டாக்டர் சேகு சஹாப்தீன் மொஹமட் சாபி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிலோ அல்லது வேறு ஏதாவது பயங்கரவாதக் குழுவிலோ அங்கத்தவராக உள்ளார் என்பது தொடர்பில் எந்தவோர் உளவுப்பிரிவுக்கும், பாதுகாப்புப் பிரிவுக்கும் தகவல்கள் கிடைக்கவில்லை. அதனால் டாக்டர் சாபியை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது என குற்றவியல் விசாரணைத் திணைக்களம் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருப்பதாக அத்திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
டாக்டர் சாபி சஹாப்தீன் தற்போது 1978 ஆம் ஆண்டு 49 ஆவது இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9 (1) பிரிவின் கீழ் கடந்த மே மாதம் 27 ஆம் திகதியிலிருந்து 90 நாட்கள் தடுத்து வைத்திருக்கும் உத்தரவின்படி தொடர்ந்தும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினுள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் தொடர்பில் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளும் உறுதி செய்யப்படவில்லை. அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டிராததால் அவர் மீது விதிக்கப் பட்டுள்ள தடுத்து வைக்கும் உத்தரவினை இரத்துச்செய்யும்படி குற்றவியல் விசாரணைத் திணைக்களம் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதெனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி குற்றவியல் விசாரணைத் திணைக்களம் குருநாகல் நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சந்தேக நபரான டாக்டர் சாபி எந்தவொரு பயங்கரவாதக் குழுவுடனோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுடனோ தொடர்புள்ளவர் என்பதற்கு எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
அதனால் சந்தேகநபர் மீது விதிக்கப்பட்டுள்ள தடுத்து வைக்கும் உத்தரவு இரத்துச் செய்யப்பட்டால், அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிப்புச்செய்து அவரை விடுதலை செய்யமுடியும் எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
vidivelli