முஸ்லிம்கள் தொடர்பிலான கருத்து முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
உலமா சபை பிரதிநிதிகளிடம் அஸ்கிரிய பீடாதிபதி எடுத்துரைப்பு
முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் இருதரப்பு மதத்தலைவர்களும் கலந்துரையாடித் தீர்த்துக்கொள்வோம். இது மதத்தலைவர்களின் பொறுப்பாகும். இதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் நடத்துவோம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வோம் என அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன மகாநாயக்கதேரர் தன்னைச் சந்தித்த உலமாக்களிடம் தெரிவித்தார்.
உலமா சபையின் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை காலை கண்டி அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன மகாநாயக்க தேரரை கண்டியில் சந்தித்து கலந்துரையாடினார்கள். நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் சந்தேகிக்கப்படுவதாகவும், பல்வேறு சவால்களுக்குட் படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட குழுவினரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் இதற்கு முஸ்லிம் சமூகம் பொறுப்பானதல்ல எனவும் உலமாக்கள் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரிடம் எடுத்து விளக்கினார்கள். அப்போதே அஸ்கிரிய மகாநாயக்க தேரர் இவ்வாறு கூறினார்.
இந்தச் சந்திப்பினை நாவின்ன ரஜமகாவிகாரை விகாராதிபதி பராமுர நன்தானந்த தேரர் ஏற்பாடு செய்திருந்தார்.
அங்கு உலமாக்கள் அஸ்கிரிய பீடாதிபதியிடம் கருத்து தெரிவிக்கையில்;
ஒருசில குறிப்பிட்ட தேரர்கள் உலமா சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அப்படியானவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு நாம் விரும்பவில்லை. அஸ்கிரிய, மல்வத்து மற்றும் ராமன்ய நிகாய தலைவர்களுடனேயே பேச்சுவார்த்தைகள் நடத்தி தற்போது நிலவும் பிரச்சினை களுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வுகாண விரும்புகிறோம். இன்று முஸ்லிம்களை தவறாக விமர்சிக்கிறார்கள். தீவிரவாதிகளாக சந்தேகிக்கிறார்கள். இவை நிறுத்தப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டார்கள்.
குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதி அஸ்கிரிய பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் குர்ஆன் மற்றும் சில ஆயத்துகளுக்கான தெளிவுகளும் வழங்கப்பட்டன. தேசிய ஒற்றுமை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பாக உலமா சபை வெளியிட்ட சிங்கள மொழியிலான நூல்களும் கையளிக்கப்பட்டன.
அஸ்கிரிய பீடத்துக்குள் நுழைவதற்கு உலமாக்கள் தொப்பியைக் கழற்றிய பின்பு அனுமதிக்கப்பட்டனர். அது சம்பிரதாயமென்று தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், உப தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன், கண்டி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் பஸ்ருல் ரஹ்மான் மற்றும் உறுப்பினர்களான அஷ்ஷெய்க் பாசில் பாரூக், அஷ்ஷெய்க் பரீத், அஷ்ஷெய்க் கபீர், அஷ்ஷெய்க் லரீப், அஷ்ஷெய்க் ஹைதர் அலி, அஷ்ஷெய்க் ஹாசிம் ஷுரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli