புத்தரைக் கல்லெறிந்து கொல்லும் அஸ்கிரிய புத்த மதம்!
இலங்கையின் அரச பாதுகாப்புப் பிரிவினால் யாழ். பொதுநூலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்ட பேரதிர்ச்சியை இலங்கையின் புகழ்பெற்ற ஒரு கவிஞரான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஒரு கவிதையாக வடித்திருந்தார். அக் கவிதையின் தலைப்பு ‘புத்தனைக் கொல்லுதல்’. ஒருவர் கண்ட கனவாக அக்கவிதை புனையப்பட்டிருந்தது. அக்கவிதையில், பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட புத்தரின் உடலம், எரிந்து சாம்பலாகிக் கிடந்த யாழ் பொதுநூலகத்தின் படிவரிசைகளில் அனாதையாகக் கிடக்கிறது. அதைக் கண்ணுற்ற அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ‘நமது கொலைப் பட்டியலில் இவரது பெயர் இல்லையே.. ஏன் இவரைக் கொன்றீர்கள் ?’ எனக் கோபத்துடன் கேட்கிறார். அப்போது புத்தரைக் கொன்றொழித்த அதிகாரிகளில் ஒருவர் தன் செயலுக்கான நியாயமாக ‘இவரைக் கொல்லாமல் நாம் ஓர் ஈயெறும்பைக்கூடக் கொல்ல முடியாது என்பதாலேயே இவரைக் கொல்ல நேர்ந்தது’ என்கிறார்.
புத்தரின் தர்மத்தில் தடுக்கப்பட்டுள்ள முதலாவது கடுமையான விடயம் கொலை செய்தலாகும். இல்லறத்தில் இருப்போருக்காக புத்தர் அருளியுள்ள பஞ்சசீலத்தில் முதலாவதாகக் கொலைசெய்வது தடுக்கப்பட்டிருப்பதற்குப் பிரதானமான ஒரு காரணம் இருக்கிறது. கள்ளுண்ணாமையை முதலாவதாகவும் கொல்லாமையை ஐந்தாவதாகவும் வரிசைப்படுத்தி புத்தர் போதிக்காதது ஏன்? அவரது மொத்த தர்மத்தினதும் மூல சாரமே அகிம்சை என்பதால்தான் அவ்வாறு உயிர்க்கொலையை முதலாவது பாரிய குற்றமாக புத்தர் கருதியிருந்தார். ஒருவர் இன்னொருவர் மீது மனதாலும் வார்த்தையாலும் இம்சிக்கத் தொடங்கினால் அதன் முடிவு உயிர்க் கொலையில்தான் முடிவுறுகிறது. அதனால்தான் அன்புசெலுத்துதல் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட புத்த தர்மத்தில் முதன்மை தர்மமாகக் கொல்லாமை இடம்பிடித்துள்ளது.
புத்தர் பரிநிர்வாணமடைந்த தினத்தன்றே பிக்கு ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். ஏனைய பிக்குகள் புத்தரின் இறப்பினால் கவலையில் மூழ்கியிருந்தபோது அவர்களை ஆசுவாசப்படுத்த நினைத்தார் மகிழ்ச்சியாக இருந்த அந்த பிக்கு. ‘இனி நமக்கு சட்ட திட்டங்கள் போட எவருமில்லை, நாம் இனி சுதந்திரமாக இருக்கலாம்’ என்று அவர்களுக்குச் சொன்னார். எம்.ஏ. நுஃமான் அவர்களின் கவிதையில் சொல்லப்படுவதும் இதுபோன்ற ஒரு செய்திதான்.
அந்த யாழ். பொதுநூலகத்தைத் தீவைத்துக் கொளுத்தியவர்கள், கொலைகளை செய்வதெனும் தமது கடமையைத் தொடர்ந்து செய்துகொண்டு போவதற்கு முதலாவதாக அவர்கள் புத்தரைத்தான் கொல்ல வேண்டியிருந்தது !
அஸ்கிரிய பீடத்தின் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர் கடந்த வாரம் அற்புதமானதோர் ‘உபன்யாசம்’ செய்துள்ளார்.
“முஸ்லிம்கள் எங்களோடு நேசமாக இல்லை… அதனால் நீங்கள் அவர்களது கடைகளுக்குச் செல்ல வேண்டாம், அவர்களது கடைகளில் உண்ணவோ பருகவோ வேண்டாம் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன். அதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும். நமது மக்களுக்கு நச்சு மருந்துகளைத் தந்து, நமது மக்களை அழிக்கப்பார்க்கும் ஒரு கூட்டத்தினர்தான் அவர்களென்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது! அதனால் நமது பெளத்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அந்தக் கடைகளுக்கு செல்லவும் வேண்டாம். பொருள்களை வாங்கவும் வேண்டாம். அவற்றைச் சாப்பிடும் நமது இளம் தலைமுறையினருக்கு எதிர்காலத்தில் குழந்தைப் பேறு இல்லாமல் போகலாமென்று நான் நினைக்கிறேன். அதேபோல அந்த மாத்தளை வைத்தியர் செய்துள்ள வீரதீரச் செயல்கள் பற்றியும் எல்லோருக்கும் தெரியும்தானே.
லட்சக்கணக்கான நமது குழந்தைகளை அவர்கள் அழிக்கின்றனர். இவ்வாறான இனத் துரோகிகளைச் சுதந்திரமாக இருக்கவிடுவது நல்லதல்ல! யாரோ சில நல்ல தாய்மார்கள் ‘அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்’ என்று சொன்னார்களே. அதைப்போல நான் சொல்லவில்லை. ஆனாலும் செய்ய வேண்டியது அது ஒன்றுதான் !” – என்பதே அந்த மகாநாயக்க தேரரின் உபன்யாசம்!
மகாநாயக்க தேரரின் உபன்யாசத்தில் அடங்கியுள்ள தகவல்கள் மற்றும் தற்போதைய நிலையில் தெற்கில் நிலவும் பிரபலமான மனப்பிராந்திகள் அனைத்துமே முற்றிலும் பொய்யானவை. சிங்களவருக்கு முஸ்லிம்கள் நச்சுப் பொருட்களைக் கொடுத்தார்கள் என்பதற்கான எந்தவொரு ஆதாரங்களோ தகவல்களோ பொலிஸாரின் விசாரணைகளிலோ, நீதிமன்ற நடவடிக்கைப் பதிவுகளிலோ இதுவரை நிரூபணமாகி இல்லவே இல்லை. உண்மையிலேயே நடந்துகொண்டிருப்பது இந்தக் கதைகளுக்கு மாறானவையே! அதாவது, தேரர் சொல்லும் – வைத்தியர் பற்றிய விடயம் முற்றிலும் பொய்யானதென இன்று நடந்துவரும் பல்வேறு விசாரணைகளின் மூலம் நிரூபணமாகி வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் பிக்குகள் சமூகத்தின் பிரதான பிக்கு ஒருவர், நிரூபிக்கப்படாத இவ்வாறான பொய்யான விடயங்களை முன்வைத்து, முஸ்லிம்களின் கடைகளில் உண்ண வேண்டாமெனக் கோரி நிற்பதும், லட்சக்கணக்கான தமது குழந்தைகளைக் கொன்று விட்டார்கள் எனும் பட்டவர்த்தனமான பொய்களைச் சொல்வதும் ஒருவகையில் தேரர் தனது எல்லையற்ற குரோதத்தையும் அறியாமையையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதேயாகும்.
மறுபுறம் – அந்த வைத்தியரைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் – எனச் சொல்வதன் மூலமாக அந்தத் தேரரின் தீவிர பெளத்த விரோத, கொடூரத்தன்மை வெளிப்படுகின்றது
இன்னொரு சந்தர்ப்பத்தில் – ‘அந்தச் சட்ட திட்டமெல்லாம் சரிவராது!’ – என்றும் இத் தேரர் சொல்லியுள்ளார். அதாவது, சில முஸ்லிம் நாடுகளில் உள்ள கல்லெறிந்து கொல்லும் கொடிய முறைமையைத் தானும் அங்கீகரிப்பதாகத் தேரரும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்கிறார். கல்லெறிந்து கொல்லும் வழிமுறையைச் சொல்லும் ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒரு வைத்தியரைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென பெளத்த தேரர் ஒருவர் சொல்வதன் ஊடாக அந்த வைத்தியரின் மதத்தை பெளத்த மதத்தை விடவும் அறிவுபூர்வமான, நியாயமான ஒரு மதமாக ஏற்று அங்கீகரிப்பதாக இல்லையா? அதாவது, பெளத்த சட்டமும் அல்லாத, ரோம டச்சுச் சட்டமும் அல்லாத தலிபானியச் சட்டத்தையே – பெளத்த மகாநாயக்க தேரர் என்ற வகையில் தானும் ஏற்றுக் கொள்கிறார் என்றல்லவா அர்த்தமாகிறது !
‘இலங்கைக்கு ஒரு ஹிட்லர்தான் தேவை !’ என்றும் சில காலங்களுக்கு முன்பு இதே தேரரின் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலையில் இருக்கும் இன்னொரு தேரரும் சொல்லியிருந்தார். அதற்காக அன்று அவர் கோத்தாபய ராஜபக் ஷவையே சிபாரிசு செய்திருந்தார்.
அஸ்கிரிய பீடத்தார் இவ்வாறு பெளத்த விரோத, தார்மீகத்துக்கு மாறான ஒரு பெளத்த நிறுவனமாக மாறிப்போயுள்ள இக்காலப்பகுதியில் பெளத்தர்கள் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டியதொரு கேள்வி உள்ளது.
அதாவது, பெளத்த மதத்தையும், பெளத்தர்களையும் உண்மையிலேயே இன்று அழித்துக் கொண்டிருப்பது, – சிங்களவர்களுக்கு மலட்டுக் குளிசை கொடுப்பதாகவும், பெண்களின் பலோப்பியன் குழாய்களில் முடிச்சுப் போடுவதாகவும் சொல்லப்படும் அந்த முஸ்லிம் வைத்தியரா ? அல்லது, புத்த பிரானையே துடிதுடிக்கக் கொலைசெய்யும் இவ்வாறான (போலி) பெளத்த பிக்குகளா ? என்பதே அக்கேள்வியாகும் !
ஒரு மதத்தைச் சார்ந்த சமூகத்தாரின் கடைகளைப் பகிஷ்கரிக்குமாறு கோரும், ஒரு மதச் சமூகத்தார் தமது லட்சக்கணக்கான குழந்தைகளைக் கொல்கிறார்கள் எனக் குற்றம் சாட்டும், அதனால் அந்த வைத்தியரைக் கல்லெறிந்து கொல்வதுதான் சரியெனச் சொல்லும் இத்தகைய செய்கைகளுக்காக சட்டம் எவ்வாறு செயற்பட வேண்டும்?
அண்மைக்காலமாக இலங்கையில் மிகவும் வேகமாகப் பிரபல்யம் அடைந்துவரும் சட்டமொன்று உள்ளது. அது, ஐ.சி.சி.பி.ஆர். சட்டமாகும். இதுவொரு சர்வதேச சட்டப் பிரகடனமாகும். இச்சர்வதேச பிரகடனத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டிருப்பதனூடாக இச்சட்டம் இலங்கையினதும் சட்டமாகும். உண்மையிலேயே இச்சட்டத்தின் நோக்கமானது, பிரஜைகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதே ஆகும். அதனால்தான் இச்சட்டம் – ‘சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பட்டயம்’ (International Covenants of Civil and Political Rights – ICCPR) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது இலங்கையில் பிரஜைகளின் சிந்திக்கும் உரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் ஒடுக்குவதற்கே இச்சட்டம் தொடர்ந்து பாவிக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டத்தின் கீழ் ஷக்திக்க சத்குமார எனும் சிறுகதையாளர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச்சட்டத்தின் 20 ஆவது பிரிவு – வேறுபடுத்தி, பிரித்துப் பார்ப்பது, இனத்துவ, சாதிய அல்லது மத அடிப்படையிலான, மதக் குரோதத்துக்கு, வன்முறைக்குத் தூண்டுவதும் பரப்புவதும் தடுக்கப்படுகிறது – எனும் அடிப்படையிலேயே இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஷக்திக்க சத்குமாரவின் சிறுகதையில் எந்த இடத்திலும் இத்தகைய ‘வன்முறைக்குத் தூண்டுதல்’ இல்லை. ‘மதக் குரோதத்தைப் பரப்புவதும்’ இல்லை. ஆயினும் இவை எல்லாம் தாராளமாகவே அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன அவர்களின் ‘உபன்யாச’த்தில் உள்ளன. ஆயினும், ஷக்திக சத்குமாரவின் மீது பொலிஸார் பிரயோகித்த இச்சட்டம் இந்த தேரரின் மீதும் பிரயோகிக்கப்படுமென நான் நினைக்கவில்லை.
இந்த சட்டத்துக்கும் மேலதிகமாக, இது மதம் சார்ந்த ஒரு சிக்கல் என்ற வகையிலும் முக்கியமானது. குற்றவியல் சட்டம் (Penal Code) மற்றும் ICCPR இரண்டையுமே ஒருபக்கம் வைத்துவிட்டு, எமது மூல சட்டமான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நோக்குவோம். அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவு ‘… பெளத்த சாசனத்தை பேணிப் பாதுகாத்துப் போஷிப்பது அரசின் பொறுப்பாகும்’ என்கிறது. இதன்படி, இத்தகைய பிக்குகளிடமிருந்து ‘பெளத்த சாசனத்தைக் காப்பாற்றிப் பேணிப்பாதுகாத்துப் போஷிப்பது’ அரசின் தலையாய பொறுப்பாகும். இவ்வாறு பேணிப் பாதுகாத்துப் போஷிப்பது அரசின் பொறுப்பு என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது வேறு விடயம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களுள் பிரதானமானது – பெளத்த தர்மம் என்பதும் பெளத்த சாசனம் என்பதும் இரு வேறான விடயங்கள் என்பதுடன், இவ்விரண்டும் ஒத்திசைவாகாத பாரிய வேறுபாடுகளையும் கொண்டவையாகும். சாசனத்தைப் பேணிக் காப்பதென்பது பெளத்த தர்மத்தைக் கட்டாயமாகப் பேணிக்காப்பதல்ல என்பதனாலாகும்.
எல்லா மதங்களையும் பொறுத்தவரை, வரலாறு நெடுகிலும் நிகழ்ந்திருப்பதும், தற்போது நிகழ்ந்து வருவதும் – சாசனத்தின் மூலம் தர்மம் பேணிப் பாதுகாக்கப்படாமையே ஆகும். இறுதியாக மீட்டிப் பார்க்கும்போது இப்போது நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் சாசனமே (மதக் கட்டமைப்பு) தவிர, தர்மம் அல்ல. வரக்காகொடவின் ‘உபன்யாசம்’ இதற்குச் சான்று பகர்கிறது.
சிங்களத்தில்: காமினி வியங்கொட
தமிழில்: அஜாஸ் முஹம்மத்
நன்றி: ‘அணித்தா’ வார இதழ்
vidivelli