தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துகொண்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி தங்கள் முன்னைய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்க தீர்மானித்திருந்தாலும் அதில் தற்போது இழுபறி நிலை நிலவிவருகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்பதில்லை எனத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று கல்முனை மாநகர சபை கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பள்ளிவாசல் களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இவ்வாறான ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் முஸ்லிம்ளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் நிலையில் மற்றும் கல்முனை தமிழ்ப் பிரதேச உப செயலகம் விவகாரம் குழப்ப நிலையில் இருக்கின்றது. சாய்ந்தமருது, வாழைச்சேனை மற்றும் தோப்பூர் பிரதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாத நிலையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக முன்னைய அமைச்சுப் பதவியை அவர் ஏற்கமாட்டார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தீர்மானம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினது அல்ல. அவரது தனிப்பட்ட தீர்மானமாகும் என ஹரீஸ் எம்.பி.யுடன் மிகவும் நெருங்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli