கம்பஹா மாவட்டத்தில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பாடசாலை கல்வி அடைவுக்கு வழங்கப்படவில்லை
கலாநிதி றவுப் செய்ன்
கலாநிதி றவூப்ஸெய்ன் அம்பாறை மாவட்டம், இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திஹாரியில் வசித்து வருபவர், ஆய்விலும் எழுத்திலும் இரு தசாப்தகால அனுபவம் முதிர்ந்தவர். உளவள ஆலோசகர். சர்வதேச அரசியல் ஆய்வாளர். மெய்யியல் போதனாசிரியர், விரிவுரையாளர், ஊடகவியலாளர், கல்வியியலாளர் என பன்முகத் தளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். அண்மையில் கல்வித் துறையில் வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தவர். அவரது கல்வியியல் ஆய்வுகள் மற்றும் ஈடுபாடுகள் குறித்தும் தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுத் தலைப்பாக அவர் தேர்ந்தெடுத்த “கம்பஹா மாவட்ட இடைநிலைப் பாடசாலை மாணவர் இடைவிலகல்” குறித்தும் அவர் விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணல் இது.
Q நீண்டகாலமாக சர்வதேச விவகாரங்கள் குறித்து எழுதியும் பேசியும் வரும் நீங்கள் உங்கள் கலாநிதிக் கற்கைக்கான புலமாக கல்வித் துறையைத் தெரிவு செய்யக் காரணம் என்ன?
எனது வாழ்வின் அரைவாசிப் பகுதி முழுவதையும் சர்வதேச விவகாரங்களைப் புரிந்து கொள்வதில் செலவு செய்திருக்கின்றேன். இன்று வரையும் எனது தேடலும் ஆய்வும் அத்துறையில் தொடர்கின்றது. ஒரு புவிப் பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் சூழமைவையும் போக்குகளையும் ஓரளவுக்கு எதிர்வுகூறும் அளவுக்கு எனது தேடல் விரிவானது 2004 ஆம் ஆண்டில் நான் எழுதிய கட்டுரையொன்றில் எதிர்வரும் சில ஆண்டுகளில் அரபு மக்கள் புரட்சியில் ஈடுபடுவார்கள் என்று நான் கூறியிருந்தேன். அது 2011 இல் நிகழ்ந்தது. இன்று சர்வதேச செய்திகளை எழுதுபவர்களுக்கு தலைநகரங்களின் பெயர்களையோ ஆட்சியாளர்களின் பெயர்களையோ சரியாக எழுத முடியாமல் இருப்பதைக் கண்டு கவலை அடைகிறேன்.
இதேவேளை, கடந்த 20 ஆண்டுகளில் கல்வி என்னை ஈர்த்த மிக முக்கிய ஆய்வுப் புலமாகும். கல்வியினூடாகவே ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம் சாத்தியமாகும் என்று நம்புகின்றவன் நான். அதனால் கல்வியில் ஒரு வளவாளராக, விரிவுரையாளராக, ஆய்வாளராக, உயர்கல்வி ஆலோசகராக, நெறியாளராக, பாட வரைஞராக என்று பல்வேறு பாத்திரங்களில் எனது பங்களிப்பை ஆற்றி வந்துள்ளேன். வருகிறேன்.
இதுவரை 160 இற்கு மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தொடர்பான பல விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஒரு கல்வி உளவியலாளராகவும் சமூக ஆய்வாளர் என்ற வகையிலும் நான் நடத்தியுள்ளேன். அதன் நல்ல விளைவுகளையும் கண்டுள்ளேன். இந்த வகையில் கல்வியும் உளவியலும் மிகுந்த பிரயோகத் தன்மை வாய்ந்த (More Applicable) புலங்கள் என்பதால் அதனை எனது கலாநிதி ஆய்வுக்கான துறையாகத் தெரிவு செய்தேன்.
Q உங்களது கல்வித் துறைசார் ஈடுபாடு முழு நாட்டையும் உள்ளடக்கியதா அல்லது தலைநகரையும் புறநகர் பகுதிகளையும் மாத்திரம் கருத்திற் கொண்டதா?
160 பாடசாலைகள் மட்டுமன்றி பிரதேச ரீதியான கல்வி அபிவிருத்தி நிறுவனங்கள், புலமைப் பரிசில் நிறுவனங்கள், கல்வி குறித்த ஆய்வுகளுக்கு நிதியாதரவளிக்கும் ஒரு சில நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவமும் எனக்குள்ளது. அந்த வகையில் வட மாகாணம் தவிரவுள்ள எட்டு மாகாணங்களில் சகல மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகளுக்கும் நான் சென்றுள்ளேன். அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், தெற்கில் மாத்தறை, ஹம்பாந்தோட்டை வரையும் பதுளை, மொனராகலை வரையும் பாடசாலைக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒரு வளவாளராக நான் கலந்து கொண்டுள்ளேன். எங்கிருந்தெல்லாம் எனக்கு அழைப்பு வருகின்றதோ அவை அனைத்திற்கும் நான் சாதகமாகப் பதிலளித்துள்ளேன். அது எனக்கு மன ஆறுதலைத் தருகின்றது. நான் தலைநகரை மாத்திரம் எனது வசதிக்காகவும் சௌகரியத்திற்காகவும் தெரிவு செய்யும் வளவாளன் அல்ல.
Q இப்போது நீங்கள் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்விப் போக்குகள் குறித்து பொதுவாகவும் மாணவர் இடை விலகல் குறித்து குறிப்பாகவும் ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கின்றீர்கள். முதலில் இந்த ஆய்வு அனுபவங்கள் குறித்து சொல்லுங்கள்.
கம்பஹா மாவட்டத்தில் மொத்தமாக 21 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. அதில் 19 பாடசாலைகள் இடைநிலைப்பாடசாலைகள் ஆகும். எனது ஆய்வுக் குடித்தொகைக்கேற்ப நான் 18 பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இது ஒரு கள ஆய்வு. தரவுப் பகுப்பாய்வு இதில் முக்கியமானது. 04 கல்வி வலயங்களிலுள்ள 18 பாடசாலைக்கும் சென்று பல்வேறு வகையான தரவுகளைத் திரட்டுவது மிகச் சவால் நிறைந்ததாகவே இருந்தது. காரணம் சில அதிபர்களுக்கு இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும் அவர்களின் மனமுவந்த ஆதரவைப் பெறுவதும் சற்று கடினமாக இருந்தது. குறிப்பாக பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களின் தொகையை வெளியிட சிலர் தயங்கினர்.
சில அதிபர்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கி தேவையான அனைத்து தரவுகளையும் வழங்கினர். சிலர் பாடசாலையில் பின்னடைவுக்கான காரணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குத் தயக்கம் காட்டினர். தாம் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் தன்னைப் பேட்டி கண்டால் எல்லா விஷயங்களையும் தெளிவாகப் பேச முடியும் என்றனர். இந்தக் கேள்விக்கு முழுமையான பதில் தருவதில் எனக்கும் சில சங்கடங்கள் உள்ளன.
Q மேல்மாகாணத்தில் கம்பஹா முக்கிய மாவட்டம். இம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் கல்வி நிலை பொதுவாக எவ்வாறு உள்ளது?
கல்வி மேம்பாட்டை அளவீடு செய்வதற்கான உரைகற்களில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் உயர்தரத்திற்குப் பிந்திய பல்கலைக்கழக அனுமதி விகிதம் என்பனவே கொள்ளப்படுகின்றன. 19 இடைநிலைப் பாடசாலைகளிலும் சுமார் 13000 மாணவர்கள் பயில்கின்றனர். 700 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும் தரம் 05 புலமைப் பரிசில் பெறுபேறுகள் ஒப்பீட்டு ரீதியில் மிகக் குறைவாகவே உள்ளன. உதாரணமாக 180 மாணவர்கள் தோற்றும் ஒரு பாடசாலையில் ஒரு 10 பேர் அளவிலேயே சித்தியடைகிறார்கள். சாதாரணதரப் பரீட்சைக்குப் பின்னர் 40 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்குச் செல்லாமலேயே இடை விலகுகின்றனர். உயர் தரத்திற்குச் செல்லும் மாணவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்கள் மிக அரிதாகவே பல்கலைக்கழக நுழைவு அனுமதியைப் பெறுகின்றனர்.
