இது ஒரு தத்துவார்த்தம் மிக்க வார்த்தையாகும். இதனைக் கருத்திற்கொண்டு சிந்திக்கும் எவரும் சமகால நிகழ்வுகளை வைத்து திருப்தி கொள்ளமாட்டார்கள். அனைத்து உயிர்களும் சுகமே வாழப் பிரார்த்திக்கும் துறவிகள் சிலர் அப்படித் தேவையில்லை என்று தம் செயற்பாடுகள் மூலம் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.
இந்த நாடு முப்பது வருட யுத்தத்தின் மூலம் அடைந்த பின்னடைவுகள், அழிவுகள், மரணங்கள் யாவையும் மறந்து போர்க்கொடி தூக்குகின்றனர். பாவம் அந்தத் துறவிகள். அவர்கள் எந்தச் சமூகத்துக்கெதிராகக் குரல் எழுப்புகிறார்களோ அந்த சமூகமான முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த அனைத்தையும் மறந்து பேசுகின்றார்கள், நடந்து கொள்கிறார்கள்.
இந்த ஸ்ரீலங்கா – இலங்கை நாடு சுதந்திரம் அடைந்தது முதல் முஸ்லிம்கள் தம் தாயகத்துக்காக ஒன்றுமே செய்யாதவர்கள் போல் அவர்களை அநியாயமாக சீண்டிக் கொண்டிருக்கும் இந்தக் குழு இந்நாட்டுக்குள்ளே பெரும்பான்மை சமூகத்துக்கேனும் நலவை நாடவில்லை என்பதே தெளிவு.
நாடு சுதந்திரமடைந்தது முதல் ஆட்சிபீடமேறிய அனைத்து அரசாங்கங்களிலும் முஸ்லிம்களது பிரதிநிதிகளாக இருந்து வந்தவர்களை உண்மையான சிங்கள பௌத்தர்கள் மறக்க மாட்டார்கள்.
தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளம்பியுள்ள வாலிபர்கள் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தின் பின் பிறந்தவர்கள். அல்லது யுத்தம் நடைபெறும் வேளை சிறியவர்கள். யுத்தம் முடிந்ததோடு கையிலே கிடைத்த புத்தகங்கள் சிறுபான்மையினர் பற்றிய வெறுப்பைத் தூண்டும் நூல்களே! அதைப் படித்து விட்டு பிரசாரம் செய்தோர் அந்நூல்களின் காரத்தைக் சடித்தவர்களே!
இந்நாட்டில் இருந்து வந்த அரசாங்கங்களில் அங்கம் வகித்த எந்தவொரு முஸ்லிமும் நாட்டுக்குத் துரோகம் செய்யவில்லை. சமூக நலனுக்காக கட்சி தாவியிருக்கலாம்.
ஆனால் நாட்டைப் பாதாளத்திற் கொண்டு சேர்க்கவில்லை. அமைச்சர்களாக இருந்தவர்கள், சபாநாயகர்களாக இருந்தவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்களாக இருந்தவர்கள், படையணிகளில் சேர்ந்து உயிரையே தியாகம் செய்தவர்கள் இவர்கள் எல்லாம் இந்த நாட்டுக்குத் துரோகமா செய்தார்கள்? என்று கேட்கத் துணிகிறது.
