இரண்டாம் கட்டத் தாக்குதல்களுக்கு 11 குண்டுதாரிகள் தயாராகவிருந்தனர்?
விசாரணைகளில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
காத்தான்குடியை தளமாகக் கொண்ட என்.ரி.ஜே என அழைக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பெரும்பாலும் ஸஹ்ரானுடைய குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பின் முக்கிய நபர்களாக ஸஹ்ரானுடைய சகோதரர்களான ஸெய்னி மற்றும் ரிழ்வான் ஆகியோர் செயற்பட்டு வந்துள்ளனர். தேசிய தௌஹீத் ஜமாஅத்தில் இருந்த பெரும்பான்மையானவர்கள் இவர்களின் தலைமையின் கீழே செயற்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற திகன தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மாவனெல்லையைச் சேர்ந்த ஒரு இளைஞர் குழுவினரும் ஸஹ்ரானுடன் இணைந்து கொண்டனர்.
ஸஹ்ரானுடைய ஆசிரியர்களுள் ஒருவரான நௌபர் மௌலவி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் நௌபர் மௌலவிக்கும் ஸஹ்ரானுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்த கருத்து முரண்பாட்டினால் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைமைத்துவம் இரண்டாக பிளவுபட்டது.
இலங்கையின் 9 மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் என்.ரி.ஜே அமைப்பைச் சேர்ந்தவர்களால் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இரண்டாவது தலைவரான நௌபர் மௌலவியின் அபிப்பிராயமாகும். இந்தத் திட்டம் தொடர்பிலேயே ஸஹ்ரானுக்கும் நௌபர் மௌலவிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆயுதப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த எச்.எம்.அஹமட் மில்ஹான், நௌபர் மௌலவியுடன் இணைந்து கொண்டவர் ஆவார். 2018 ஆம் ஆண்டில் வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை மில்ஹான் கொன்றுள்ளதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். பின்னர் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் சவூதிக்குச் சென்றுவிட்ட மில்ஹானை கடந்த ஜூன் 14 ஆம் திகதி சவூதி பொலிஸார் கைது செய்தனர்.
இரண்டாம் கட்ட தாக்குதல்களை மேற்கொள்வதற்காக ஸஹ்ரான் தனது சகோதரன் ரிழ்வானை பொறுப்பாக நியமித்தார். தனது மற்றுமொரு சகோதரனான ஸெய்னி தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு விரிவுரைகளை நடாத்துவதற்காக நியமிக்கப்பட்டார். பாணந்துறை , நீர்கொழும்பு, மல்வானை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் ஸஹ்ரான் மறைந்திருக்க பாதுகாப்பான வீடுகள் இருந்துள்ளன. கொள்ளுப்பிட்டியிலும் ஒரு தொடர்மாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடொன்று பெறப்பட்டுள்ளது. இரண்டாவது தாக்குதலுக்காக வேண்டி வீடுகளை வாங்குதல் மற்றும் வாடகைக்கு பெறுதல் போன்ற பொறுப்புக்கள் மொஹம்மது நியாஸ் மற்றும் கல்முனை சியாம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஏப்ரல் மாதத்தின் முதற்பகுதியில் சாய்ந்தமருது , செந்நெல் கிராமம் , அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் தலா ஒரு வீடும் நிந்தவூரில் 2 வீடுகளுமாக மொத்தம் 5 வீடுகள் கிழக்கில் பாதுகாப்பான முறையில் வாடகைக்கு பெறப்பட்டிருந்தன. சம்மாந்துறை வீடு வெடிபொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது.
கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி சாய்ந்தமருதுவில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டுக்கு ரூபா 40,000 வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. சம்மாந்துறையில் உள்ள செந்நெல் கிராமம் வீட்டுக்கு ரூபா 50,000 ரூபா வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. நிந்தவூரில் உள்ள ஒரு வீட்டுக்கு ரூபா 20,000 வாடகையாக வழங்கப்பட்டுள்ளதுடன் அட்டாளைச்சேனை வீ்ட்டுக்கு ரூபா 15,000 வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் குறித்த வீடுகளுக்கான சராசரி வாடகை ரூபா 3,000 – 5,000 ஆகும். இருந்த போதிலும் வீடுகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வேண்டி கூடிய தொகைப் பணத்தை வாடகையாகச் செலுத்தியுள்ளனர்.
ஏப்ரல் 19 ஆம் திகதி ஸஹ்ரானுடைய சகோதரர்களான ரிழ்வான் மற்றும் ஸெய்னி ஆகியோர் கிரிஉல்ல பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் ஒரு சில பெண்களுடன் வந்து 29,000 ரூபாவுக்கு வெள்ளை ஆடைகளை வாங்கிச் சென்றுள்ளனர். பொலிஸாரின் தகவல்களுக்கமைய இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதலுக்காக பௌத்த வழிபாட்டுத் தலங்களை குறிவைத்தமையே வெள்ளை ஆடைகள் வாங்கியதற்கான இரகசியமாகும். கண்டியிலுள்ள தலதா மாளிகைதான் தாக்குதல்தாரிகளின் பிரதான இலக்கு என சந்தேகிக்கப்படுகிறது. களுவாஞ்சிக்குடியில் உள்ள தேவாலயம் மற்றும் அம்பாறையில் உள்ள சில பள்ளிவாசல்களும் இவர்களுடைய இலக்காக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 11 தற்கொலைதாரிகள் அடுத்த தாக்குதலுக்கு தம்மை தயார் செய்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அரச புலனாய்வுப் பிரிவானது நீர்கொழும்பில் உள்ள பாதுகாப்பு இல்லத்தை முதலில் கண்டுபிடித்தது. அதன் பின்னர் நீண்ட தேடுதலின் விளைவாகவே வெடிபொருள் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்ட சம்மாந்துறை வீட்டினை ஏப்ரல் 26 ஆம் திகதி கண்டுபிடித்தனர்.
பலரது உயிரைப் பாதுகாத்த லொறி சாரதி
ஏப்ரல் 26 ஆம் திகதி பாதுகாப்புப் படையினர் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதில் உள்ள வீடு ஒன்றினைச் சுற்றிவளைத்தனர். குறித்த வீட்டில் இருந்த 6 சிறுவர்கள் உட்பட 16 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள் அனைவரும் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தனர். குறித்த சுற்றிவளைப்பு ஊடகங்கள் மற்றும் புலனாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
என்னவாக இருந்த போதிலும் இரண்டாவது தாக்குதலுக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் வெடிபொருள் உற்பத்திப்பொருட்களை நீர்கொழும்பில் இருந்து கல்முனைக்கு ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட சாரதி பற்றிய தகவல்கள் பெரியளவில் அறிக்கையிடப்படவில்லை.
பாதுகாப்பு காரணங்களினைக் கருத்தில் கொண்டு குறித்த சாரதியின் பெயர் விபரங்களை மாற்றி இந்தக் கட்டுரையில் அவரைப் பற்றி பிரசுரிக்கின்றோம்.
நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை ஆகிய வீடுகளில் ஈஸ்டர் தாக்குதலுக்குத் தேவையான குண்டுகள் தயாரிக்கப்பட்டதன் பின்னர் குண்டுகளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சம்மாந்துறையில் உள்ள வீட்டுக்கு மாற்ற தாக்குதல் குழுவினர் முடிவு செய்தனர். இந்த விடயங்களின் பாரதூரம் தொடர்பில் எதையுமே அறிந்திராத லொறி சாரதி பிரசன்னா ஏப்ரல் 9 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு பொருட்களை ஏற்றிச்செல்ல ஒப்புக்கொண்டார்.
