தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது. இந்நாட்களில் நடந்து கொண்டிருப்பதோ அதுதான். டாக்டர் ஷாபி விவகாரத்தில் நடந்துவருவதும் இதுவேதான்.மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக டாக்டர் ஒருவர் சத்திரசிகிச்சைகள் செய்திருப்பதாகப் பரப்பப்படும் கட்டுக்கதையினால்தான் இன்றைய குழப்பநிலை உருவாகியியுள்ளது.
தேசியவாதப் பத்திரிகை எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஓர் இனவாதப் பத்திரிகையின் வாயிலாகத்தான் இந்தக் கட்டுக்கதை இட்டுக்கட்டப்பட்டுள்ளது. விஞ்ஞானம் படித்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் – முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளைப் பின்பற்றிவரும் ஒருவரின் மூலமாகவும் இக்கட்டுக்கதை உறுதிப்படுத்தப்பட்டது. அதை மேலும் மெய்ப்பிக்கும் கைங்கரியத்தைப் பொலிஸ் உயரதிகாரி ஒருவரும் செய்துள்ளார். இப்போது மகாநாயக்க தேரர் ஒருவரும் தனது அறியாமையின் தரத்தை அப்பட்டமாக வெளிக்காட்டிக்கொண்டு அவரும் தன்பங்குக்கு இக்கதையைப் பூதாகரமாக்கி விட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் புத்திஜீவிகள், சிந்திக்கக் கூடியவர்கள் எல்லோருமே பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராகவே குரல்கொடுத்துக் கொண்டிருந்தனர். அதேவேளை, அவர்கள் எல்லோரும் தேசியவாதிகள் எனச் சொல்லிக் கொள்ளும் இனவாத அனுமார்களை விட்டொதுங்கி, எந்த இனத்திலிருந்தும், எந்தச் சமூகத்திலிருந்தும் எழக்கூடிய எல்லாவிதமான தீவிரவாதங்களுக்கும் எதிராகவே அவர்கள் பரந்த அடிப்படையில் எதிர்த்தெழுந்து நின்றனர்.
‘தீவிரவாதிகள்’ என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானதோர் அடைமொழி அல்லவென்றும் தீவிரவாதத்தைக் கைக்கொள்ளும் எச்சமூகத்துக்கும் அது பொருந்துமென்றுமே அவர்கள் கருதி வந்தனர்.
மஹிந்தவின் ஆட்சி நிலவியபோது சிங்கள பெளத்த தீவிரவாதத்துக்குத் துணைபோகும் போக்குக் காணப்பட்டதற்கு எதிராக நாட்டிலே ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும் உண்மையான தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பவும் எல்லாவிதமான தீவிரவாதத்துக்கும் எதிராகவுமே இவர்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆயினும் இன்றைய அரசின் வங்குரோத்து நிலையாலும் முதுகெலும்பற்ற போக்காலும் நாடு மீண்டும் சிங்கள பெளத்த தீவிரவாதத்தை நோக்கி நகர்ந்து செல்வதோடு அதற்கு எதிர்வினையாக ஏனைய சமூகங்களிலும் தீவிரவாதம் தலையெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலோடு நியாயத்தை நேசிக்கும் புத்திஜீவிகள் அனைவரதும் கோரிக்கையாக இருந்தது தீவிரவாதிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒடுக்கப்பட வேண்டுமென்பதே ஆகும். ஆயினும் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் – பெளத்தர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டிருக்கும் இனவாத சக்திகளும் அதிகாரப்பசி கொண்டலையும் அரசியல்வாதிகளும் தத்தமது போலி வேஷங்களைக் களைந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்வரை விடப்பட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அதற்குத் துணையாக அமைந்திருப்பது பெளத்த தர்மத்துக்கு எதிராக செயற்படும் ஒருசில பெளத்த துறவிகளின் வேலைத்திட்டங்களாகும். அதனூடாக நாடு முழுவதும் முஸ்லிம் விரோத வன்முறைப் போக்கொன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதும் அத்துரலியே ரதன தேரர் போன்ற அரசியல் அனாதைகள் தமது சுயலாப வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று நாட்டின் எதிர்காலத்தையே அழிவுக்குள் தள்ளிவிடும் ஆபத்துநிலையும் ஏற்பட்டு வருகிறது.
இத்தகைய எல்லாவிதமான குரோதத்தனங்களுக்கும் பலியாகி இருப்பது டாக்டர் ஷாபி ஆவார். அவர் தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் குறித்தும் நியாயமான மக்களின் கோரிக்கையாக இருந்தது – உரிய விதத்தில் விசாரணைகள் மேற்கொண்டு உண்மையான விடயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டுமென்பதே. இது தொடர்பில் பொதுவாக மருத்துவர்கள் சமூகம் தாமாக முன்வந்து பொதுவெளியில் உண்மையான நிலைமைகளைப் பேசியிருக்க வேண்டும். ஆயினும் ஓரிரு துறைசார் மருத்துவர்கள் தவிர்ந்த அநேக மருத்துவர்கள் மெளனமாக இருந்துவிட்டதோடு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கமும்கூடத் தனது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இவ்விடயத்தில் தமது பொறுப்பைச் செய்ய முன்வரவில்லை.
எது எப்படியோ தற்போது நியாயமான எல்லோரும் நினைத்திருந்தபடியே, டாக்டர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இனவாதிகளால் புனையப்பட்டவை, போலியானவை எனத் தெளிவாகிவரும் ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்நிலை டாக்டர் ஷாபிக்கு மட்டுமன்றி நியாயத்தை –- நாட்டின் அபிமானத்தை நேசிக்கும் எல்லோருக்குமே நம்பிக்கையளிக்கும் ஒரு விடயமாக உள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் உண்மைகளைப் பொதுவெளியில் முன்வைக்க முன்வந்திருப்பதும், அவ்விடயங்களைத் தெளிவாக முன்வைத்திருப்பதும் நிலவிவரும் குழப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் நாட்டில் ஏற்படவிருந்த ஒரு பேரழிவைத் தடுத்து நிறுத்தவும் வழிசமைத்துள்ளது.
எனினும், முஸ்லிம் சமூகத்தைப் புறக்கணித்து, பொதுவெளியிலிருந்து முஸ்லிம்களை அகற்றிவிடுவதையே தமது ஒரே இலக்காகக் கொண்டு செயற்படும் தீவிரவாதிகளோ தமக்கு முன்னால் விரிந்தெழுந்து நிற்கும் உண்மைகளைக் கண்டுகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை. அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் உண்மைகளல்ல, மாறாக அவர்கள் உண்மைகளெனப் புனைந்து பரப்பிவிட்டிருக்கும் பொய்கள் எப்படியேனும் உண்மைப்பட வேண்டுமென்பது மட்டுமே. எனவேதான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளையும் வெறுத்தொதுக்கி வருகின்றனர்.
அவர்களின் ஒரே இலக்கு, ‘டாக்டர் ஷாபி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருத்தடைச் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்’ என ஏற்றுக்கொள்ளும் ஒரு ‘சூழ்நிலையை’ எப்படியாவது ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்பது மட்டுமே. அதனடிப்படையில் நீதியைவேண்டி ஷாபி மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் வழக்கு நடவடிக்கைகளைக்கூட – ஷாபியின் தலையை மட்டுமே வேண்டி நிற்கும் – இவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.
தீர்க்கமானதொரு தருணத்தை நாம் கடந்துகொண்டிருக்கிறோம். நாட்டின் எதிர்காலத்தை இனவாதிகளின் கைகளுக்கா அல்லது மானுடத்தை நேசிப்போர் கைகளுக்கா நாம் தாரைவார்க்கப் போகிறோமென்பதைக் கவனமாகச் சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டிய ஒரு தருணம் இது. துரதிஷ்டவசமாக, தமது அரசியல் சுயலாபங்களுக்காக இக்குழப்ப நிலையைப் பயன்படுத்தி வாக்குகளைக் கொள்ளையடிக்க அரசியல்வாதிகள் முழுமூச்சோடு செயற்பட்டு வரும் – தேர்தல்கள் வந்துகொண்டுருக்கும் ஓர் இக்கட்டான காலகட்டத்தில்தான் நீதியை நேசிக்கும் நல்லவர்கள் கடினமாகப் போராட வேண்டியுள்ளது.
ஆளும் தரப்பைப் போலவே எதிர்க்கட்சிகளும் ஏனைய அரசியல் சக்திகளும் மேடைகளில் எப்படி, எவற்றைப் பேசிக்கொண்டாலும் நாட்டில் உருவாகியிருக்கும் குழப்பநிலையைத் தணிப்பதற்கான உண்மையான, உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவே இல்லை. மாறாக அவர்கள், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரிவினைகளுக்கான கோடுகளை மேலும் மேலும் அழுத்திக் கீறிவிடுவதிலேயே கரிசனைகாட்டி வருகின்றனர். சமயத் தலைவர்களும் இதையே செய்து வருகின்றனர் என்பது இப்போது மிகத் தெளிவாகி விட்டுள்ளது. இத்தகையதொரு சூழ்நிலையில், ஆரம்பத்தில் சிறந்ததொரு தேசிய ஆளுமையாக வெளிப்பட்டிருந்த பேராயர் ரஞ்சித் ஆண்டகை அவர்களும் அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரதக் களத்திற்கு வருகைதந்து தனது சுயரூபத்தை வெளிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பது நிலவும் சூழ்நிலையின் பேராபத்துக் குறித்த ஏராளமான செய்திகளை நமக்கு மறைமுகமாக உணர்த்தி நிற்கிறது.
இன்றுள்ள சூழ்நிலையில் நாட்டிலுள்ள புத்திஜீவிகள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை பலமாக உணரப்பட்டு வருகிறது. அந்த ஒன்றிணைவுக்கு சகல அரசியல் வேறுபாடுகளையும் புறமொதுக்கிச் செயற்பட வேண்டியுள்ளது. அதேபோல பரந்துபட்ட ஒரு தேசிய ஐக்கியத்தை நாடிநிற்க வேண்டியுள்ளது. இதற்காக மதவாதப் போக்குகளைப் புறந்தள்ள வேண்டியுள்ளது. இது கடும் சிரமமான அர்ப்பணிப்பை வேண்டி நிற்கிறது. அந்த அர்ப்பணிப்பானது குறுகியகால வெற்றியை அல்லாமல் நீடித்து நிலைத்த இலக்கைக் கொண்டிருக்க வேண்டும். இவை தவிர நமக்கு வேறு மாற்றுத் தெரிவுகள் ஏதுமில்லை.
தூங்குவது போல நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராகத் திரண்டெழும் மக்களின் போராட்டத்திலிருந்து அப்பால் ஒதுங்கிச் செல்ல இந்த இக்கட்டான கட்டத்தில் எவருக்கும் உரிமையில்லை! மாற்றரசியலில் ஈடுபட்டிருப்போருக்கும் இதுவே பொருந்தக்கூடியது. இத்தகைய மாற்றரசியல் சக்திகள் தத்தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கான தருணம் வாய்க்கும் வரை, தம்மைப் போன்ற பிற மாற்றுச் சக்திகளிடமிருந்து தம்மைத் தொடர்ந்தும் தனிமைப்படுத்திக் கொண்டே இருப்பார்களெனில், அவர்களுக்கும் ஏனைய ஐ.தே.க., சு.க. மற்றும் மொட்டு அணியினர் போன்ற சராசரி அரசியல் சக்திகளுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லையென மக்களே தீர்மானித்து விடுவார்கள்.
இது மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிசக் கட்சி (Frontline Socialist Party) மற்றும் ஏனைய மாற்றுக் குழுக்களுக்கும் பொருந்தும். நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு செயற்படும் மக்கள் அனைவரினதும் பொதுவான ஒரே எதிர்பார்ப்பு, அனைத்துக்கும் முதலாக – இனவாதத்தை நோக்கி நாடு தள்ளப்பட்டுக் கொண்டுசெல்வதைத் தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதேயாகும். சிங்களத் தீவிரவாதிகளைப் போலவே முஸ்லிம், தமிழ்த் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ஏககாலத்தில் ஒன்றிணைவதன் ஊடாகவும் சிங்கள, தமிம், முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் நடுநிலைச் சிந்தனை கொண்ட மக்களை ஒரே அணியாக ஒன்றுதிரட்டுவதின் ஊடாகவுமே இதைச் செய்ய முடியும்.
அரச பணியாளர்களின் சீருடை விடயத்தைக்கூட மிகப்பெரிய சிக்கலாக்கிக் கொண்டுள்ள ஓர் அரசாங்கமானது, நாட்டின் இதர பிரச்சினைகளைத் தீர்க்குமென நம்புதல் நகைப்புக்கிடமானது. அதைப் போலவே எதிர்க்கட்சியும் நாட்டின் பிரச்சினைகளை நாளையே தீர்த்துவிடுமென்று நினைப்பதும் இதுபோன்ற நகைச்சுவையே ஆகும்.
அனைத்து சந்தர்ப்பவாதிகளையும் அடித்து விரட்டிவிட்டு, மக்களே தமக்குள் ஓரணியில் திரள்வதற்கான தருணமே தற்போது வாய்த்திருக்கிறது! பல்வேறு முன்னணிகளில் இருக்கும் பொதுவான நோக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் அனைவரும் ஒன்றுசேர்வதனூடாகவே இதைச் செய்யமுடியும். அதற்காக அவர்கள் இப்போது பொதுவானதோர் உடன்பாட்டுக்கான உரையாடல்களைத் தொடங்க வேண்டும். இத்தருணத்தில் அவர்கள் இதைச் செய்யத் தவறுவதானது, வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தங்களையும் எடுத்தெறிந்து வீசிவிடுவதாகவே அமையுமென அனைவரும் புரிந்துகொள்வது நல்லது.
நுவன் உதய விக்ரமசிங்ஹ
தமிழில்: சட்டத்தரணி அஜாஸ் முஹம்மத்
நன்றி: ‘ராவய’