ஓர் இலட்சம் திர்ஹம்களை குப்பையில் வீசியவரின் கதை

0 939

அப்துல் வஹாப், இந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். தற்­போது ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் சார்­ஜாவில் வசித்து வரு­கிறார். மனித வாழ்வில் நடக்கும் சிறிய தவ­றுகள், கவ­ன­யீ­னங்கள், அலட்­சி­யங்கள் ஒரு­வரின் வாழ்வை எந்­த­ள­வு­தூரம் புரட்டிப் போடும் என்­ப­தற்கு அப்துல் வஹாபின் கதை நல்ல உதா­ரணம்.

தொழில்­தேடி சார்­ஜா­வுக்கு வந்த அப்துல் வஹா­புக்கு பிர­பல உண­வகம் ஒன்றில் வேலை கிடைத்­தது. அந்த உண­வ­கத்தின் கிளை ஒன்றில் முகா­மை­யா­ள­ராக பதவி வகிக்கும் அள­வுக்கு அவர் தனது கடின உழைப்­பினால் முன்­னே­றினார். ஆனாலும் சரி­யாக நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்­னர்தான் அந்த துர­திஷ்­ட­மான சம்­பவம் நடந்­தே­றி­யது.

2015 மார்ச் 10 ஆம் திக­தி­யன்று நடந்த கவ­ன­யீனம் தனது வாழ்க்­கை­யையே திசை­தி­ருப்பி விடும் என்று வஹாப் நினைத்­துக்­கூடப் பார்த்­தி­ருக்­க­மாட்டார். உண­வ­கத்தின் 3 பிரி­வு­களில் பணத்தை சேக­ரித்­து­விட்டு அதனை வங்­கியில் வைப்பில் இடு­வ­தற்­காக வேண்டி டுபாய் சந்தைத் தொகு­தியில் உள்ள ஒரு வங்­கிக்கு வஹாப் சென்று கொண்­டி­ருந்தார். செல்லும் வழியில் ழுஹர் தொழு­கைக்­காக வேண்டி சார்­ஜாவின் அல் நஹ்தா குடி­யி­ருப்­புக்கு அண்­மையில் உள்ள காலித் இப்னு அல்­வலீத் பள்­ளி­வா­சலில் தனது காரை நிறுத்­தினார். தொழு­கையை முடித்­து­விட்டு தனது காருக்குத் திரும்­பிய பின்னர் நடந்த விட­யங்­களை அவர் இவ்­வாறு விவ­ரிக்­கிறார்.

“தொழு­கையை முடித்­து­விட்டு வந்த பின்னர் அந்த இடத்தில் எனது காருக்கு அண்­மையில் குப்பைத் தொட்டி இருப்­பதைக் கண்டேன். எனது கார் நீண்ட நாட்­க­ளாக சுத்தம் செய்­யப்­ப­டா­ததால் காரில் அதி­க­மான குப்­பைகள் இருந்­தன. அதை­யெல்லாம் சுத்தம் செய்ய நேரம் கிடைக்­க­வில்லை என்­பதால் குப்­பை­களை அகற்ற இதுவே சரி­யான இடமும் நேரமும் என்று கரு­தினேன். காரினுள் இருந்த குப்­பை­களை ஒரு பொலித்தீன் பையில் கட்டி வீசினேன்.
பின்னர் பணத்தை வைப்­பி­லி­டு­வ­தற்­காக டுபாய் மாலுக்குச் சென்றேன். அங்கு சென்ற பின்­னர்தான் நான் கொண்டு வந்த பணப்­ பொதியைக் காண­வில்லை என்­பதை என்னால் உணர முடிந்­தது. ஆம்! நான் குப்­பை­களை வீசும்­போது என்­னிடம் இருந்த 105, 439 திர்ஹம் பணத்­தையும் அதில் கட்டி வீசி­விட்டேன். (இன்­றைய மதிப்பில் இலங்கை நாண­யத்தில் 50 இலட்­சத்து 21 ஆயி­ரத்து 929 ரூபா.)

