அரசாங்கம் உத்தரவாதமளித்தால் உணவு நிலையத்தை தொடரலாம்
'ஜனபோஷ பவுண்டேஷன்' முகாமையாளர் சஹாப்தீன்
அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்தே எமது இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு எதிராகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. எங்களது செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இருந்தால் அரசாங்கம் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ‘ஜனபோஷ’ பவுண்டேசனின் பொது முகாமையாளர் எம்.ஏ.சஹாப்தீன் தெரிவித்தார்.
ஜனபோஷ’ பவுண்டேசனினால் மூன்று பிரதான வைத்தியசாலைகளை அண்மித்து நடாத்தப்பட்டு வந்த இலவச உணவு வழங்கும் நிலையங்களில் கருத்தடை மாத்திரைகளைக் கலந்து கொடுப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டமை மற்றும் அரசியல்வாதி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டமை ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இந் நிலையில் இத் திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்பத்தில் இந்த இடத்தில் இடம்பெறும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தும்படி பேஸ்புக் மூலம் எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாங்கள் உணவில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். நான் அவர்களுடைய பெயர்களைக் கூற விரும்பவில்லை.
பின்னர் வைத்தியசாலைக்கு வரும் மக்களுக்கு உணவுக்கான அனுமதிச் சீட்டுக்களை வைத்தியசாலை ஊழியர்கள் விநியோகிப்பதை சிலர் தடுத்தார்கள். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பின்னர்தான் மஹரகம அபேக்சா வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள முஸ்லிம் கடைகளை சோதனை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். மக்கள் மத்தியில் மீண்டும் இந்த கருத்தடை மாத்திரை தொடர்பான பீதி பற்றி பேசத்தொடங்கினார்கள். என்னால் பெயர் குறிப்பிட முடியாத சில குழுக்கள் எங்களது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். மக்களுக்கு உணவு வழங்குவதைத் தவிர வேறு ஏதாவது வகையில் உதவி செய்து கொள்ளுமாறு அவர்கள் கோரினார்கள்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எங்களிடம் விசாரணை செய்த போது எங்கிருந்து இந்த வேலைத்திட்டத்திற்கான நிதியைப் பெறுகிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் எங்களுடைய நன்கொடையாளர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கைகளை காட்டினோம். வியாபாரப் பதிவு தொடர்பான விபரங்கள் , உணவு தயாரிப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் சான்றிதழ்கள் என்பவற்றைக் காட்டினோம். எங்களிடம் 40 இற்கும் அதிகமான ஊழியர்கள் கடமை புரிகிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அல்லர். எல்லா சமயத்தைச் சேர்ந்தவர்களும் எங்களுடன் கடமை புரிகிறார்கள்.
உணவு தயார் செய்த பின்னர் முதல் ஆளாக அதில் உப்பு மற்றும் உறைப்பு என்பன சரியாக இருக்கின்றதா என்று சுவை பார்ப்பது நான்தான். பிறகு இங்கு பணி புரியும் நாங்கள் அனைவரும் அதே உணவைத்தான் சாப்பிடுவோம். எங்களிடம் கூறப்பட்ட காரணங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை. நாங்கள் எங்களது செயற்பாடுகளை தொடர்வதாக இருந்தால் அரசாங்கம் எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும்.
அடுத்தவர்களுடைய பசியைப் பற்றி எனக்குத் தெரியும். ஏன் என்றால் எனது சிறு வயதில் நான் அதை உணர்ந்திருக்கிறேன். நாங்கள் வழங்கும் உணவினை சாப்பிட்டு விட்டு திருப்தி அடையும் மக்களைப் பார்க்கும் போது வரும் சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. ஆனால் இப்போது எங்களது செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டன. எங்களது உழியர்களுடன் நாங்கள் இனி என்ன செய்யப்போகின்றோம் என்று தெரியவில்லை. என்றார்.
vidivelli