கல்வித் துறையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செலவினங்களையும் பௌதிக, ஆளணி முதலீடுகளையும் அர்த்தம் உள்ளதாக ஆக்குவதற்கு இந்தப் பெறுபேறுகள் போதுமானதல்ல.
Q இம் மாவட்டத்தில் முஸ்லிம் கல்வி பின்னடைந்திருப்பதற்கான பிரதான காரணிகள் எவை என்று நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள்?
எப்போதும் கல்விப் பின்னடைவுக்கு மனித வளப் பற்றாக்குறை அல்லது பௌதிக வளப்பற்றாக்குறை காரணமாக்கப்படுவது வழக்கம். ஆனால் இவற்றினைத் தாண்டி கிடைக்கப் பெற்றுள்ள ஆளணி வளத்தை உச்சளவில் பயன்படுத்தி உயர்ந்த பெறுபேறுகளைக் கண்டடையப் பயன்படுத்துகின்றோமா? என்பது எனது ஆய்வில் முக்கியமானதாக இருந்தது. ஒரு பாடசாலைக் கல்வியுடன் தொடர்புற்றுள்ள பங்காளர்களில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வியமைச்சு, பழைய மாணவர் அமைப்பு, பாடசாலை அபிவிருத்தி குழு, பெற்றோர் மிக முக்கியமானவர்கள்.
அதிபர்களின் வினாக்கொத்துப் பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகளின் படி ஆளணிப்பற்றாக்குறை இப்பாடசாலைகளில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. இருக்கும் ஆசிரியர்களை வலுவூட்டி வினைத்திறன்மிக்க கற்பித்தலை உறுதி செய்தால் பெறுபேறுகளில் நாம் இன்னும் உயர்ந்து செல்லலாம். ஆசிரியர் வாண்மை விருத்தி தொடர்பாக நான் விநியோகித்த வினாக்கொத்தில் 14 உருப்படிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அவற்றுக்கான ஆசிரியர்களின் பதில் குறி (Response) திருப்திகரமானதாய் இல்லை.
பாடத்திட்டமிடல் (Lesson planning) கற்பித்தலுக்கு தயாராதல் (Preparation) கற்பித்தல் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்றல் ஆகிய உருப்படிகளுக்கு ஆசிரியர் பதில் குறி முறையே 21%, 19%, 25% அவ்வாறே அமைந்திருந்தது. எனது கருத்தில் ஆசிரியர்கள் மிக முக்கிய பங்காளர்களாவர். இதன் அர்த்தம் பெற்றோர் பொறுப்பற்றவர்கள் என்பதல்ல.
Q பெற்றோர் தரப்பும் கல்வியின் முக்கிய பங்காளர் என்பதை உங்களது ஆய்வு எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறது?
ஆசிரியர்களும் பெற்றோர்களும் முக்கியத்துவத்தில் எந்தளவிலும் குறையாத சம பங்காளர்கள் (Equal stake holders) என்பதே எனது முடிவாகும். பெற்றோரும் ஒரு மாணவன் வாழும் குடும்பக் கட்டமைப்பும் கல்வியில் மிகப் பெரும் செல்வாக்குள்ள காரணி என்பதை எனது ஆய்வின் இலக்கிய மீளாய்விலும் தரவுப் பகுப்பாய்விலும் மிகத் துல்லியமாக நான் விளக்கியுள்ளேன். எனது வாதத்தை வலிதாக்க போதுமான தரவுகளையும் புள்ளி விபரங்களையும் பயன்படுத்தியுள்ளேன்.