நான் கொண்டு வந்த பணத்­தையும் சேர்த்து குப்பைத் தொட்­டியில் வீசி­விட்­டதை உணர்ந்­த­போது தலை சுற்­றி­யது. மறு­க­ணமே வாகன நெரி­ச­லையும் கணக்கில் கொள்­ளாமல் ஸார்­ஜா­வுக்கு எனது காரைத் திருப்­பினேன். வந்து பார்க்கும் போது நேரம் கடந்து விட்­டது. குப்பைத் தொட்டி வெறு­மை­யாக இருந்­தது. சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் அவற்றை எடுத்துச் சென்­று­விட்­டார்கள்.”
உட­ன­டி­யா­கவே வஹாப் நடந்த சம்­ப­வத்தை தனது மேல­தி­கா­ரிக்கு தெரி­யப்­ப­டுத்­தினார். இது தொடர்­பாகப் பொலிஸில் முறைப்­பா­டொன்­றினை செய்­யு­மாறு மேல­தி­காரி அறி­வு­றுத்­தினார். பொலிஸ் நிலை­யத்தில் அடுத்த நாள் காலையில் சென்று வஹாப் முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்தார்.

“இது யாரு­டைய பணம்” என்று பொலிஸ் நிலை­யத்தில் கேட்­டார்கள். “இது கம்­ப­னி­யு­டை­யது” என்றேன். “இது கம்­ப­னி­யு­டைய பண­மாக இருந்தால் கம்­ப­னியின் பொது உற­வுகள் அதி­காரி (P.R.O) வந்து முறை­யிட வேண்டும்” என பொலிஸார் தெரி­வித்­தனர். ஆனால் எனது கம்­பனி தவ­று­த­லாக குப்­பையில் வீசப்­பட்ட பணத்தை ‘திரு­டப்­பட்ட பணம்’ என்­பதன் அடிப்­ப­டையில் முறைப்­பாடு செய்ய முயற்சி செய்­தது. ஏனென்றால் பணம் திரு­டப்­பட்­டி­ருக்­கும்­பட்­சத்தில் அதற்­கான காப்­பு­றுதி கிடைக்கும். தவ­று­த­லாக காணா­ம­லாக்­கப்­பட்­டி­ருந்தால் காப்­பு­றுதி கிடைக்­காது.

காப்­பு­று­தியை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வேண்டி வஹா­பு­டைய மேல­தி­கா­ரிகள் பணம் திரு­டப்­பட்­டு­விட்­ட­தாக முறைப்­பாடு செய்­யும்­படி அவரை வற்­பு­றுத்­தினர். பொய் கூறி முறைப்­பாடு செய்தால் தனக்கு மேலும் தலை­யி­டியை ஏற்­ப­டுத்தி பெரிய பொறி­யொன்­றுக்குள் மாட்­டிக்­கொள்ள நேரிடும் என்­பதால் வஹாப் தனது மேல­தி­கா­ரி­களின் கோரிக்­கை­களை மறுத்து வந்தார்.

அப்­போது வஹாபின் மாத சம்­பளம் 8,625 திர்­ஹம்கள். எனவே இந்தத் தவ­றி­லி­ருந்து மீள்­வ­தற்­காக குறிப்­பிட்­ட­ளவு தொகையை தனது சம்­ப­ளத்­தி­லி­ருந்து தவணை முறையில் செலுத்­து­வ­தற்கு வஹாப் தனது கம்­ப­னி­யிடம் அனு­மதி கேட்ட போதிலும் அவ­ரு­டைய கம்­பனி அதை மறுத்து விட்­டது. ‘பாது­காப்புக் கார­ணங்கள்’ என்ற போர்­வையில் கம்­பனி அவ­ரு­டைய கட­வுச்­சீட்­டையும் வாங்கி வைத்துக் கொண்­டது. பின்னர் கம்­பனி கோரிய பத்­தி­ரங்­களில் கையெ­ழுத்­தையும் போட்டுக் கொடுத்தார்.

” ஒரு நாள் கம்­ப­னியின் மனி­த­வள முகா­மைத்­துவப் பிரிவில் இருந்து தொலை­பே­சி­யூ­டாக என்னைத் தொடர்பு கொண்டு குறித்த பணத்தை திரும்பச் செலுத்த காப்­பு­றுதி நிறு­வனம் ஒப்­புக்­கொண்­ட­தாகத் தெரி­வித்­தார்கள். ‘பொலிஸ் முறைப்­பாடு இல்­லாமல் காப்­பு­றுதி எப்­படி கிடைத்­தது’ என நான் கேட்டேன். ‘நாங்கள் உங்­க­ளுக்கு உத­வத்தான் முயற்சி செய்­கிறோம். சம்­பவ அறிக்­கையை மட்டும் தாருங்கள்’ என்று சொன்­னார்கள். நானும் கொடுத்தேன். நான் திரும்ப கம்­ப­னிக்கு வேலைக்­காக சென்ற போது என்னை வேலையை விட்டு நீக்­கி­விட்­ட­தாகச் சொன்­னார்கள்.

