முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முன்னெடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை
பதில் பொலிஸ்மா அதிபருக்கு அசாத் சாலி விரிவான ஆதாரங்களுடன் கடிதம்
டாக்டர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையாகும். அவர் தனது தொழிலிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என சி.ஐ.டி. யினரின் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே டாக்டர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலி பதில் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அசாத் சாலி பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்துடன் டாக்டர் ஷாபிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பிரசாரங்கள், சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களின் பிரதிகளையும், பதிவுகளையும் இணைத்துள்ளார்.
அவரது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
டாக்டர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையாகும். இவை கவலை தருபவையாகும். இக் குற்றச்சாட்டுகள் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி இன முறுகல்களை உருவாக்குவதற்கான முயற்சிகளாகும்.
டாக்டர் ஷாபி தனது தொழிலில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. அவரது வர்த்தக நடவடிக்கைகளிலும் சட்டவிரோதமாகச் செயற்படவில்லை என்பதை சி.ஐ. டி. யினரின் அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது. எனவே டாக்டர் ஷாபி மீதான இக்குற்றச்சாட்டுகள் ஏன் முன்வைக்கப்பட்டன என்பதன் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.
நாட்டில் இன, மத ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கி தங்களது அரசியல் மற்றும் நிதி ரீதியான சுயலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை யடுத்து அதனைக் காரணமாகக் கொண்டு வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே நான் இதனைக் காண்கிறேன், நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி இது தொடர்பான வீடியோ பதிவுகளை இறுவட்டு மூலம் பதில் பொலிஸ் மா அதிபருக்குக் கையளித்துள்ளார்.
டாக்டர் சன்ன ஜயசுமான
டாக்டர் சன்ன ஜயசுமான டாக்டர் மொஹமட் ஷாபி சிஹாப்தீன் தாய்மார்களின் பளோபியன் குழாய்களில் தடைகளை ஏற்படுத்தியுள்ளார். சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான சொத்துகளைச் சேர்த்துள்ளார். அல்லது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி வந்திருக்கிறார் என பொய்யான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
திவயின சிங்கள பத்திரிகை
திவயின பத்திரிகை, டாக்டர் ஷாபி சிங்கள பெண்களின் பிரசவத்தின்போது 8000 பெண்களுக்கு எல்.ஆர்.டி. கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இந்த கருத்தடை சத்திர சிகிச்சை பெண்களுக்கு அறியாமலே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் டாக்டர் ஷாபி அவரது பதவிக் காலத்தில் 4400 க்கும் குறைவான மகப்பேற்று சத்திர சிகிச்சைகளே மேற்கொண்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
குருணாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத் எவ்வித ஆதாரங்களுமின்றி டாக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தி திவயின பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத்தினாலே பத்திரிகைக்குக் கூறப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.
டாக்டர் ஷாபி சட்டவிரோதமாக பெருமளவு சொத்து சேர்த்திருக்கிறார் என்று குற்றம் சுமத்தியே அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (நிதி தொடர்பான முரண்பாடுகள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அல்லது எப்.சி.ஐ.டி. மூலமே கையாளப்பட வேண்டும்)
டாக்டர் ஷாபி கடமையாற்றிய அதே வைத்தியசாலையில் டாக்டராகக் கடமையாற்றும் அவரது மனைவி மீதான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே அவரது கைது ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
அவரது கைது இடம்பெற்றபோதும் அதற்குப் பின்னரும் சரியான சட்ட நடைமுறைகள் இடம்பெற்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வீர பண்டார
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வீர பண்டார சி.ஐ.டி. யின் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சித்தார்.
சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் அல்லது அவள் நீதிமன்ற வைத்திய அதிகாரி (JMO) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். நீதிமன்ற வைத்திய அதிகாரி பொலிஸாரால் அழைக்கப்பட்டதும் அவர் சமுகமளிக்க வேண்டும். ஆனால் டாக்டர் ஷாபியின் விடயத்தில் பொலிஸார் நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு அழைப்பு விடுக்கவில்லை. மே 24 ஆம் திகதி இரவு இரண்டு நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள் என்றாலும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றுமோர் நீதிமன்ற வைத்திய அதிகாரியையே அழைத்துள்ளார்.