இலங்கையில் இடம்பெறவிருந்த இரண்டாவது குண்டுவெடிப்பினை தடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களை காத்ததன் மூலம் அவர் ஒரு நாயகனாக பார்க்கப்படுகிறார். ஏப்ரல் 9 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து அம்பாறையை நோக்கிச் செல்ல அழைப்பு ஒன்று பிரசன்னாவுக்கு கிடைத்தது. பின்னர் குறித்த இடம் கல்முனைக்கு மாற்றப்பட்டது. கையில் பணம் இல்லாத தருணத்தில் தூரப்பிரதேசம் ஒன்றுக்கு ‘ஹயர்’ கிடைத்ததால் பிரசன்னா மகிழ்ந்தார். பிரசன்னாவை விசாரணை செய்த போது பொலிஸார் அவரிடம் ‘லொறியில் என்ன கொண்டு போனீர்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் தங்கத்தை சுத்திகரிப்பதற்கான பொருட்களை கொண்டு போனதாக தெரிவித்தார். குறித்த பொருட்கள் அனைத்தும் கல்முனையில் இறக்கி வைத்ததன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
“ஏப்ரல் 9 ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டிய தேவாலயத்துக்கு அண்மையில் இரவு 10 மணிக்கு வரும்படி நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஆனால் நான் செல்லும் வழியில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தேன். எனது போனின் பெற்றரி செயலிழந்தது. குறித்த நீர்கொழும்பு வீட்டுக்குச் செல்ல முன்னரே டீசல் தீர்ந்து விட்டது. நான் பெட்ச் ஆகிய டயரில்தான் அன்று லொறியினை ஓட்டினேன். அன்று முழுவதும் சாப்பிடக்கூட பணம் இருக்கவில்லை. நான் நீர்கொழும்பு வீட்டைச் சென்றடையும் போது மணி 10.30 இருக்கும். சாமான்களை லொறிக்கு ஏற்றி முடிக்கும் போது 12.30 இருக்கும். அந்த வீட்டில் இருந்த ஒருவருடன் நான் பயணத்தை தொடங்கினேன். கல்முனையில் ஒருவர் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். அவர் ஸஹ்ரானின் சகோதரன் ரிழ்வான் ஆவார். சாமான்களை லொறியில் இருந்து இறக்கி வைக்கும் வரை தூங்கும்படி அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நான் தூங்க விரும்பவில்லை. அதனால் பொருட்களை இறக்குவதற்கு உதவினேன். வாகனத்துக்குள் பாரம் கூடிய கேன்கள் நிறையவே இருந்தன.
‘ஏன் இந்தக் கேன்கள் இவ்வளவு பாரமாக இருக்கின்றன’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். ‘இதில் தங்க நகைகள் செய்வதற்குப் பயன்படும் சல்பூரிக் அமிலம் இருக்கின்றது’ என்று அவர்கள் கூறினார்கள். எனக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் அவர்கள் நடந்து கொண்டார்கள். என்னோடு இருந்த இன்னொருவர் எங்களது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமான மொழியொன்றில் போனில் யாருக்கோ விவரித்துக் கொண்டே இருந்தார். நாங்கள் இரவு 12.30 மணியளவில் சம்மாந்துறையை அடைந்தோம்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நான் அதிர்ச்சியடைந்தேன். ஏப்ரல் 9 ஆம் திகதி நான் சென்ற சவாரியுடன் தீவிரவாதிகளுக்கு ஏதும் தொடர்பு இருக்குமா என்ற பல கேள்விகள் எனது சிந்தனையில் வந்து போயின. எனது குடும்பத்தாருடன் கலந்துரையாடிய பின்னர் எனக்குத் தெரிந்த வர்த்தகர் ஒருவரின் துணையுடன் நான் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முடிவு செய்தேன். நான் அதை பொலிஸாரிடம் தெரிவித்ததன் மூலம் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை இன்று பாதுகாத்துள்ளேன். ஆனால் அதற்காக எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. நான் வெளியில் செல்ல பயப்படுகிறேன். எனது குடும்பத்தின் பாதுகாப்பினை நினைத்து பயமாக இருக்கின்றது. அரசாங்கம் பொருளாதார ரீதியாக எனக்கு உதவினால் அது பெரிய உதவி. அப்படிச் செய்தால் நான் முன்னர் இருந்ததைப் போல பாதுகாப்பை உணர்வேன்.” என்றார்.
ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நீர்கொழும்பு வீடு தொடர்பாக பிரசன்னா பொலிஸாரிடம் தெரிவிக்கும் போது ஏற்கனவே பொலிஸார் அந்த வீடு தொடர்பான விடயங்களை அறிந்திருந்தனர். பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை பிரசன்னா வழங்கிய மேலதிக தகவல்களுடன் இணைத்து விசாரித்து வருகின்றனர்.
தமிழில் – எம்.ஏ.எம்.அஹ்ஸன்
நன்றி: டெய்லி மிரர்
vidivelli