கட­வுச்­சீட்டு, சம்­பவ அறிக்கை உட்­பட பாது­காப்பு காசோ­லை­யையும் வாங்­கி­விட்டு அதன் பின்னர் வஹா­பினை வேலையை விட்டும் நீக்­கி­யுள்­ளார்கள். வேலையைத் தொடர வேண்டும் என்றால் தொலைத்த பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும் என அவர் பணிக்­கப்­பட்டார்.

ஓர் இலட் சம் திர்ஹம் பணத்தை அவரால் செலுத்த முடியும் என்­பது சாத்­தி­யமே இல்­லாத ஒன்­றாகும். வஹா­பிடம் எது­வுமே இல்­லாத நிலை­யி­லேயே அவர் மொத்தப் பணத்­தையும் செலுத்­து­மாறு பணிக்­கப்பட்டார்.

“எனது பாஸ்போர்ட் என்­னிடம் இருந்த போது நான் நினைத்­தி­ருந்தால் நாட்டை விட்டு தப்­பி­யோ­டி­யி­ருக்­கலாம். ஆனால் நான் அவ்­வாறு செய்­ய­வில்லை. பணம் காணாமல் போன விடயம் கம்­ப­னிக்குத் தெரி­யாது. நான் தான் அவர்­க­ளிடம் நடந்த சம்­ப­வத்தைக் கூறினேன். எனது கவ­ன­யீ­னத்­தால்தான் பணம் தொலைந்து போனது. நான் திரு­ட­வில்லை. அதனால் ஓடி ஒளிய வேண்­டிய அவ­சியம் எனக்­கில்லை” என தனது நேர்­மையை நிரூ­பிக்­கிறார் வஹாப்.

வஹாப் வேலையை விட்டு வில­கும்­போது அவர் இரண்டு அறைகள் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்தார். பின்னர் தொழில் இல்­லா­ததால் அதற்­கான வாட­கையை உரிய முறையில் செலுத்­தா­ததால் குறித்த வீட்­டு­ரி­மை­யாளர் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். ஒரு தொழி­லாளர் என்­பதன் அடிப்­ப­டையில் பல்­வேறு இடங்­களில் அவர் கடன் பெற்றும் உள்ளார். வங்­கி­க­ளிலும் கட­னட்டை முறை உட்­பட பல முறை­களில் இவர் கடன் பெற்­றி­ருந்த வேளையில் திடீ­ரென இப்­படி நடந்­ததால் அனை­வ­ருக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல வேண்­டி­ய­நிலை ஏற்­பட்­டது. காசோ­லைகள் திரும்­பி­யமை, நிதி மோசடி, வீட்டு வாடகை செலுத்­தாமை போன்ற பல முறைப்­பா­டு­க­ளினால் வஹாப் கைது செய்­யப்­பட்டு நீதின்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

2017 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்ட வஹாப் அந்த வரு­டத்தின் ரமழான் மாதம் முழு­வ­தையும் சிறையிலேயே கழித்தார். 7 மாதங்­களின் பின்னர் விடு­தலை செய்­யப்­பட்ட போதும் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக வேண்டி மீண்டும் அவர் கைது செய்­யப்­பட்டார். இதனால் 2018 ஆம் ஆண்டு ரமழான் மாதத்­தையும் சிறையில் கழிக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை அவ­ருக்கு ஏற்­பட்­டது. கடந்த 4 வரு­டங்­களும் வஹா­புக்கு நர­க­வே­த­னை­யைத்தான் கொடுத்­தது. தற்­போது வசிப்­ப­தற்கு இடம் இல்­லாத நிலையில் தனது நண்பர் ஒரு­வரின் காரினை வீடாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார். தனது நாட்­டுக்கு விடு­மு­றையில் சென்­றி­ருக்கும் நண்­பரின் கார் தான் இப்­போது இவ­ரு­டைய வீடு.

“தொழிலும் இல்­லாமல் வீடும் இல்­லாமல் எனது நண்­பனின் வாக­னத்தை 3 மாத­மாக வீடாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறேன். இந்த மூன்று மாதமும் உண­வ­கங்­களில் இருந்து சுடு­தண்­ணீரைப் பெற்று நூடில்ஸ் செய்து சாப்­பிட்டு வரு­கின்றேன். பள்­ளி­வா­சலில் உள்ள வெறும் தண்­ணீரால் மட்டும் ஆடை­களைக் கழு­விக்­கொள்­கிறேன்.. அதே பள்­ளி­வா­சலில் உள்ள கழிப்­ப­றை­யைத்தான் பயன்­ப­டுத்­து­கிறேன். என்னைக் கடந்து சென்ற மூன்று மாதமும் இப்­ப­டித்தான் நகர்ந்­தது.”