குடும்பத்தின் அளவு, குடும்பத்தின் வகை, குடும்பத்தின் பண்புகள் அதன் பொருளாதார நிலை, பெற்றோரின் கல்வி மட்டம், பெற்றோர் சமூக அந்தஸ்து, பெற்றோர்– பிள்ளை உறவு, பெற்றோரின் கல்வி ஈடுபாடு, பிள்ளைக்கு பெற்றோர் அளிக்கும் கல்வி வசதிகள், பெற்றோரின் எதிர்பார்ப்பு, பெற்றோர் மனப்பாங்கு, பிள்ளைகள் உளவியல் தேவைகளைப் பெற்றோர் நிறைவு செய்யும் அளவு, வீட்டுச் சூழலில் கல்வி நிலை, உடன் பிறப்புக்களின் தாக்கம் போன்றன எனது ஆய்வில் சாராமாறிகளாகவும், கல்விப் பெறுபேறு சார்மாறியாகவும் கொள்ளப்பட்டு, பெற்றோரின் செல்வாக்கை ஆராய்ந்துள்ளேன். அந்த வகையில் மேற்போந்த காரணிகள் நேர்முகமானதாக இருப்பின் பிள்ளைகளின் அடைவு மட்டம் உயர்வானதாக இருக்கும். அக்காரணிகள் எதிர்நிலையில் (Negative) இருப்பின் பிள்ளைகளின் பெறுபேறுகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் என்பதை நிறுவியுள்ளேன்.
Q மாணவர்களது பாடசாலை இடைவிலகல் வீதம் இம்மாவட்டத்தில் எந்தளவுக்கு உள்ளது? அதற்கான காரணங்கள் என்ன?
தரம் 6 முதல் 11 வரையான வகுப்பறைகளிலிருந்து சராசரியாக 10 வீதமான மாணவர்கள் இடை விலகுகின்றனர் என்பதை ஆவணப்பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகின்றது. அதேவேளை, சாதாரண தரத்துடன் அதாவது, சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் உயர்தரத்திற்குச் செல்லாமல் சராசரியாக 50 சதவீத மாணவர்கள் இடைவிலகிச் செல்கின்றனர். மாவட்டத்திலுள்ள மொத்த (ஆய்வுக்குழுத் தொகை) 18 இடை நிலைப் பாடசாலைகளின் சராசரிப் பெறுமானமே 50 வீதமாகும். பாடசாலைக்குப் பாடசாலை 40 சதவீதத்திலிருந்து 60 சதவீதம் வரை சாதாரண தரத்துடன் இடை விலகும் மாணவர் வீதம் வேறுபடுகின்றது. இடைவிலகும் மாணவர் தொகையில் ஒப்பீட்டு ரீதியில் ஆண் மாணவர்களே அதிகம் என்பதைத் தரவுகள் காண்பிக்கின்றன.
இடை விலகல்களுக்கான காரணங்கள் பல்வேறு வகைப்பட்டவை. அவற்றுள் சில பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் தொடர்புற்றவை. வேறு சில ஆசிரியர்களுடனும் கற்பித்தல் அணுகுமுறைகளுடனும் தொடர்புற்றவை. பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில் பெற்றோரின் ஆர்வம் குறைவாக இருப்பது மாணவர் இடைவிலகிச் செல்வதற்கான பிரதான காரணம் என 80% மான அதிபர்களும் 75% மான ஆசிரியர்களும் வினாக் கொத்துக்களுக்கு பதில் குறி (Response) தந்திருந்தனர்.
எவ்வாறாயினும் இடை விலகிய மாணவர்களுடனான நேர்காணலில் இருந்து வேறு பல காரணங்களும் கண்டடையப்பட்டன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவை. கல்வியின் பெறுமானம் குறித்த மாணவர்களின் மங்கலான புரிதல், நேரத்திற்கு உணவு கிடைக்காமை, கற்றல் சாதனங்கள் மற்றும் போதிய வகுப்புக் கட்டணம் இல்லாமை, ஆசிரியர்களின் பிழையான கையாளுதல், பெற்றோர் வெளிநாடு செல்லல், பாதுகாவலர்களால் அல்லது பொறுப்பாளர்களால் சுரண்டப்படல். மாணவர்கள் பகுதி நேர வேலைக்கு அமர்தல், வீட்டில் கவனிப்புக் கிடைக்காமை, மோசமான சகபாடிகள், பொருத்தமற்றதும் வசதியற்றதுமான வாழிடம். அளவுக்கு மீறிய வணிக நாட்டம், ஊடகங்களின் தாக்கம் என அவை விரிந்து செல்கின்றன.
