுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவாரேயானால் அதனைத் தோற்கடிக்க ஐ.தே.க. ஒரு போதும் பின் வாங்க மாட்டாது என மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சருமான வசந்த அலுவிஹார தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தான் அரசியலுக்குக் கால் பதித்து முப்பது வருட பூர்த்தியை முன்னிட்டு மாத்தளை “சுவிஸ்டேல்” ஹோட்டல் மண்டபத்தில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
கடந்த வாரம் ஜே.வி.பி.யினர் ஆட்சியிலிருக்கும் அரசுக்கெதிராக களுத்துறையிலிருந்து மாபெரும் பேரணியை நடத்திவிட்டு ஐ.தே.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தது. ஜே.வி.பி.யின் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐ.தே.க.வும் ஏனைய கட்சிகளின் ஒற்றுமையோடு படுதோல்வியடையச் செய்தோம். ரிஷாத் பதியுதீனுக்கெதிராக அத்துரலிய ரதன தேரர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தால் ஜே.வி.பி.யினர் தழுவிக் கொண்ட இதே படுதோல்வியை அவரும் தழுவிக் கொள்ள நேரிடும் என்பதை ரதன தேரர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐ.தே.க. இந்நாட்டிலிருக்கும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சி. ஐ.தே.கட்சிக்கென ஒரு அரசியல் வரலாறு உள்ளது. அதற்கென ஒரு அரசியல் கொள்கை உள்ளது. நீண்ட அரசியல் வரலாற்றுடன் தீர்க்கமான அரசியல் கொள்கைகளையுடைய ஐ.தே.க வையும், அதனைச் சார்ந்த அமைச்சர்களையும் ஒரு சில சந்தர்ப்பவாத மற்றும் இனவாத அரசியல்வாதிகளிடம் தாரை வார்க்கவோ, சரணாகதி அடையச் செய்யவோ ஐ.தே.க.வைச் சார்ந்த நாம் ஒருபோதும் தயாரில்லை. அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கவும் மாட்டோம்.
கடந்த வாரம் ஜே.வி.பியினர் அரசுக்கெதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கச் செய்து ஜே.வி.பி.யினரை எவ்வாறு முழங்காலில் இருக்கச் செய்தோமோ அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கும் ரிஷாத் பதியுதீனுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதனைத் தோற்கடிக்கச் செய்து எமது ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கௌரவத்தை நிச்சயம் நாம் பாதுகாப்போம்.
பதவியிலிருக்கும் இந்த ஆட்சியை எந்த அரசியல் ஜாம்பவான்களினாலும் இலகுவில் கவிழ்க்க முடியாது. அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் கடந்த காலங்களைப் போன்று பொது அபேட்சகர் என்ற சொல்லுக்கே இடமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி அபேட்சகர்கள் பற்றி பலரது பெயர்கள் பேசப்பட்ட போதும் எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் முடிவே இறுதி முடிவாகும். ஐ.தே.கட்சி முன்வைக்கின்ற ஜனாதிபதி அபேட்சகரையே வெற்றி பெறச் செய்யும்படி நாம் இந்நாட்டு வாக்காளர்களை கேட்டுக் கொள்வோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அனைத்து எதிரணி அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ஒரு அபேட்சகரை முன்னிறுத்தினாலும் கூட அந்த அபேட்சகரையும் அந்த எதிரணிக் கட்சிகளையும் படுதோல்வியடையச் செய்து ஐ.தே.க.வின் ஜனாதிபதி அபேட்சகரை வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுப்போம்.
முக்கியமாக இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி ஐ.தே.க.வின் பாரிய தயவுடனேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்து விட்டாலும் இந்நாட்டு தமிழ், முஸ்லிம், பௌத்த மற்றும் ஏனைய மதத்தினர் இன்றும் மறந்து விடவில்லை என்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி அபேட்சகர் வெற்றி பெற்று நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொள்வார். ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டு வந்தால் அதனையும் தோல்வியடையச் செய்து எதிரணியினரின் அரசியல் கொட்டத்தை அடக்கி வைப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார மேலும் கூறினார்.
vidivelli