அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் மத்தியசபை பொதுக் கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறியமுடிகிறது. இக்கூட்டத்தில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கிளைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். மத்திய சபைக் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான நிர்வாகிகள் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் சன்மார்க்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த 1924 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயர்ந்த சிவில் அமைப்பாகும். 2000 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் ஜம்இய்யா கூட்டிணைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மாவட்ட, பிரதேசக் கிளைகள் என 145 கிளைகள் உள்ளன. 5500 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் தற்போது ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் இயங்கும் கல்விப்பிரிவு, சமூக சேவைப் பிரிவு மற்றும் பத்வா பிரிவு போன்ற பல்வேறுபட்ட உப பிரிவுகள் மூலம் முஸ்லிம் சமூகம் எண்ணிலடங்காத நன்மைகளை அனுபவித்துள்ளது. ஜம்இய்யாவின் தேசிய அளவிலான சமூக வேலைத்திட்டங்கள் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் உட்பட முஸ்லிமல்லாதவர்களும் பயனடைந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் முயற்சியில் ஜம்இய்யா ஈடுபட்டு வருகின்றது.
மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்திற்கெதிராக மனித உரிமை மீறல், போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டபோது நாட்டின் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனிவா வரை சென்று நாட்டின் அரசாங்கத்துக்கு சார்பாக பேசுவது முதற்கொண்டு இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்களையும் ஜமாஅத்களையும் ஒரே குடையின் கீழ் இணைத்து அவர்களை வழிநடாத்துகின்ற பொறுப்பை ஜம்இய்யா தன்னகத்தே கொண்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கை முஸ்லிம்களை சன்மார்க்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சில இக்கட்டான நிலைகளில் அரசியல் ரீதியாகவும் வழிநடத்தி வந்துள்ளது. நாட்டில் அவ்வப்போது ஏற்படும் அனர்த்தம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின்போது முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்று பாராது களத்தில் நின்று தன்னாலான நிவாரணம் மற்றும் மீள் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. அந்தவகையில் 2005 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது ஜம்இய்யா மேற்கொண்ட நிவாரணப் பணிகள் மெச்சத்தக்கவை.
ஜம்இய்யதுல் உலமா சபை தனக்கு கீழியங்கும் உபபிரிவுகளில் ஒன்றான கல்விப் பிரிவின் மூலமாக தலைநகர் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கல்விப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வந்துள்ளதோடு அதற்கான நடைமுறைத் தீர்வுகளையும் உரிய தரப்புக்களோடு இணைந்து பெற்றுக் கொடுத்துள்ளது. தவிர மாணவ மாணவிகளுக்கான புலமைப் பரிசில்களையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக, இலங்கை ஈஸ்டர்தின குண்டுத் தாக்குதலின் பின்னர் பேரினவாத சக்திகளால் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் சமய, சமூக, பொருளாதார நெருக்கடியின் போது அதற்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதில் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும் பிறமத அரசியல் தலைவர்களுடனும் கூட்டிணைந்து இனங்களுக்கிடையிலான கொதிநிலையை கட்டுப்படுத்துவதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்திரமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாகத் தெரிவை எதிர்நோக்கியுள்ள ஜம்இய்யதுல் உலமாவின் அடுத்த நிர்வாகத்திற்கான தலைமை தேர்வு குறித்து பல்வேறுபட்ட கருத்தாடல்கள் முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் இடம்பெறுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது ஜம்இயாவின் தலைவராக பதவி வகிக்கும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அதன் தலைமைப் பொறுப்பை கடந்த 16 ஆண்டுகளாக பொறுப்பெடுத்து செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இஸ்லாமிய அறிவுப் பின்புலமும் உலகளாவிய முஸ்லிம் உம்மத் பற்றிய தெளிவும் தேசிய முஸ்லிம்கள் பற்றிய புரிதலையையும் கொண்ட அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தியே எதிர்வரும் புதிய நிர்வாக தெரிவிலும் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து அவரது ஆதரவாளர்கள் ஒரு சிலரால் முகநூலில் முன்வைக்கப்படுவதை காணலாம். அதேபோன்று தற்போது ஜம்இய்யாவின் உயர்பீட உறுப்பினர்களாக இருக்கக்கூடிய யூசுப் முப்தி, அப்துல் ஹாலிக் மெளலவி மற்றும் அகார் முஹம்மத் நளீமி போன்றவர்களை மையப்படுத்தி இவர்களில் ஒருவர் புதிய நிர்வாகத் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தாடல்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஓர் உயர் சிவில் அமைப்பு என்ற வகையில் புதிய நிர்வாகத் தெரிவை எதிர்நோக்கியுள்ள ஜம்இய்யதுல் உலமா சபை அதன் நிர்வாகக் கட்டமைப்பில் சில திருத்தங்களையும் மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டுமென்று முஸ்லிம் சமூகம் சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓர் உயர் சிவில் அமைப்பு என்ற வகையில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைப் பொறுப்பானது ஒரே நபரிடம் பல ஆண்டுகளாக இருந்து வருவது அதன் கட்டமைப்புக்குள் ஒருவரின் அதிகாரமே மேலும் தலைதூக்குவதற்கும் நிர்வாக கட்டமைப்பில் தொய்வான நிலை உருப்பெறுவதற்கும் வழி ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதேபோன்று புதிய மாற்றங்களும் சிந்தனைகளும் ஏற்பட தடைக்கல்லாக அமைவதோடு புதிய வேலைத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆகவே, இம்முறையும் வழமைபோன்று ஜம்இய்யாவின் தலைமைப் பொறுப்பு அதன் முன்னைய தலைமையே ஏற்காமல் புதியதொரு தலைமைக்கு அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது அநேகமானவர்களின் அவாவாக உள்ளது. ஜம்இய்யதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் கல்வி, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட முக்கிய உபபிரிவுகளில் உலமாக்கள் தவிர்ந்த ஏனைய துறைசார்ந்த அறிஞர்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை சமூகம் சார்பில் முன்வைக்கப்படுகிறது.
