- எம்.ஆர்.எம்.வஸீம்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து முன்னோடிப் பரீட்சைகள், மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பரீட்சை தொடர்பான வினாப்பத்திரங்கள் அச்சிடுதல் என்பனவற்றிற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் பரீட்சையுடன் தொடர்புடைய விடயங்களை கையேடுகளாக விநியோகித்தல், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தல் மற்றும் அவ்வாறான ஆவணங்களை அருகில் வைத்திருத்தல் போன்ற விடயங்களும் பரீட்சை நிறைவடையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடைசெய்யப்படுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் பிரகாரம் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அத்துடன் அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, யாராவது இந்த தடையை மீறிசெயற்படுவதை கண்டால் உடனடியாக அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கமுடியும். அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கோ பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கோ அறிவிக்க முடியுமென இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தகதி முதல் 12ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli