முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஜனாதிபதியின் சில உறுதிமொழிகளுடன் நிறைவு பெற்றிருக்கிறது. இச்சந்திப்பு திங்கட்கிழமை இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றிருக்கிறது.
ஜனாதிபதியைச் சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாதத்துடன் தொடர்புபடாத நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிர்ப்பு வெளியிட்டார்கள். முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிரபராதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தார்கள்.
அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் கண்டியில் பொது பலசேனா ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் ஞானசார தேரர் ஆற்றிய உரை முஸ்லிம் சமூகத்தை நிந்தித்துள்ளது. அரபு எழுத்துக்கள், குர்ஆன் பிரதிகளை தம்வசம் வைத்திருந்த அப்பாவி முஸ்லிம்கள் இந்த அவசரகால சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இச் சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்கள்.
மேலும் உலமா சபை மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதத்துடன் உலமா சபை தொடர்புள்ளதாக ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளதுடன் அவர்களை நிந்தனையும் செய்துள்ளார் என்றும் ஜனாதிபதியை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
“நீங்களே பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரரை விடுதலை செய்தீர்கள். அதனால் இது விடயத்தில் நீங்களே தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” எனவும் அவர்கள் ஜனாதிபதியை வேண்டியுள்ளார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருடன் மேற்கொண்ட கலந்துரையாடலினை அடுத்தே அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ‘இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து இல்லாது ஒழிக்க முடியும்’ என தான் ஜனாதிபதியிடம் அன்று கூறியதாக ஞானசார தேரர் சிறையிலிருந்து வெளிவந்த பின்பு பல தடவைகள் தெரிவித்திருந்தார். அதனை இப்போது அவர் அரங்கேற்ற முயற்சிப்பதாகவே தெரிகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளார். அவசரகால சட்டம் இனி நீடிக்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதியே ஒரு மாத காலம் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான விசேட அரசாங்க வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டார். அவ்வாறெனில் அவசரகாலச் சட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவேண்டும்.
பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரிக்காத வகையில் கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த டாக்டர் ஷாபி குற்றமற்றவர் என்று அவர் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அத்தோடு பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மௌலவிமார்கள் உட்பட 36 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், இராணுவத்தளபதி ஆகியோருடன் பேசி விடுதலை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் கூறியதாகத் தெரிவித்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உறுதிமொழிகள், பணிப்புரைகள் முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதலைத் தருகின்றன. என்றாலும் ஜனாதிபதியின் உறுதிமொழிகள், பணிப்புரைகள் எப்போது அமுலாக்கத்துக்கு வரப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜனாதிபதியின் உறுதிமொழிகள், பணிப்புரைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம்.பௌசி, பைசர் முஸ்தபா ஆகியோரே ஜனாதிபதியைச் சந்தித்திருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒன்றுபட வேண்டியதும் அவசியமாகும்.
vidivelli