குழப்பம் செய்வது கொலையை விடவும் மிகப் பெரியதாகும். அவர்கள் சக்தி பெற்றால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பும் வரை உங்களோடு ஓயாமல் போரிடுவார்கள். எனவே உங்களில் எவரும் மார்க்கத்திலிருந்து மாறி நிராகரித்தவராகவே இறந்து விட்டால் அத்தகையோரின் செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள், அதில் நிரந்தரமாக இருப்பவர்கள். (2:217) என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
இங்கு குழப்பம் பெரிய குற்றம் என்றால் கொலை அதைவிட சிறிய குற்றம் என்றால் என்ன அர்த்தம்-? கொலையை இஸ்லாம் எதிர்க்கிறது என்பது தானே இங்கு குழப்பம் பெரிய குற்றம் எனக் கூறப்படக் காரணம். அதனால் பல கொலைகள் நிகழலாம் என்பதற்காகத்தான், எனவே இஸ்லாம் கொலையைத் தூண்டுகிறது என இஸ்லாத்தின் விரோதிகள் குறிப்பிடுவது சுத்த அபத்தமாகும்.
அவர்கள் சக்தி பெற்றால் உங்களை மார்க்கத்திலிருந்து திருப்பும் வரை உங்களோடு ஓயாமல் போரிடுவார்கள் என்றால் என்ன அர்த்தம்? குறைஷிகள் வலிமை பெறும் போதெல்லாம் ஓயாமல் போரிடுவார்கள் என்பதேயாகும். அவ்வமயம் முஸ்லிம்களில் எவரும் மதம் மாறி அவர்களுடன் இணைந்து முஸ்லிம்களுடன் போராடி களத்தில் இறந்துவிட்டால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்கையில் புரிந்த நல்லமல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள். இது எதிர்த் தரப்புக்கு மாறி களத்தில் முஸ்லிம்களோடு போரிட்டுக் கொல்லப்படுபவரையே குறிப்பிடுகிறது.
இனி இஸ்லாம் பாடநூலில் உள்ளதாகக் கூறியது பற்றிப் பார்ப்போம். 1980 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை கற்பிக்கப்பட்ட 10 ஆம் 11 ஆம் ஆண்டு பாடப்புத்தகங்களில் குற்றமும் தண்டனையும் என்னும் தலைப்பின் கீழ் குற்றவாளிகள் பற்றி குறிப்பிடப்பட்டு அது பற்றிய தண்டனையை விளக்குமுன் இஸ்லாமிய தண்டனையின் இயல்புகள், அவற்றின் நோக்கம், அவற்றுக்கான பின்னணி, நிபந்தனை ஆகியவை பற்றியும் விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய தண்டனை முறையானது எச்சரிக்கை விடுப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கிறதே தவிர அழிவுக்குட்படுத்துவதற்கல்ல. இதன் மூலம் குற்றம் புரிய முற்படுவோருக்கு எச்சரிக்கை விடுத்து நேர்வழிக்கு உட்படுத்தும் நோக்கத்துடனேயே தண்டனை விதிக்கப்படுகிறது எனக்காணப்படுகிறது.
1988 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கற்பிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பில் குற்றமும் தண்டனையும் என்னும் தலைப்பின் கீழும் முன்பிருந்த நூலில் காணப்பட்டவாறே குறிப்பிடப்பட்டு அதற்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நீதிபதிக்கே உண்டு எனவும் காணப்படுகிறது.
2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை கற்பிக்கப்பட்ட 11 ஆம் ஆண்டு வகுப்பின் பாடப்புத்தகத்தில் குற்றமும் தண்டனையும் என்னும் தலைப்பின் கீழும் முன்பெல்லாம் வெளியானவாறே குறிப்பிடப்பட்டிருந்தன. இஸ்லாமிய தண்டனைகளின் நோக்கம் எச்சரிக்கை செய்து குற்றத்தைத் தடுப்பதேயன்றி மக்களை அழிப்பதல்ல. குற்றம்புரிய நினைப்போரை தைரியமிழக்கச் செய்து இதன் மூலம் அவனைக் காப்பாற்றுவதே இஸ்லாமிய தண்டனைகளின் எதிர்பார்ப்பு என அதில் காணப்படுகிறது.
எனினும் 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கற்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பாடத்திட்டத்தில் குற்றமும் தண்டனையும் என்னும் விடயம் அகற்றப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய பாடத்திட்டத்திலும் ஆசிரியருக்கான வழிகாட்டலிலும் பாடப்புத்தகத்திலும் அவை இல்லை.
இஸ்லாத்தைப் பயிற்றுவிப்பதில் முற்காலத்தில் இருந்து கற்பிக்கப்பட்ட இவ்விடயம் பல்வேறு காரணங்களுக்காகவும் அகற்றப்படுவதாக பாடத்திட்டக் குழு 2013 ஆம் ஆண்டு தீர்மானித்திருந்தது. அதற்கு பின்வரும் விடயங்களை அது முன்வைத்தது.
* பாலர் பாடத்தில் இத்தகைய தலைப்பு பொருத்தமானதல்ல
* இஸ்லாமிய நாடுகளிலும் கூட குற்றம் சம்பந்தமான சட்டம் குறித்து அபிப்பிராய பேதங்கள் இருக்கவே செய்கின்றன. பல சந்தர்ப்பங்களில் இது நடைமுறைப்படுத்தப்படுவதுமில்லை. எனவே பல்லின இலங்கை போன்ற நாட்டில் இதைக் கற்பிப்பது தேவையற்றது.
தற்போது பாவனையில் உள்ள பாடப்புத்தகத்தில் ஈமானைப் பாதிக்கும் செயற்பாடுகள் என்னும் தலைப்பின் கீழ் இஸ்லாத்தை விட்டும் மாறியோர் பற்றி குறிப்பிடப்படுகையில் இவ்வாறு காணப்படுகிறது. அதில் முஸ்லிம் சமூகம் அவரை சமூக விரோதி எனக் கணித்து செயற்படுமாறு குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர எந்த இடத்திலாவது தண்டித்தல் எனும் விடயம் காணப்பட வில்லை. 2007 ஆம்ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான வழிகாட்டியில் 11 ஆம் வகுப்பில் குற்றமும் தண்டனையும் என்னும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
என்றாலும் கூட முர்தத் என்னும் மதம் மாறியவனை கொல்லுமாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை. 2015 ஆம் ஆண்டிலிருந்து கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் ஆசிரியருக்கான வழிகாட்டியில் குற்றமும் தண்டனையும் என்னும் விடயம் காணப்படவில்லை. ஈமானைப்பற்றிய விளக்கத்திலேயே மதம் மாறியவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான். இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அவன் தேசத்துரோகி என மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறான். அதன்படி இஸ்லாமிய ஆட்சியில் அவனை தேசத்துரோகி என மட்டுமே கருதவேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. தண்டனை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது மட்டுமல்ல பிரச்சினைக்குரிய எதுவும் ஆசிரியருக்கான வழிகாட்டி நூலில் காணப்படவில்லை என்பது உறுதியாகும். (இது இஸ்லாமிய ஆட்சியில் மட்டுமேயாகும்)
அதுபோல் 2015 ஆம் ஆண்டு முதல் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தில் இலங்கைக்குப் பொருத்தமான வகையில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டு அதற்கேற்றவாறு பாடப்புத்தகம் எழுதப்பட்டிருந்தது. அந்த வகையில் அதில் இலங்கைக்குப் பொருத்தமற்ற பல விடயங்கள் அகற்றப்பட்டுள்ளன. அத்தோடு பல பாடங்கள் இலங்கைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. அதன்படி பின்வரும் விடயங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
* இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றி இஸ்லாமிய வழிகாட்டல்
* ஏனைய மதங்களை மதித்தல்
* ஏனைய மதத்தினரோடு ஐக்கியத்தையும் சகவாழ்வையும் பேணுதல்
* சமூக சகவாழ்வு
* ஏனையோரின் நம்பிக்கைகளையும் மதங்களையும் தெரிந்துகொள்ளல் (பௌத்த தர்மம், கிறிஸ்து மதம், ஹிந்து மதம்)
*தேசாபிமானம் என்னும் நாட்டுப்பற்று
* நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களித்தல்
* தாயகத்தின் விடயத்தில் விசுவாசமாக இருத்தல்
*இணைந்து வாழ்ந்து மற்றோருக்கு உதவி புரிதல்
*ஏனையோரின் தேவைகளை நிறைவேற்றுவதை முன்னிலைப்படுத்தல்
* அயல் வீட்டாரோடு சகவாழ்வை வளர்த்தல்
* சூழல் பாதுகாப்போடு உயிரினங்கள் மீதும் கருணை காட்டுதல்
* சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு பொதுச்சொத்துகளையும் பாதுகாத்தல்
எனவே அந்தவகையில் இஸ்லாமிய பாடவிதானமும், ஆசிரியர் வழிகாட்டியும், பாடநூல்களும் இலங்கைக்குப் பொருத்தமானவையாகவே அமைந்திருக்கின்றன. பாடத்திட்டத்தின் நோக்கமும் கற்பித்தலின் பயனும் தீவிரவாத, பயங்கரவாத, தேசத்துரோக, அடிப்படைவாத, இனவாத அடிப்படைகளில் இல்லை என்பது உறுதியாகிறது.
எனவே மதத்தைக் கைவிடுபவரைக் கொல்ல வேண்டும் எனத் தற்போதைய முஸ்லிம் பாடநூலில் இருப்பதாக கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானதாகும். குர்ஆனில் இல்லை. ஹதீஸில் காணப்படுகிறது எனவும் குறிப்பிடுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் ஆதார பூர்வ ஹதீஸ்களையே அவர் குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். (புகாரி 6922) (அஹ்மத் 1871) (திர்மிதி 1458) (அபூதாவூத் 4351) (இப்னு மாஜா 2535) (நஸாஈ 4059) மேலும் சில ஹதீஸ்களும் உள்ளன.
இவை முஸ்லிமாக இருந்து கொண்டு எதிரிகளோடு களத்தில் மதம்மாறி அழிக்க வந்தோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையே குறிக்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சாதாரண சூழலில் நிகழ்ந்தவை என இவற்றைக் கூறமுடியாது. தற்போது பல்வேறு காரணங்களுக்காக யுத்தங்கள் நிகழ்கின்றன. யுத்தங்களின் நோக்கம் மத அடிப்படையிலானதாகவே நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. அதனால் தான் மதம் மாறியோர் பகிரங்க எதிரிகளாக அப்போது இனங்காணப்பட்டிருந்தார்கள். எனவே தான் அந்த சூழலில் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியோர் எதிரிகளின் பக்கம் சேர்ந்து தமது மதத்தையும் இருப்பையும் வாழ்வாதாரங்களையும் சுயநிர்ணத்தையும் இறைமையையும் அழித்துவிடலாம்.
இந்நிலை மிகவும் ஆபத்தானது. முஸ்லிம்களின் அந்தரங்க மற்றும் பாதுகாப்பு விடயங்கள் எதிரிகள் வசம் எளிதாகச் சென்றுவிடும் என்பதற்காகவே அத்தகையோர் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நடவடிக்கை சாதாரண சூழலுக்குரியதல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எதிரி நாடுகளுக்கு உளவு பார்ப்போரும் யுத்த முனையில் எதிர்த்தரப்போடு இணைந்து சொந்தத் தரப்பையே அழிக்க முனைவோரும் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதில்லையா?
கடந்த காலங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமிய அடிப்படை வாதம் எனக் கூறி வந்த ஏகாதிபத்திய நாடுகள் இப்போது சுருதியை மாற்றி இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய மயமாக்கல் என்னும் சொற்களை சர்வதேச ஊடகங்களில் பயன்படுத்தி இஸ்லாம் பரவுவதைத் தடைசெய்து வருகின்றன.
அவை மத்திய கிழக்கைச் சுரண்டுவதற்காக இஸ்ரேலைத் திணித்து வலுப்படுத்தி அரபு நாடுகளில் ஆயுதக் கலாசாரத்தை ஏற்படுத்தின. பின்னர் அரபிகள் தமது சுயநிர்ணயத்துக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராடுவதை ஜிஹாத் எனக்கூறி உலகை அச்சுறுத்துகின்றன.
ஜிஹாத் என்னும் அரபுச் சொல்லுக்கு முஸ்லிமல்லாதோரை அழித்தல் என்றே இஸ்லாத்தின் எதிரிகள் அர்த்தம் கற்பிக்கிறார்கள். இதன் உண்மை அர்த்தம் அர்ப்பணித்தல் என்பதேயாகும்.
*முஸ்லிம்கள் மக்காவில் 13 ஆண்டுகள் குறைஷிகளால் கொடுமை இழைக்கப்பட்டும் கொள்கையைக் கைவிடவில்லை.
*-குறைஷிகள் ஆயுதமுனையில் அழித்தொழிக்க முயன்றபோதும் முஸ்லிம்கள் அஞ்சிப் பின்வாங்கவில்லை.
*நபிகளாரையும் இஸ்லாத்தையும் தம்மையும் பாதுகாக்க வெறுங்கைகளோடு நாடு துறந்து மதீனாவுக்குப் போக நபி (ஸல்) அழைத்தபோது சென்றார்கள்.
*அவ்வமயம் முஸ்லிம்கள் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக வீடு, வாசல், தோட்டம், காணி, கால்நடைகள், ஆபரணங்கள், வர்த்தக இடங்கள், பணம், பொருட்கள், பழம்தரும் மரங்கள் ஆகியவற்றையெல்லாம் விட்டுவிட்டு குடும்பங்களோடு போனார்கள்.
*அவ்வாறு போனோர்க்கு மதீனாவில் அன்சாரீன்கள் தமது வளங்களில் பாதியைப் பகிர்ந்து வழங்கினார்கள்.
*இஸ்லாத்துக்காகவும் நபி (ஸல்) அவர்களுக்காகவும் நபித் தோழர்கள் உயிர்களைப் பணயம் வைத்துப் போராடினார்கள். ஆக இவ்வொவ்வொன்றும் ஜிஹாத் என்னும் அர்ப்பணிப்பேயாகும். இத்தகைய உயரிய இலட்சியத்துக் குரிய சொல்லைத்தான் எதிரிகள் படுமோசமானதாக அர்த்தப்படுத்துகிறார்கள்.
ஏ.ஜே.எம். நிழாம்
vidivelli