தனக்கு ஏற்­பட்­டுள்ள இந்த நிர்க்­க­தி­யான நிலை­மை­யினை தன்னை வேலையை விட்டு விலக்­கிய கம்­ப­னியில் சென்று வஹாப் முறை­யிட்டார். ஆனால் அதற்கு எந்­த­வி­த­மான பலனும் கிடைக்­க­வில்லை. “உனக்­கான வழியை நீதான் தேட வேண்டும். எங்­க­ளுக்குப் பணம்தான் தேவை” என்று சொல்லி அனுப்­பி­விட்­டார்கள்.

“எனக்­கான வழி என்று இப்­போது எதுவும் இல்லை. நான் தற்­கொ­லைதான் செய்து கொள்ள வேண்டும்” என விரக்தியுடன் கூறுகிறார் வஹாப்.

இந்த விட­யத்தில் தனக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கருதி வஹாப் தொழி­லாளர் அலு­வ­ல­கத்தில் முறைப்­பாடு செய்­வ­தற்குச் சென்­ற­போது அதற்­கான நேரம் கடந்து விட்­டது என்றே பதில் வந்­தது. ஏதேனும் ஒரு நிறு­வனம் தொடர்­பாகக் குறித்த நிறு­வ­னத்தின் தொழிலாளி ஒருவர் முறைப்பாடு செய்­ய­வேண்­டு­மாக இருந்தால் அந்த நிறு­வ­னத்தில் இருந்து வில­கிய ஒரு­வ­ரு­டத்­துக்குள் முறைப்­பாடு செய்ய வேண்டும். வஹாப் இந்தச் சட்டம் தொடர்பில் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­கிறார்.

“நான் கடந்த 7 வரு­டங்­க­ளாக எனது பெற்­றோரைப் பார்க்­க­வில்லை. அவர்­க­ளுக்கு வய­தா­கி­றது. போன வருடம் எனது தாய் ஒரு கார் விபத்தில் சிக்­கினார். கடந்த ஏப்ரல் மாதம் எனது தந்­தைக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது. ஆனால் அவர்­களைச் சென்று பார்க்க முடி­யா­துள்­ளது.

”எனது தந்தை அவ­ருக்கு எப்­போதும் 4 மகன்கள் இருக்க வேண்டும் என்­றுதான் எண்­ணுவார். அவ­ருக்கு ஏதா­வது நடந்தால் அவ­ரு­டைய மகன்கள் 4 பேரும் ஜனா­ஸாவை மைய­வா­டிக்கு தூக்கிச் செல்ல வேண்டும் என எண்­ணுவார். அவ­ருக்கு ஏதா­வது நடந்தால் யாரால் எனது தந்­தையை திருப்பித் தர முடியும். யாருக்கு அந்த நினை­வு­களை மீட்­டுத்­தர முடியும்”

வஹாப் ஒரு சிறந்த முகா­மை­யாளர். அதற்கு அவர் பெறற விருது சாட்சி. எந்­த­வி­த­மான கஷ்­டங்­களும் இன்றி வாழ்ந்தவர். ஒரு கட்டத்தில் வீதிக்கு வந்து விட்டார். அவர் தனது சொந்த ஊரான ஹைதராபாத் நோக்கிச் செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். வஹாபுடைய தந்தை மொஹமட் பின் ஒஸ்மான் ஒபைருடைய உடல் நலன் நாளுக்குநாள் குன்றி வருகின்றது. “எனது மகனைக் காணுவதே எனது ஒரே ஆசை” என்கிறார் ஒபைர்.

“எல்லோரும் அவரவருடைய வாழ்க்கையில் ஏதாவதொன்றைத் தொலைத்திருப்பார்கள். அது ஒவ்வொருவருக்கும் தவறுதலாக நடப்பதுதான். எனக்கும் அதுதான் நடந்துள்ளது. நான் எனது தவறை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். நான் மீண்டும் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்கிறார் வஹாப்.

வஹாபின் இந்தக் கதையை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘கல்ப் நியூஸ்’ பத்திரிகை வெளியிட்டு அவருக்கு முடியுமானோரை பண உதவி செய்யுமாறு கோரியிருக்கிறது. வஹாப் இந்த நெருக்கடி யிலிருந்து மீள நாமும் பிரார்த்திப்போம்.

எம்.ஏ.எம். அஹ்ஸன்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.