நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அளவுக்கதிகமானவர்கள் ஒன்றுகூடுவதோ மாநாடுகளை நடத்துவதோ அனுமதிக்கப்பட முடியாததாகும். என்றபோதிலும் பௌத்த இனவாத சக்திகள் தாம் விரும்பியவாறு கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் ஒன்றுகூடல்களை நடாத்தவும் பொலிசார் அனுமதி வழங்குகின்றமை கவலைக்குரியதாகும்.
கடந்த காலங்களில் இவ்வாறான கூட்டங்களுக்கு அனுமதி வழங்கியதன் விளைவை நாடு கண்டிருக்கிறது. அளுத்கமவில் முஸ்லிம்களின் எதிர்ப்பையும் அச்சத்தையும் கருத்திற் கொள்ளாது பொதுக் கூட்டமொன்றை நடாத்த பொது பல சேனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் காரணமாகவே அங்கு பாரிய அழிவு அரங்கேற்றப்பட்டது. மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிக் கணக்கான சொத்தழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. எனினும் இதற்குக் காரணமான ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இன்றும் அவ்வாறானதொரு அழிவுக்கே கண்டியில் திட்டமிடப்படுகிறதா என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் எழுவதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. உண்மையில் இந்த அவசர காலச் சட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரமே அமுல்படுத்தப்பட்டது என்று சொல்வதே மிகப் பொருத்தமானதாகும். முஸ்லிம்கள் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்ட தமது நிறுவனங்களின் உள்ளக சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதற்குக் கூட அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை தொடர்கின்ற சூழலில், பல்லாயிரக் கணக்கானோரை ஒன்று திரட்டுகின்ற பௌத்த பிக்குகளின் நிகழ்வுகளுக்கு எந்தவித தடைகளும் ஏற்படுத்தப்படாமை சட்டத்தினதும் பாதுகாப்புத் தரப்பினதும் பாரபட்சமே அன்றி வேறில்லை எனலாம்.
இக் காலப்பகுதியிலேயே குருநாகல், மினுவாங்கொடை போன்ற பகுதிகளிலும் பட்டப்பகலிலேயே வன்முறைகளை அரங்கேற்றினார்கள். கொட்டாரமுல்லையில் வீடு புகுந்து முஸ்லிம் வர்த்தகரை வெட்டிக் கொன்றார்கள். இதன்போதெல்லாம் படையினர் தமது துப்பாக்கிகளைப் பிரயோகிக்கவில்லை. மாறாக உத்தரவை மீறி வாகனத்தை நிறுத்தாது வேகமாகச் சென்ற அப்பாவி சாரதியும் சுகவீனமுற்ற தனது மகளைப் பார்ப்பதற்காக பாடசாலையினுள் நுழைய முயன்ற அப்பாவித தந்தையின் மீதுமே அவசரகாலச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் ஒன்றைத் தாக்குகின்ற போது அதனை படையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த வீடியோ காட்சியை முழு உலகமும் பார்வையிட்டது.
அதேபோன்றுதான் கண்டியில் அதுரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த போதும் அவருக்கு ஆதரவாக ஆயிரக் கணக்கானோர் அவ்விடத்தில் சட்டவிரோதமாக ஒன்றுகூடியபோதும் சட்டம் பிரயோகிக்கப்படவில்லை. இந்த உண்ணாவிரத போராட்ட இடத்திலிருந்து ஞானசார தேரர் தலைமையில் கொழும்பை நோக்கி பேரணி ஆரம்பித்த போதும் நாடெங்கும் சந்திகளில் இனவாதிகள் ஒன்றுகூடிய போதும் அதனைத் தடுத்து நிறுத்த சட்டம் பிரயோகிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. இங்கு சட்டம் தனது கடமையைச் செய்திருந்தால் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிராது. சர்வதேசத்தின் முன் இலங்கை தலைகுனிந்து நிற்க வேண்டியும் வந்திராது.
இவ்வாறான சூழலில்தான் நாளை மறுதினம் கண்டியில் மீண்டும் பாரிய மாநாடு ஒன்றுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பௌத்த பிக்குகளும் 1 இலட்சம் பொது மக்களும் இதில் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் பகிரங்கமாகவே அறிவித்துள்ளனர். இந்தப் பத்தி எழுதப்படும் வரை பொலிசார் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடம் நேரில் முறையிட்டும் சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறவில்லை. மாறாக முஸ்லிம்களே அச்சத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். உலமா சபை வேறு வழியின்றி நோன்பு நோற்றுப் பிரார்த்தியுங்கள் என்று அறிக்கை விடுத்திருக்கிறது.
ஆக இலங்கை முஸ்லிம்கள் மீது சட்டம் பாரபட்சமாகவே பிரயோகிக்கப்படுகிறது என்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன. நேற்றைய தினம் மனித உரிமை கண்காணிப்பகம் காட்டமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளபோதிலும் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கப் போகிறது.
vidivelli