நாட்டில் இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்களில் போதிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய கல்வியை கண்காணிப்பதற்காக சபையொன்றினை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இஸ்லாமிய கல்வி, கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் இதனைக் கண்காணிப்பதற்காக சபையொன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் அச்சபையில் உலமாக்கள், கல்வியியலாளர்கள் மற்றும் இஸ்லாமிய புத்திஜீவிகள் அடங்கியிருக்க வேண்டுமெனவும் மற்றும் பல விடயங்களையும் உள்ளடக்கி முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் சட்ட வரைபொன்றினை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார்.
இந்த சட்ட வரைபுக்குள் உள்ளடங்க வேண்டிய சில விடயங்களை ஜனாதிபதியும் சில அமைச்சர்களும் முன்வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை கூடிய அமைச்சரவையில் இஸ்லாமிய கல்வியை கண்காணிப்பதற்கு சபையொன்றினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையும் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறிப்பிட்ட கண்காணிப்பு சபையில் கல்வி அமைச்சின் செயலாளர், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் ஆகிய மூவருடன் இஸ்லாமிய கல்வியுடன் தொடர்புபட்ட அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரபுக் கல்லூரிகள், அரபு மத்ரஸாக்களுக்கான தனியான சட்ட மூலம் ஒன்றினைத் தயாரித்துக் கொள்வதற்கான சட்ட வரைபொன்றினை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கடந்த மே மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்தார். குறிப்பிட்ட சட்ட வரைபு சட்டமா அதிபர் மற்றும் அதிகாரிகளின் மீளாய்வினைப் பெற்றுக் கொண்ட பின்பு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் 1669 குர்ஆன் மத்ரஸாக்களும் 317 அரபுக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
vidivelli