Q மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடை விலகிச் செல்வதனால் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் என்ன?
முதலாவது வேலையற்ற இளைஞர்களின் பெருக்கம் அல்லது கூலித் தொழிலாளர்களின் அதிகரிப்பு, வீட்டிலிருந்து தூர இடங்களில் ஒதுங்கிவாழல், குற்றச் செயல்களில் ஈடுபடல், போதைவஸ்துப் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுதல், உள ஆரோக்கியத்தை இழத்தல் என எதிர்மறையான விளைவுகள் பல ஏற்படலாம் என்பதை களநிலைத் தரவுகள் மூலம் இந்த ஆய்வு நிறுவுகின்றது.
Q கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வியை மேம்படுத்தவும் இடைவிலகலைக் கட்டுப்படுத்தவும் உங்கள் ஆய்வு எத்தகைய விதப்புரைகளை முன்வைக்கின்றது?
எனது ஆய்வறிக்கையின் இறுதிப்பகுதியில் விதப்புரைகள் முறைப்படுத்தப்பட்டு தரப்படுகின்றன. அதில் பெற்றோர் தொடர்பான விதப்புரைகள், பாடசாலை முகாமை மற்றும் பௌதிக வளங்கள் தொடர்பான விதப்புரைகள், ஆசிரியர்களுக்கான விதப்புரைகள், அரச தரப்பு மற்றும் கல்வி வலயம் தொடர்பான விதப்புரைகள் என தனித் தனியாகவும் விரிவாகவும் ஆய்வை அடியொற்றி முன்வைக்கப்பட்டுள்ளன.
இடைவிலகல் ஒரு தீவளாவிய பிரச்சினை என்ற வகையில் மாதிரி எடுப்புகளில் இருந்து மேற்கொள்ளப்படும் பிரச்சினைகள் குறித்த பகுப்பாய்வு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொருந்தும் என்பதே எனது எதிர்பார்ப்பு. கல்வியின் பிரதான பங்காளர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு போன்றவர்களின் உயிர்ப்புள்ள பங்குபற்றலை ஊக்குவித்து மாணவர்கள் தமது பாடசாலைக் கல்வியைப் பூரணப்படுத்துவதற்கான தூண்டுதல்களை வழங்க இந்த ஆய்வின் பெறுபேறுகளும் விதப்புரைகளும் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும்.
Q உங்கள் ஆய்வும் அதனையொட்டிய பெறுபேறுகளும் விதப்புரைகளும் இம்மாவட்டத்தில் கல்வியுடன் தொடர்பானவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளனவா? அதற்கான சமூக ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது?
இம்மாவட்டத்தில் இப்படியொரு ஆய்வை நான் மேற்கொண்டமையை அனைத்து அதிபர்களும் பெரும்பான்மை ஆசிரியர்களும் நன்கு அறிவர். இந்த ஆய்வை வெளிப்படுத்தல் (Exposion) குறித்து திஹாரிய ஜம் இய்யத்துல் உலமா திஹாரியில் இயங்கும் சில முக்கிய இயக்கங்கள், நிறுவனங்களிடமும் நான் கலந்துரையாடியுள்ளேன். கல்விமான்களை ஒன்று சேர்த்து இந்த ஆய்வை அறிமுகம் செய்வதாக அவர்கள் அனைவரும் எனக்கு வாக்களித்தனர். எனினும் 6 மாதங்கள் கடந்து விட்டன. இதுவரை எதுவும் நடைபெறவில்லை. இந்த நேர்காணல் விடிவெள்ளிப் பத்திரிகையில் வெளிவந்த பின்னரேனும் சில நல்ல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.
vidivelli