டீ.பி. ஜாயா யார்? சிங்கள பௌத்தர்களின் பாடசாலையாகிய கொழும்பு ஆனந்தாக் கல்லூரியை முன்னேற்றவில்லையா? பின்னர் அமைச்சரவையிலும் வெளிநாட்டுத் தூதுவராகவும் இருந்து சிறப்பான பணியாற்றவில்லையா? கலாநிதி பதீயுத்தீன் மஹ்மூத் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக, செயலாளராக, பாராளுமன்ற உறுப்பினராக, தகவல் ஒலிபரப்பு அமைச்சராக, கல்வி அமைச்சராக இருந்து ஆற்றிய சேவைகளை சுதந்திரக் கட்சியின் ஆரம்ப உறுப்பினர்கள் தவிர அக்கட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒட்டுண்ணிக் கட்சிகள் அறியுமா? அன்னார் கல்வி அமைச்சராக இருந்து ஆற்றிய பணி பற்றி இந்த ஒட்டுண்ணிகள் அறியுமா? அன்னார் அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கை இந்த நாட்டு பெரும்பான்மைக்கு ஏதும் பாதிப்பை உண்டு பண்ணியதா? அதற்கு முன்னர் சேவை செய்த சிங்கள மரிக்கார் எனக் கூறப்படும் தகவல் அமைச்சர் சாமானியமானவரா? தன் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு எல்.ரீ.ரீ.ஈ. கோட்டையாகவிருந்த யாழ்ப்பாணம் மாத்திரமன்றி பல இடங்களுக்கும் சென்று வந்த வெளிநாட்டு அமைச்சர் ஏ.ஸி.எஸ். ஹமீத் ஒன்றுமே செய்யவில்லையா? இது எமது நாடு என்ற சிந்தனையிலே புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றார். இது பௌத்த நாடு எக்கேடும் கெடட்டும் என்று வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தாரா?
தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி போக்குவரத்து அமைச்சராக இருந்த போது குவைத், சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலிருந்து இந்த நாட்டுக்கு உதவிகளைப் பெற்று எத்தனை வீதிகளை, பாலங்களைப் போட நடவடிக்கை எடுத்தார். நீர் அணைத்திட்டங்கள், பெரும் பெரும் ஆஸ்பத்திரிகள் என்பவற்றைக் கட்டித் தரும் நாடுகள் முஸ்லிம் நாடுகள் அல்லவா? சுனாமி அனர்த்தத்தின் போது உடனே விமானங்கள் மூலம் உதவிகள் வந்திறங்கியது இந்த நாட்டுக்கல்லவா? எத்தனை வீட்டுத் திட்டங்களை செய்து முடித்ததும், குறைந்த வட்டியில் பெற்றோல் வழங்கிக் கொண்டிருப்பதும் முஸ்லிம் நாடுகள் அல்லவா? செய் நன்றி கொள்ளாமை மனித பண்பாகுமா? கத்தார், ஈரான், மலேசியா, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் செய்த செய்து வருகின்ற உதவிகள் மறக்கடிக்கப்பட்டனவா? யுத்தத்தின் போது நேரடியாகவே களத்தில் பங்கு கொண்ட முஸ்லிம் வீரர்கள், அந்நாடுகள் தந்துதவிய ஆயுதங்கள், உயிர் தியாகங்கள் மறந்து ஒழிக்கப்பட்டனவா?
யாழ்ப்பாணம், மன்னாரிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் நாடு பிளவுபடுவதை ஏற்றுக் கொள்ள ஒத்துழைக்காமையால் தான் இன்றும் முகாம்களில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்பதை மறந்து அவர்களுக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்ள தடையாக பொதுபலசேனாக்கள் இருப்பது மனிதாபிமானமா?
ஒரு கணம் இந்த சேனாக்கள், முஸ்லிம்களும் தமிழரோடு சேர்ந்து போராடியிருந்து அதற்குத் துணையாக அரபு முஸ்லிம் நாடுகளும் துணை நின்றிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்றாவது சிந்திக்கக் கூடாதா?
காத்தான்குடிப் பள்ளியில் முஸ்லிம்கள் 103 பேர் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒரு ஹாபிழ் மற்றும் இரண்டு மௌலவிமார் கொலையுண்டார்கள். மேலும், குருக்கள் மடத்தில் ஹாஜிகளும், அவர்களை அழைத்து வந்தவர்களுமாக 83 பேர் கொலை செய்யப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல், ஏறாவூரில் 160 பேர், சம்மாந்துறையில் 49 பேர் என்று கொலை செய்யப்பட்டவர்களில் பொதுமக்களும், முஸ்லிம் பொலிஸாரும் அடங்குவர் என்பதையும் லாபிர், முத்தலிப் போன்ற முஸ்லிம் தளபதிகளும் அப்துல் மஜீத், மஃரூப் போன்ற அமைச்சர்களும் ஹபீப் முஹம்மத், மக்பூல் போன்ற மாவட்ட அரசாங்கச் செயலாளர்களும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதும் இந்த சிங்கள துவீபத்திறகு நன்றியோடு நடந்து கொண்டமைக்குக் கிடைத்த பரிசு என்பதை மனச்சாட்சியுள்ளோர் மறுப்பார்களா? இப்படி வரலாற்றை இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.
ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து வாசனைத்திரவியங்கள், அரிசி, யானை என்பன ஏற்றுமதி செய்ததாக வரலாறில் படித்திருக்கிறோம். ஆனால் இப்போது அந்தப் பூமிகள் காடாக மாறிவிட்டன. விவசாயம் செய்தோர் அகதி வாழ்வைக் கடத்துகின்றனர். பூமிகள் மீளளிக்கப்படவில்லை. நஷ்டம் யாருக்கென்று நாம் சிந்திக்கலாகாதா?
பிந்திய நாட்களில் நடந்து முடிந்த வன்செயல்களின் மூலம் ஏற்பட்ட சேதங்கள் மூலம் நம் தேசம் அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று நாம் பார்க்கவில்லையே. தர்கா நகர், அம்பாறை, திகன, குருநாகல், மினுவாங்கொடை போன்ற இடங்களில் வன்செயல்களில் ஈடுபட்டோர் நிரபராதியாயினர். நஷ்டஈட்டை அரசாங்கமோ பொதுமக்களோ கொடுத்து உதவினர். எவ்வளவு குறுகிய சிந்தனையோடு வன்செயலில் ஈடுபட்டோர் செயற்பட்டுள்ளனர் என்று பாருங்கள். சேதத்துக்குள்ளான கடைகள், தொழிற்சாலைகளில் பணியாட்களாக இருந்தவர்கள் தம் சிங்கள மக்கள் அல்லவா? ஒரே தேசம், ஒரே சட்டம் வேண்டும் எனக் குரலெழுப்புவோர் இந்த நஷ்டங்களைப் பற்றி ஒரு கணம் சிந்திப்பார்களா? முஸ்லிம் சமூகத்தவருக்கு நஷ்டம் ஏற்படுத்தவே களத்தில் குதித்தார்கள். இறுதியாக, தம் சமூகத்தைச் சேர்ந்த எத்தனை இளைஞர், யுவதியர் தொழிலின்றி வீடடங்கிவிட்டனர் எனப் பார்க்கவில்லை. அந்தோ பரிதாபம்!
ஒரு சிறுபான்மையாக இருந்தும் கூட முஸ்லிம் சமூகம் தாம் பிறந்த இடத்துக்கு நாட்டுப் பற்றோடு நடப்பதை சமயக் கடனாகக் கருதினர். இந்த விடயங்கள் எல்லாம் இளவயதினரான பொதுபலசேனாவினருக்கோ துவேச உணர்வு கொண்ட அரசியல் கட்சியில் உள்ளோருக்கோ தெரியாது. இதை அறிந்தவர்கள் மகா சங்கத்தினர் மாத்திரமே. அவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களோடு அந்நியோன்யமாக சகவாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்களது வழிகாட்டல் சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காகும். பழைய வரலாறு தெரியாது அடாவடித்தனம் மூலம் சகலரையும் அடக்கியாள முயலும் குழுவினர் நம்நாட்டில் இருந்து வந்த சமூக நல்லிணக்கம், சகவாழ்வு என்பதை பழுதடையச் செய்யாது பார்த்துக் கொள்வது பொறுப்பு வாய்ந்தோரின் கடமையாகும். அப்படியின்றேல் வரலாறு அறியாத சமூகத்தவரின் வளர்ச்சி எம்மை அழிவுக்கே இட்டுச் செல்லும்.
அபூ முஆத் அஹ்மத் முபாறக்
vidivelli