பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்கின்றன
தடுப்புக்காவலில் 161 பேர் ; 167 பேர் சிறையில் ; 99 பேர் சந்தேகத்தில் கைது என்கிறார் பிரதமர்
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புட்ட 161 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 167 பேர் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றனர். 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரிடம் கேள்விகேட்கும் நேரத்தில், உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் அதன் பிறகு குருநாகல், குளியாப்பிட்டியில் அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைதான 161 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு 167 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர். தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இவர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் குளியாப்பிட்டி, ஹெட்டிபொல தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 39 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவற்றுக்கு உதவி வழங்கியோர் தொடர்பாக விசாரணை தொடர்ந்து இடம்பெறுகிறது. தவறு செய்தோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.
மேலும் தாக்குதலுக்கு இலக்கான மதஸ்தலங்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கிறிஸ்தவ மதஸ்தலங்கள், வியாபார நிலையங்கள், வீடுகள் என்பவற்றுக்கு நஷ்டஈடு வழங்க மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மதஸ்தலங்களுக்கு ஆரம்ப கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் வியாபார நிலையங்களுக்கும் நஷ்டஈடு வழங்க முஸ்லிம் விவகார அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருக்கின்றோம்.
இதன்போது மரிக்கார் எம்.பி. திகன தாக்குதல் தொடர்பிலும் மதிப்பீடுகள் செய்யப்பட்டாலும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டபோது, அதற்கு பிரதமர் பதிலளிக்கையில், திகனவில் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரச்சினை இருந்தால் அடுத்த கூட்டம் இடம்பெறும்போது உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அதில் வந்து தெரிவிக்கலாம் என்றார்.
ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli