ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் தீவிரவாத குழுவொன்று மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம்களின் சகவாழ்வு பாதிப்புக்குள்ளாகி விட்டது. முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைள் பெருமளவில் வீழ்ச்சி கண்டுவிட்டன.
நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் அச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது. அச்சட்டத்தின் கீழ் 2,000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அநேகர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்பாவி முஸ்லிம்கள் சிறு சிறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்.டி. உடாகம பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமாரச்சிக்கு கடிதம் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். அண்மைக்காலமாக இடம்பெற்றுள்ள சட்டவிரோத கைதுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலாசார புரிந்துணர்வின்மை நிச்சயமற்ற தன்மை காரணமாக சில கைதுகள் இடம்பெற்றிருப்பதாகவும் மேலும் சில கைதுகள் பொது மக்கள் வெளிப்படுத்திய சந்தேகத்தின் பேரில் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். உதாரணமாக அணிந்திருந்த ஆடையில் பிரச்சினையை தூண்டும் வகையிலான அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அரபு நூல்களை வைத்திருந்தவர்கள் அப்புத்தகங்களில் என்ன உள்ளடங்கியுள்ளன என உறுதிப்படுத்த முன்பே கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுகள் இடம்பெற்ற பின்பே விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். வெறும் வதந்திகள் அடிப்படையில் கைதுகள் இடம்பெறக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றாலும் ஒரு குழுவினர் செய்த தாக்குதல்களுக்காக முழு முஸ்லிம் சமூகமும் பலிக்கடாவாக்கப்படக்கூடாது. இதற்கு இடமளிக்கவும் முடியாது.
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தன்னிச்சையான கைதுகள் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்களை இலங்கை அதிகாரிகள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் உரிமை கோரியிருந்த நிலையில் அதன் பின்பு இலங்கை முஸ்லிம்கள் வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது அதிகரித்துள்ளது. தாக்குதல்கள் மற்றும் இதர துஷ்பிரயோகங்களை பௌத்த தேசியவாதிகளிடமிருந்து எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வெறுப்புணர்வு பேச்சை பயன்படுத்தல், கலகக்காரர்களின் வன்முறைகளை அலட்சியப்படுத்தல், அங்கீகரித்தல் என்பனவற்றை நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் கோரியுள்ளது.
இலங்கை அரசாங்கம் தனது பிரஜைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரணை செய்தல் போன்ற கடமையைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த குற்றச் செயலுக்காக முஸ்லிம் சமூகத்தை தண்டிக்கக் கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவுக்கான பணிப்பளார் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளமையை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன அரசாங்கத்தின் தன்னிச்சையான கைதுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் விடுத்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மேலும் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
தற்கொலை குண்டுத்தாக்குதல்களையடுத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் சமூகத்தின் பாதுகாப்பு கருதி தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து கொண்டதுடன் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சவால் விட்டனர். முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆதாரம் எதுவும் இல்லை என பதில் பொலிஸ் மா அதிபர் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, ஏனையோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
டாக்டர் ஷாபிக்கு எதிரான கருக்கலைப்பு குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் என்று கூறி ஆதாரமற்ற தன்னிச்சையான கைதுகளை மேற்கொள்ளக் கூடாது. குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டுமே தவிர அப்பாவிகள் கைது செய்யப்படக் கூடாது். தற்போது தடுப்பில் இருக்கும் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
vidivelli