அரபுக் கல்லூரி ஆலோசனை சபையில் சிங்களவர்களையும் இணைக்க வேண்டும்
பஸ்யால அரபுக்கல்லூரியில் நுழைந்து பிக்குகள் கோரிக்கை
பஸ்யால – எல்லரமுல்லயில் இயங்கிவரும் அரபுக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் திடீரென பிரவேசித்த பெளத்த மதகுருமாரின் தலைமையிலான குழுவினர், அரபுக் கல்லூரி அப்பிரதேசத்தின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை இல்லாமல் செய்துள்ளதாகத் தெரிவித்ததுடன் அரபுக்கல்லூரிக்கென ஒரு ஆலோசனை சபை அமைக்கப்பட வேண்டுமெனவும் அக்குழுவில் சிங்களவர்களும் இடம்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
அரபுக்கல்லூரியில் ஏன் அரபு மொழி மாத்திரம் போதிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கில மொழிகள் ஏன் போதிக்கப்படுவதில்லை. அரபு மொழி மாத்திரம் போதிக்கப்பட்டு அரபு கலாசாரம் பரப்பப்படுகிறது என்றும் முறையிட்டனர்.
பஸ்யால – எல்லரமுல்லயில் இயங்கிவரும் சபீலுர் ரசாத் அரபுக்கல்லூரிக்கே இரண்டு பெளத்த குருமார்கள் மற்றும் சுமார் 20 பிரதேசவாசிகள் அடங்கிய குழு விஜயம் செய்து அரபுக் கல்லூரி நிர்வாகத்தை கேள்விக்குட்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பில் எல்லரமுல்ல சபீலுர் ரசாத் அரபுக்கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம்.சுஹைப் (தீனி) யைத் தொடர்புகொண்டு வினவியபோது அவர் விடிவெள்ளிக்கு இவ்வாறு தெரிவித்தார்.
“செவ்வாய்க்கிழமை பஸ்யால, கலல்பிட்டிய தாதுகன்த பன்சலையைச் சேர்ந்த தேரர்களும் அப்பிரதேச மக்கள் சிலரும் அரபுக்கல்லூரிக்கு வருகைதந்தனர்.
அரபுக்கல்லூரியில் என்ன போதிக்கப்படுகிறது என்பது தொடர்பில் தாம் அறிந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்கள். ஏன் அரபு மொழி மாத்திரம் போதிக்கப்படுகிறது என்று கேட்டார்கள். அரபு மொழி போதிக்கப்பட்டு அரபு கலாசாரம் பரப்பப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள். கல்லூரியின் பதிவுச் சான்றிதழையும் வேண்டினார்கள்.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமே சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றார்கள். பிற மாவட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றார்கள். எமது கல்லூரியில் கல்முனை, காத்தான்குடி, குருநாகல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயிலுகிறார்கள்.
பிரதேசத்தில் நாம் ஒற்றுமையாக வாழ்வதற்கு கல்லூரிக்கென்று ஆலோசனை சபையொன்று நிறுவப்பட வேண்டும். அச்சபையில் சிங்களவர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்றார்கள்.
அரபுப்பாடசாலை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும், அச்சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு மீண்டும் வருகை தருவதாக அவர்கள் கூறிச் சென்றார்கள்.
இந்த அரபுக்கல்லூரி 1993 ஆம் ஆண்டு திஹாரியில் ஆரம்பிக்கப்பட்டதாகும். பின்பு 2008 ஆம் ஆண்டே திஹாரியிலிருந்து எல்லரமுல்லக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கல்லூரியில் நாட்டின் பல பிரதேசங்களையும் சேர்ந்த 67 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இது அரபுக்கல்லூரிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். ”
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவிக்கையில், “சம்பவம் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. முஸ்லிம்களின் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு பொறுப்பாக பிரதமரினால் நியமிக்கப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் மர்வின் விக்கிரம சிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் கருத்து தெரிவிக்கையில், ‘‘குறிப்பிட்ட அரபுக்கல்லூரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு திஹாரியிலிருந்து எல்லரமுல்லக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றம் தொடர்பான ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார்.”
vidivelli