பணிப்பாளர் டாக்டர் வீர பண்டார டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணலொன்றினை வழங்கியுள்ளார். நேர்காணலின்போது டாக்டர் ஷாபி 2017 ஆம் ஆண்டு கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அவ்வாறெனில் பணிப்பாளர் இது தொடர்பில் ஏன் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை? பணிப்பாளர் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை?
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர்
பதற்றமான சூழ்நிலையொன்று குருணாகல் பகுதியில் உருவாகியிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் ஜூன் மாதம் 27 ஆம் திகதி குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார். அன்றைய தினம் டாக்டர் ஷாபிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அன்று ரதன தேரர் ஏனைய வெளியாருடன் சேர்ந்து இனக்கலவரத்தை உருவாக்க முயற்சித்தார்.
அத்துரலிய ரதன தேரர் நீதிமன்ற அமர்வு இடைநேரத்தின்போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவை அச்சுறுத்தினார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா டாக்டர் ஷாபிக்கு சார்பாக செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.
அரசாங்கமும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவும் டாக்டர் சாபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவரும் அவரது பிள்ளைகளும் கவனமாக இருக்க வேண்டியேற்படும் எனவும் அச்சுறுத்தியுள்ளார். அரசாங்கமும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா டாக்டர் ஷாபியைப் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாகவும் திசேரா மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரினார். அத்தோடு திசேராவும் சி.ஐ.டி. யினரும் டாக்டரைப் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அத்துரலிய ரதன தேரர் நீதிமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாக சி.ஐ.டி. யினரை ஊடகங்கள் முன்னிலையில் விமர்சித்தார். தங்களது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்று சி.ஐ.டி. க்குத் தெரியாது என்று விமர்சித்தார்.
அத்துரலிய ரதன தேரர் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டார். அங்கு அப்பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இன மோதல்களை உருவாக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டார்.
அவர் கிழக்கு மாகாணத்துக்கும் விஜயம் செய்தார். அங்கும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். எங்களுக்கு மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் தேவையில்லை எனவும் நாங்கள் சூரிய சக்தியை உபயோகிப்போம் என்றும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். அவர் அங்கு டாக்டர் ஷாபிக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இனவாதக் கருத்துகளையும், டாக்டர் ஷாபியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையான நேர்மையற்ற விமர்சனங்களையும் முன்வைத்தார். சி.ஐ.டி. டாக்டர் ஷாபியை பாதுகாப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
டாக்டர் ஷாபி தொடர்பான செய்தியை எழுதிய திவயின பத்திரிகையின் நிருபர் ஹேமந்த ரன்துனுவைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொய் தகவல்களை வெளியிட்டார்.
டாக்டர் ஷாபிக்கெதிரான வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு ஒரு தினத்துக்கு முன்பு விமல் வீரவன்ச ஊடக மாநாடொன்றினை நடாத்தினார். சி.ஐ.டி டாக்டர் ஷாபியின் பாவங்களை கழுவிவிடும் என அம்மாநாட்டில் கருத்து தெரிவித்தார். இவ்வாறான அவரது கருத்துகள் பொதுமக்கள் மத்தியில் சி.ஐ.டியின் விசாரணை தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தன.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில
டாக்டர் ஷாபிக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் இலங்கை வைத்திய சபை மீது பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இனவாத கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இந்த உரைகள் அனைத்தையும் நீங்கள் கவனத்தில் கொண்டால் இங்கு குறிப்பிட்டவர்கள் பிடிவாத குணமுள்ளவர்கள் என்பதையும் மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை உருவாக்குபவர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடாத்தி ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், குற்றவியல் வழக்குகளைத் தொடரும்படியும், வேண்டிக் கொள்கிறேன், இவர்களும் இவர்களது ஆதரவாளர்களும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை உருவாக்க காரணமாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
கலாநிதி. மெதகொட அபயதிஸ்ஸ தேரர் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம்கள் ஷரீஆ சட்டத்தின் கீழ் 20 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இராணுவத்திற்கு இரகசிய தகவல்களை வழங்கியவர்களும், விப சாரத்தில் ஈடுபட்டவர்களும் அடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்களை பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தண்டிக்கப்பட வேண்டும்
பொய் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள், இனவாதத்தை தூண்டுபவர்கள், வெறுப்புணர்வு பேச்சு பேசுபவர்கள், நல்லிணக்கத்தை சிதைப்பவர்கள் அவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli