கடந்த மே மாதம் கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடம் பெற்ற வன்செயல்களின் போது சேதங்களுக்குள்ளான பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கென 67 ½ இலட்சம் ரூபா திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.கே முஹைஸ் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களின் புனரமைப்புப் பணிகளின் தாமதத்திற்குக் காரணம் திறைசேரியினால் உரிய நிதி இதுவரை வழங்கப்படாமையே எனவும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,
“திறைசேரி மூலம் உரிய நிதி வழங்கப்பட்டதும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக திருத்தப்பணிகள் இடம்பெறும் திருத்தப்பணிகளுக்கு இராணுவத்தின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படும்.
வன்செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் சேத விபரங்கள் மாவட்ட செயலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப அதிகாரிகள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளன.
சேதங்களுக்குள்ளான 27 பள்ளிவாசல்கள் புனரமைக்கப்படவுள்ளன.மேலதிகமாக சேதங்களுக்குள்ளான 4 பள்ளிவாசல்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்விண்ணப்பங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்களைப் புனரமைப்பதற்கும் தேவையான நிதியினை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேவையான நிதியினைப் பெற்றுக்கொள்வதை துரிதப்படுத்துமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் நிதியமைச்சரைக் கோரியுள்ளார்கள்.
திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.
ஏ.ஆர்.ஏ. பரீல்