காத்தான்குடியில் இருபது பேருக்கு ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ள கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் அப்பட்டமான பொய்யொன்றை கூறியுள்ளதாகவும் இதனை தேரர் நிரூபிக்க வேண்டுமெனவும் நகரசபை தவிசாளர் இதன்போது குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் மாலை காத்தான்குடி நகரசபை மண்டபத்தில் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாசபை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் காத்தான்குடி மீது ஓர் அபாண்டமான பொய்யை தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். அவரின் கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம்.
கடந்த 30 வருட கால யுத்தத்துக்கு முன்னரோ அல்லது யுத்தம் நிறைவடைந்த பின்னரோ, தேரர் கூறிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை என்பதை தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம்.
தேரர் குறிப்பிட்டிருப்பது போல வட்டி, விபசாரம் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட அல்லது மார்க்க விரோதமாக செயற்பட்ட எவருக்குமே காத்தான்குடியில் மரண தண்டனை வழங்கப்படவில்லை. இராணுவத்துக்கு காத்தான்குடி முஸ்லிம்கள் உதவி செய்தார்கள் என்ற காரணத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் காத்தான்குடி முஸ்லிம்களை கடத்திக் கொலை செய்ததுடன் பள்ளிவாசலிலும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை படுகொலை செய்தார்கள்.
இலங்கையின் அரசியல் யாப்புக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் மாற்றமாக ஒரு காலத்திலும் ஒருபோதும் காத்தான்குடி முஸ்லிம்களோ அல்லது இலங்கையிலுள்ள முஸ்லிம்களோ செயற்பட்ட வரலாறே கிடையாது என்பதையும் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றோம்.
பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கூறிய கருத்து தொடர்பில் நாம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இது தொடர்பாக சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம்.
காத்தான்குடியிலும் மட்டக்களப்பிலும் பொலிஸ் நிலையங்கள் இருக்கின்றன. பாதுகாப்புத்துறையினர் இருக்கின்றார்கள். காத்தான்குடியிலும் கடந்த 30 வருடங்களாக பொலிஸ் நிலையம் இருக்கின்றது. தேரர் கூறியது போன்ற எந்தப் பதிவுகளுமில்லை. அப்படி தேரரிடத்தில் ஆதாரமிருந்தால் அதை நிரூபிக்குமாறு அவருக்கு சவால் விடுகின்றோம் என மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எஸ்.ஹாறூன், செயலாளர் அஷ்ஷெய்க் டி.எம்.அன்சார் நளீமி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி, காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட நகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
vidivelli