அந்த வகையில் தீவளாவிய ரீதியிலிருந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆளுமைமிக்க கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த நிபுணர்கள் இதற்காக ஆவன செய்யப்படுவதோடு குறித்த துறைசார்ந்த நிபுணர்களின் அறிவியல் பங்களிப்பு மூலம் தனது செயற்றிட்டங்களை மென்மேலும் வினைத்திறன்மிக்கதாக ஆக்கிக் கொண்டு சமூகத்தை வழிநடாத்துகின்ற பொறுப்பை ஜம்இய்யா ஏற்று நடத்த வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது.
‘தனிமரம் தோப்பாகாது’ என்ற முதுமொழிக்கேற்ப ஜம்இய்யதுல் உலமா சபை இலங்கை முஸ்லிம் சமூகத்தை தேசிய ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் தன்னால் சுமக்க முடியாத சுமையை சுமந்துள்ள நிலையில் இத்தகைய துறைசார் நிபுணர்களின் உள்ளீர்ப்பானது உலமா சபையின் பணிகளை மென்மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றி அமைக்க பங்களிப்பு நல்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஜம்இய்யதுல் உலமாவை பொறுத்தமட்டில் அதன் நிர்வாக மற்றும் அதன் கீழியங்கும் உபபிரிவுக் கட்டமைப்பானது குறித்த ஓர் இயக்கத்தை மாத்திரம் சேர்ந்த உலமாக்களின் அதிகார எல்லைக்குள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் சில வேளைகளில் தேசியரீதியில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஜம்இய்யதுல் உலமாவின் பொறுப்புக்கு சவாலாக அமையும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதற்கு கடந்த காலங்களில் சில கசப்பான உதாரணங்களும் உண்டு. ஆகவே இது குறித்து ஜம்இய்யா முற்போக்காக செயலாற்றவேண்டிய அவசியம் உள்ளது.
இஸ்லாமிய சட்டவியல் துறையைப் பொறுத்தமட்டில் இஸ்லாமிய மரபில் நான்கு மிக முக்கிய இமாம்களின் சிந்தனைப் பள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் ஜம்இய்யதுல் உலமா ஒரு முகாந்திரத்தில் மாத்திரம் சுருங்கி கொண்டு தனது சமய வழிகாட்டல்களை வழங்குவதானது ஜம்இய்யா ஏற்றிருக்கும் தேசிய பாத்திரத்திற்கு ஒரு சவாலாக மாறிவிடுவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. அந்தவகையில் ஜம்இய்யா இத்துறை சார்ந்த தனது ஒற்றை நிலைப்பாடு குறித்து மீள்வாசிப்பு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஒரு நிறுவனரீதியான செயற்பாட்டின் போது அதன் சீரான கட்டமைப்புக்கு நிதி மூலதன செயற்பாடானது இன்றியமையாததாகும். அந்த வகையில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிதி மூல செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவது அவசியமாகும். ஜம்இய்யதுல் உலமாவின் வருமான செலவு விபரங்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மை வாய்ந்த அறிக்கைகள் முன்வைக்கப்படுவது கட்டாயமாகும். அதன் மூலம் பொதுமக்கள் ஜம்இய்யாவின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஜம்இய்யதுல் உலமா சபையின் நிதி செயற்பாடுகள் தொடர்பில் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஹலால் சான்றிதழ் வழங்கும் ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் மூலமாக பெறப்பட்ட நிதி வருமானங்கள் தொடர்பில் பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து ஜம்இய்யதுல் உலமா ஆராய வேண்டும்.
இலங்கை ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு புதியதொரு முகத்தோடு இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக விஸ்வரூபம் எடுத்திருக்கும் சிங்களப் பேரினவாதத்தின் பார்வை ஜம்இய்யதுல் உலமா சபையின் பால் திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேபோன்று ஜம்இய்யதுல் உலமா சபை மீது அடிப்படைவாத முத்திரை குத்தப்படுகிறது. அதனை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலமா சபையின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் செயற்பட்டுவரும் ஸூபி, தரீக்கா முகாம்களை பொறுத்தமட்டில் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையின் கீழல்லாது சுயேச்சையாக செயற்பட்டுவருகின்றன. அந்தவகையில் இலங்கையில் இயங்கிவரும் சூபி, தரீக்காவாதிகளை இந்நாட்டின் மிதவாத சம்பிரதாய முஸ்லிம்களாகக் கருதும் சிங்களப் பேரினவாத சக்திகள் அவர்களல்லாத ஏனைய முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாகவும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவும் குற்றம் சாட்டுகிறது.
இதற்குப் பின்னால் இயக்க ஜமாஅத் சார்ந்த காட்டிக் கொடுப்புகள் இருப்பதாக அறிய முடிகிறது. அண்மையில் சிங்கள பெளத்த அமைப்பொன்றின் மூலம் கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான மாநாடொன்றில் இதுகுறித்து பகிரங்கமாகவே அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சம்பிரதாய முஸ்லிம்களும் எம்மைப் போன்றவர்களே. நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் அவர்கள் அவர்களின் பெரியார்களது அடக்கஸ்தலங்களை வணங்குகிறார்கள் என்றடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாக கட்டமைப்பை இயக்க ஜமாஅத் வேறுபாடுகளுக்கப்பால் பலப்படுத்தவேண்டிய தேவை வெகுவாக உணரப்பட்டுள்ளது.
vidivelli