ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களின் பின்னர் தலைநகர் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களில் ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்புக் கெடுபிடிகள் இன்றுவரை தொடர்வதாகவும் இதன் காரணமாக பள்ளிவாசல்களுக்குச் செல்வதில் பலரும் அசௌகரியங்களைச் சந்திப்பதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பயணப் பைகளையோ அல்லது ஏனைய பைகளையோ எடுத்துச் செல்வோரை பள்ளிவாசல்களுக்குள் நுழையவிடாது வாயிற் காவலர்கள் தடுத்து வருகின்றனர். இதன் காரணமாக வெளியூர்களிலிருந்து தற்காலிக தேவைகளுக்காக கொழும்புக்கு வருகை தருவோர் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் மத தலங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதன்போது கொழும்பிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் பொலிசாரும் இராணுவத்தினரும் தொண்டர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். ஆரம்ப நாட்களில் பள்ளிவாசல்களுக்குள் நுழையும் சகலரும் உடற்பரிசோதனைக்குட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் பள்ளிவாசல்களுக்குள் எந்தவிதமான பைகளையும் எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
எனினும், நாட்டில் மீண்டும் சுமுக நிலை ஏற்பட்ட பிற்பாடு பள்ளிவாசல்களில் உடற்பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வந்த பொலிசாரும் இராணுவத்தினரும் விலக்கிக் கொள்ளப்பட்டனர். இருப்பினும் பள்ளிவாசலால் நியமிக்கப்பட்டவர்கள் வாயிற் காவலர்கள் தொடர்ந்தும் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பைகளுடன் பள்ளிவாசல்களுக்குள் நுழைய முற்படுவோரை வழியிலேயே திருப்பி அனுப்புவதுடன் மனதை நோகடிக்கும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொள்வதாக பலரும் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பலர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பொது மற்றும் தனியார் கட்டிடங்களுக்கு பைகளுடன் வருவோரை உரிய முறையில் சோதனையிட்டு உள்ளே அனுமதிக்கின்ற நிலையில் பள்ளிவாசல்களில் மாத்திரம் இந்த இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படுவது ஏன் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அநாவசியமான இந்தக் கெடுபிடி காரணமாக பலர் உரிய நேரத்திற்கு பள்ளிவாசல்களில் தொழுகைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பள்ளிவாசலில் அனுமதி மறுக்க மறு பள்ளிவாசலுக்குச் சென்றால் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் உடனடிக் கவனம் செலுத்துவதுடன் இந்த கெடுபிடிகளை தவிர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
vidivelli