நல்லாட்சியில் ஊழல் இருப்பின் பதில் கூறும் பொறுப்பு ஜனாதிபதிக்கும் உண்டு
ஐ.தே.க. தவிசாளர் கபீர் சுட்டிக்காட்டு
நல்லாட்சியின் கடந்த மூன்றரை வருட காலப்பகுதிக்குள் ஊழல் மோசடி இடம்பெற்றதாக ஜனாதிபதி கூறுகின்றார். அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் இதற்குப் பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இருக்கிறது என்று கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (25) கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமையை நியாயப்படுத்தியதுடன், 2015 ஜனவரி – 2018 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் துஷ்பிரயோகமே அதற்கான பிரதான காரணம் எனவும், இதுதொடர்பில் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் தலைவராக இருந்த மைத்திரி, நாட்டின் தலைவராக மட்டுமன்றி, அரசாங்கத்தின் தலைவராகவும் இருந்தவராவார். அரசாங்கத்தினால் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்துக்கும் அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில், அவரே தலைமை தாங்கினார்
இந்த 3 ½ வருட காலப்பகுதியில் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருந்தால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதியும் சமனான பங்கினைக் கொண்டிருக்கின்றார். இதுதொடர்பில் ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்துவதோடு, விசாரணைகளையும் தொடங்க வேண்டுமென அவரிடம் கோருகின்றோம்.
அத்துடன், பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை பலத்தைக் காட்டினாலும், அவரை தனது வாழ்நாளில் பிரதமராக நியமிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்து பாராளுமன்ற அடிப்படை ஜனநாயகத்துக்கு முரணானது எனவும், அரசியலமைப்பு ஷரத்துக்கு மாறுபட்டது எனவும் நாங்கள் தெரிவிப்பதோடு, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை அரசியலமைப்பில் அவர் புகுத்த முனைகிறார் எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இறுதியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது வாழ்நாள் வரை ஜனாதிபதியாக இருப்பதற்கு தெரிவு செய்யப்படவில்லை எனவும், ஆகக் குறைந்தது அவரது ஜனாதிபதி பதவிக்காலம் இன்னும் 12 மாதத்துக்கு குறைவானதாகவே இருக்கின்றது என்பதையும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்த விரும்புகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli