முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாகப் பதவி விலகியமை மிக அழகாக அரங்கேற்றப்பட்ட நாடகமாகும். அவர்கள் அனைவரும் கூட்டாகப் பதவி விலகியதை நாம் வரவேற்கவில்லை.
ஆனால் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகி அனைவரும் குற்றவாளிகள் போலாகிவிட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கூட்டாகப் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் பதவியேற்கவுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாகப் பதவி விலகியதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் கூட குற்றஞ்சாட்டப்பட்டவர் தவிர ஏனையோரை மீண்டும் பதவியேற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் கூட்டாகப் பதவிவிலகி குற்றஞ்சாட்டப்பட்டவருடன் ஒன்றித்து விட்டார்கள்.
அதாவது, குற்றஞ்சாட்டபட்டவரும், குற்றஞ்சாட்டப்படாதவர்களும் ஒன்றாகிவிட்டார்கள். எவ்வாறிருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
தொடர்ந்து பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுன அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் குறித்து கலவரமடையச் தேவையில்லை. இப்போதுதான் கூட்டணி தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அவை நிறைவடைந்த பின்னரே வேட்பாளர் மற்றும் தலைமைத்துவம் பற்றி பேச முடியும்.
கோதாபய ராஜபக் ஷ மாத்திரமல்ல, எந்தவொரு தனிப்பட்ட நபர் மீதும் எமக்கு அதிருப்தி கிடையாது. அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இருதரப்பிலும் ஒவ்வொருவரும் தத்தமது தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கூட்டணி அமைக்கப்பட்டால் இரு தரப்பிலிருந்தும் பொது வேட்பாளர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.
எனினும், கூட்டணி அமைவதை விரும்பாத சிலர் இந்த முயற்சியை முறியடிப்பதற்காகவே இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எனவே கூட்டணி உருவானதன் பின்னரே தலைமைத்துவம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட வேண்டும் என்றார்.
vidivelli