ஒருவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க முடியாது

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

0 1,240

இலங்­கையில் இன்­றைய கால­கட்­டத்தில் நல்­லி­ணக்­கத்­தி­னையும், இனங்­க­ளுக்­கி­டை­யே­யான சக­வாழ்­வி­னையும் ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின் 2015 ஆம் ஆண்டில் நாங்கள் முன்­வைத்த நிலை­மா­று­கால நீதி, அர­சி­ய­ல­மைப்பு திருத்தம், நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் ஆகி­யன தொடர்பில் மீண்டும் உரை­யா­டல்­களை ஆரம்­பிக்க வேண்­டி­யது அவ­சியம் என்று மாற்றுக் கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் பணிப்­பா­ளரும் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செய­ல­ணியின் செய­லா­ள­ரு­மான கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து தெரி­வித்தார்.

‘த கட்­டு­மரன்’ இணை­யத்­த­ளத்­திற்கு வழங்­கிய விசேட நேர்­கா­ணலின் போதே அவர் இவ்­வாறு கூறினார். இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் மற்றும் சக­வாழ்வு குறித்து நேர்­கா­ணலில் விரி­வாகக் கருத்துத் தெரி­வித்த அவர் இலங்­கையில் வாழும் எந்த இன­மா­யினும் சரி அந்த இனங்­களின் செயற்­பா­டு­க­ளா­னது அடிப்­படை மனி­த­உ­ரி­மை­களை மீறாத வகையில் இருக்கும் பட்­சத்­தில்தான் நல்­லி­ணக்­கமும் சக­வாழ்வும் சாத்­தி­யப்­படும் என்று சுட்டிக் காட்­டினார்.

நேர்­காணல்:
பிரி­ய­தர்­ஷினி சிவ­ராஜா

உயிர்த்த ஞாயிறு, ஏப்ரல் 21ம் திகதி தாக்­கு­தலின் பின்பு இலங்­கையில் ஒரு பதற்ற நிலையும், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறுகல் நிலையும் காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­மை­யா­னது கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய நிர்ப்­பந்­தத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று எண்­ண­வைக்­கி­றது. உங்கள் கருத்து என்ன?

மக்­க­ளிடம் நாங்கள் அனை­வரும் சென்று பேச முன்னர் நீங்கள் அனை­வரும் இணைந்து மக்­க­ளிடம் சென்று யுத்தம் ஏன் வந்­தது என்­பது பற்றி பேசுங்கள் என்று நாங்கள் அர­சாங்­கத்­திடம் கூறினோம். அதற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உடன்­பட்ட போதிலும் நிறை­வேற்­ற­வில்லை. அதனால் எனது கருத்­துப்­படி நிலை­மா­று­கால நீதி என்­பது சரி­யான இடத்­தினை நோக்கி நகர்த்­தப்­ப­ட­வில்லை. தேவை­யான இடத்­திற்கு அது வழங்­கப்­ப­டவும் இல்லை. தேவை­யான நேரத்தில் அதனை வழங்­கவும் இல்லை. இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளிலும் பல்­வேறு குறை­பா­டுகள் இருந்­தன.

ஏப்ரல் 21ம் திகதி தாக்­கு­தலின் பின்னர் பல முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணை­களை காரணம் காட்டி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவை­யெல்லாம் இனங்­க­ளுக்­கி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

இங்கு முக்­கி­யத்­துவம் பெறும் மற்­று­மொரு விடயம் இலங்­கையில் நாம் யார் என்ற கேள்­வி­யாகும். நாம் ஏன் இணைந்து வாழ வேண்டும் என்ற விட­யத்தைப் பற்­றியோ அதன் முக்­கி­யத்­து­வத்தைப் பற்­றியோ யாரும் கவனம் செலுத்­த­வில்லை. அது பற்றி மக்­க­ளுடன் பேசவும் இல்லை. அறி­வு­றுத்­தவும் இல்லை. எல்­லோரும் One Nation One Country என்று கூறு­கின்­றார்கள். நாட்டில் 70 சத­வீ­தத்­திற்கு அதி­க­மானோர் சிங்­கள பௌத்­தர்­க­ளாக உள்ள நிலையில் One Nation எனும் போது இதர இனங்­களைச் சேர்ந்த மக்கள் சிங்­கள பௌத்த வரை­ய­றை­க­ளுக்குள் வாழ வேண்­டுமா? இல்லை. இங்கு வாழும் அனைத்து இன மக்­களும் தத்­த­மது அடை­யா­ளங்­களைப் பேணிக் கொண்டு வாழ வேண்டும். அதுவே இலங்­கைக்கு அவ­சியம்.

இந்த அடை­யா­ளங்­களைப் பேணிக்­கொண்டு வாழ­வேண்டும் என்­பதில் முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்டம் பற்­றியும், முஸ்லிம் பெண்­களின் ஆடைகள் பற்­றியும் பர­வ­லாகப் பேசப்­ப­டு­கின்­றது. இவைதான் முஸ்லிம் விரோத நகர்­வு­களில் முக்­கிய இடத்தைப் பிடித்­துள்­ளன. அவர்கள் இலங்­கைக்கு ஏற்ற விதத்தில் வாழ வேண்டும் என்றும் வாதங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இதனை நீங்கள் எவ்­வாறு நோக்­கு­கின்­றீர்கள்?

மத்­ரா­சாக்கள் பற்­றியும் கதைக்­கப்­ப­டு­கின்­றது அல்­லவா? கல்வி அமைச்சின் கீழ் அவற்றை கொண்­டு­வர வேண்டும் என்று அர­சாங்கம் கூறு­கின்­றது. அதற்கு முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் அவர்­க­ளுக்குள் கலந்­து­பேசி தீர்­மா­னத்­திற்­கு­வர உடன்­பட்­டுள்­ளார்கள். புர்கா பிரச்­சி­னையை எடுத்துக் கொண்டால் அர­சாங்­கத்­தினால் ஆடைகள் அணி­வது தொடர்பில் வற்­பு­றுத்­தல்­களை மேற்­கொள்ள முடி­யாது. அதனை நான் வன்­மை­யாக எதிர்க்­கின்றேன். நான் எவ்­வா­றான ஆடையை அணிய வேண்டும் என்று பிறர் எனக்கு ஆணை­யிட முடி­யாது. ஆனால் சிற்­சில பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக சில மாற்­றங்­களை ஆடைகள் விட­யத்தில் செய்ய முடியும். ஆனால் நீண்ட கால அடிப்­ப­டையில் பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்கு என்று கூறிக் கொண்டு ஆடைகள் விட­யத்தில் கட்­டுப்­பா­டு­களை விதிக்க முடி­யாது.

13 வயதில் உள்ள சிறு­மியை முஸ்லிம் ஆண்கள் விவாகம் செய்ய முடியும். இவ்­வா­றான வழக்­கங்கள் அவர்­களின் சமூ­கத்தில் உள்­ளன. இங்கு நாம் கேட்க வேண்­டிய கேள்வி என்­ன­வெனில் அடிப்­படை மனித உரிமை என்­பது இந்த விவ­கா­ரத்தில் மீறப்­ப­டு­கின்­றதா?இல்­லையா? என்­ப­தாகும். இதனைப் பற்றி அனைத்து தரப்­பு­களும் கலந்து பேச வேண்டும். புர்கா பிரச்­சி­னையை எடுத்துக் கொண்டால் இங்கு பாது­காப்பு கார­ணத்­திற்­காக மட்டும் முகத்தை மூட வேண்டாம் என்று கூறப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. இந்த வகையில் நாங்கள் யார்? இந்த நாடு எங்கே போய் கொண்­டி­ருக்­கின்­றது என்றே கேட்க தோன்­று­கின்­றது.

இணக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களின் இறு­தியில் அவ­ரவர் இன அடை­யா­ளங்­களும் தனித்­து­வங்­களும் பாது­காக்­கப்­படும் நிலை உரு­வா­கின்­றது. இதன் மூலம் அடிப்­படை மனித உரி­மை­களும் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன. இதுவே நாட்­டுக்கு பயன்­மிக்­க­தாக அமையும் எனலாம்.

முஸ்லிம் மக்கள் இலங்­கை­யர்­க­ளாக வாழ்­வ­தனை விட அரே­பி­யர்­க­ளாக வாழவே முன்­னு­ரிமை வழங்­கு­கின்­றார்கள் என்றும் இதனால் தான் நாட்டின் இன­மு­றுகல் நிலை ஏற்­ப­டு­கின்­றது என்றும் பௌத்த தேரர்கள் பலர் கருத்துத் தெரி­விக்­கின்­றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் இலங்­கை­யர்கள் போன்று வாழ வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­ற­தென்றால், பெரும்­பான்­மைக்கு அடி­ப­ணிந்து அவர்­களின் வரை­ய­றை­க­ளுக்குள் உட்­பட்டு வாழ்­வ­தையா குறிக்­கி­றது? என்று நான் கேட்க விரும்­பு­கின்றேன். முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் இலங்­கை­யர்­க­ளா­கவே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். தேசிய கீதம் இசைக்­கப்­படும் போது இவர்­களில் எவ­ரா­வது எழுந்து நின்று மரி­யாதை செலுத்­தாமல் இருக்­கின்­ற­னரா? பௌத்த மத தேரர்கள் தவிர மற்­ற­வர்கள் அனை­வரும் எழுந்து நின்று மரி­யாதை செலுத்­து­கின்­றனர் அல்­லவா? அப்­ப­டி­யானால் இலங்­கை­யர்­க­ளாக வாழ்­வது என்­பதன் சரி­யான அர்த்தம் என்ன? அது பற்­றித்தான் நாம் ஆராய்தல் வேண்டும்.

உங்கள் கருத்­தின்­படி இலங்­கை­யர்­க­ளாக வாழ்­வது என்­பது எவ்­வா­றா­னது?

இலங்கை பல்­லின மக்கள் சமூ­கங்கள் வாழும் ஓர் நாடு. எண்­ணிக்கை அடிப்­ப­டையில் சிங்­கள பௌத்­தர்கள் அதி­க­மாக வாழ்­கின்­றனர். எனினும் ஒவ்­வொரு இனத்­த­வர்­களும் தத்­த­மது அடை­யா­ளங்­க­ளுடன் வாழும் உரி­மையைப் பெற்­றுள்­ளனர். அதே­நேரம் அவர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தம்மை இலங்­கை­யர்கள் என்று அழைத்­துக்­கொள்ளும் சுதந்­தி­ரத்­தையும் கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்­களின் செயற்­பா­டுகள் எது­வா­யினும் அது அடிப்­படை மனித உரி­மை­களை மீறா­த­தாக இருக்க வேண்டும். இந்த வகையில் முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்டம், கண்­டிய சட்டம் மற்றும் தேச­வ­ழமை சட்டம் ஆகிய அனைத்­தையும் நாம் மறு­ப­ரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

அடிப்­படை மனித உரி­மை­களை மீறும் இவ்­வா­றான விட­யங்கள் அனைத்­தையும் பற்றி யாவரும் ஒரே மேசையில் அமர்ந்து கலந்­து­ரை­யாட வேண்டும். இலங்­கையில் சிங்­கள சமூ­கமும், தமிழ் சமூ­கமும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக ஒன்­றுப்­ப­டு­கின்­றனர். முறு­கல்­களின் போது இது பொது­வான விட­ய­மா­கவே உள்­ளது. இந்த நிலையில் நாம் பிரச்­சி­னைகள் பற்றி ஆராய்ந்து ஒரு முடி­வுக்கு வர வேண்டும். இதற்­காக நாம் மீண்டும் 2015ஆம் நிகழ்ச்சித் திட்­டங்­களை நோக்கி செல்ல வேண்டும் என்று நான் கரு­து­கின்றேன். நல்­லி­ணக்க செயற்­பா­டுகள், அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தங்கள், நிலை­மா­று­கால நீதி என்­பன பற்றி மீண்டும் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிக்க வேண்டும்.

எதிர்­கா­லத்தில் இது சாத்­தி­யப்­படும் என்று கரு­து­கின்­றீர்­களா?

சாத்­தி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களில் நாம் ஈடு­பட வேண்டும். தற்­போது ஜனா­தி­பதித் தேர்­தலை அனை­வரும் எதிர்­பார்க்­கின்­றனர். ஆனால் எனது கருத்­துப்­படி ஜனா­தி­பதித் தேர்தல் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது அல்ல. ஜனா­தி­பதி பதவி என்­பது முக்­கி­யத்­துவம் பெற்­ற­தல்ல. 19 ஆம் திருத்­தத்தின் பின் அவரின் அதி­கா­ரங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு விட்­டன. இதனால் அனைத்து இன மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்ற பெய­ர­ள­வி­லான ஜனா­தி­ப­தியே நாட்­டுக்குத் தேவை. எனது கருத்­துப்­படி ஜே.வி.பியின் 20வது திருத்­தத்­தினை மேற்­கொண்டு முற்று முழு­தாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை ஒழிக்க வேண்டும். பெரு­ம­ளவு பணத்­தினை விரயம் செய்து அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­தினை மேற்­கொள்­வ­தனை விட இது மிகவும் இல­கு­வான காரி­ய­மாகும். இதன்­மூலம் பலம் வாய்ந்த பாரா­ளு­மன்­றத்­தினை உரு­வாக்கி நாட்­டுக்கு உகந்த பல்­வேறு நல்­லி­ணக்க திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடியும்.

நாட்டில் நல்­லி­ணக்­கத்­தி­னையும் இனங்­க­ளுக்­கி­டையே சக­வாழ்­வி­னையும் ஏற்­ப­டுத்தும் போது சிங்­கள பௌத்­த­வாதம் என்­பது மேலோங்கும் நிலையை அவ­தா­னிக்க முடி­கி­றது. இவ்­வா­றான சவால் முன்­னி­லையில் நல்­லி­ணக்கம் என்­பது இலங்­கையில் எவ்­வாறு சாத்­தி­ய­மாகும் என்று கரு­து­கின்­றீர்கள்?

இங்கு சிங்­கள மக்கள் மத்­தியில் மாற்றம் ஏற்­பட வேண்டும். இலங்கை அனைத்து இன மக்­க­ளி­னதும் நாடு என்று கூற அவர்கள் முன்­வ­ர­வேண்டும். பௌத்த மதம் என்­பது ஒரு தத்­து­வ­மாகும். இலங்­கையில் நில­வு­கின்ற பௌத்த மத செயற்­பா­டு­க­ளுக்கும், உண்­மை­யான பௌத்த தத்­து­வத்­திற்கும் இடையில் பாரிய வேறு­பா­டுகள் உள்­ளன. சிங்­கள மக்கள் மத்­தியில் இந்த மன­மாற்றம் ஏற்­ப­டாத வரை பிரச்­சி­னைகள் ஒரு­போதும் தீரப்­போ­வதும் இல்லை. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதத்­திற்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்­காக ஞான­சார போன்ற தேரர்கள் இன­வா­தத்­தினைப் பரப்பும் போதும் ஓர் இனத்­தினை அவ­ம­திக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை முன்­வைக்­கின்ற போதும் அவ்­வா­றா­ன­வர்­களை கைது செய்­யாமல் இருக்க முடி­யுமா? ஒரு நாட்டில் சட்டம் என்­பது அனை­வ­ருக்கும் சம­மாக அமு­லாக வேண்டும். பௌத்த மதத்தின் பெயரால் தான் அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இது ஜன­நா­யகம் அல்­லவே. ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­ப­தி­யினால் வழங்­கப்­பட்ட மன்­னிப்பு அது.!

நீதி­மன்­றத்­தினை அவ­ம­தித்த வழக்கில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றமும், உயர்­நீ­தி­மன்­றமும் இவ்­வி­ட­யத்தில் சரி­யான தீர்ப்­பினை அளித்து அவ­ருக்கு சிறைத்­தண்­டனை வழங்­கி­யது. இவ்­வி­ட­யத்தில் ஜனா­தி­பதி தலை­யிடும் போது அதுவும் அர­சி­ய­ல­மைப்­பினை மீறும் ஒரு செய­லாகும். பௌத்த மதத்­திற்கு முத­லிடம் என்று கூறு­வதன் மூலம் பௌத்த தேரர்கள் எத­னையும் செய்­யலாம் என்று அர்த்­தப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய சூழலில் ஞான­சார தேரரை ஏன் விடு­தலை செய்ய வேண்டும்? அதற்­கான அவ­சி­யமும் என்ன? இதன் மூலம் ஜனா­தி­பதி சிறி­சேன ராஜ­பக்­ச­வுக்கு சவால் ஒன்றை வெளிப்­ப­டுத்த முனைந்­துள்ளார். மருத்­துவ சிகிச்­சையில் இருக்கும் கோட்­டா­ப­ய­வுக்கு எதுவும் நடந்தால் தன்னால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முடியும் என்று அவர் இந்த செயற்­பாட்­டி­னூ­டாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எங்கு ஆலோ­ச­னை­களைப் பெறு­கின்­றாரோ தெரி­ய­வில்லை. அர­சி­ய­ல­மைப்­பினை இரண்டு தட­வைகள் அவர் மீறி­யி­ருக்­கின்றார். ஜனா­தி­பதி இப்­ப­த­வி­யி­லி­ருந்து விலகும் போது அவ­ருக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடியும்.

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு நீங்கள் உட்­பட சிவில் சமூ­கத்­தி­னரின் ஆத­ரவும் அனு­ச­ர­ணையும் மிக அதி­க­மாக இருந்­தன. இந்த வகையில் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் அர­சாங்­கத்தின் தோல்வி என்­பது உங்கள் சார்ந்த தரப்­பு­க­ளி­னதும் தோல்­வி­யாகும். இந்த தோல்­விக்­கான கார­ணங்கள் எவை என்று கரு­து­கின்­றீர்கள்?

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது நாங்கள் மிகுந்த நம்­பிக்கை வைத்து செயற்­பட்­டது உண்மை தான். நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­னூ­டாக சில சாத­க­மான மக்­க­ளுக்கு பயன் தரும் மாற்­றங்­களைக் கொண்டு வரவும் எங்­களால் முடிந்­தது. கடந்த 4 ஆண்­டு­களில் அவ்­வாறு நிறை­வேற்ற முடிந்த சாத­க­மான அம்­சங்­க­ளாக தகவல் அறியும் உரிமைச் சட்டம், 19வது திருத்தம், பல பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்கள் என்­ப­ன­வற்றை குறிப்­பிட முடியும். ஆனால் இவற்றை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தி விளக்­க­ம­ளிக்கும் தொடர்­பாடல் பொறி­முறை ஒன்­றி­ருக்­க­வில்லை. இதனால் மக்­க­ளிடம் இந்த செயற்­பா­டுகள் சரி­யான முறையில் சென்­ற­டை­ய­வில்லை. அதனால் அவர்­க­ளினால் நல்ல மாற்­றங்­களை உணர முடி­ய­வில்லை.

அர­சியல் கட்­சிகள் போன்று சிவில் சமூகக் குழுக்­க­ளிலும் பல­த­ரப்­பட்ட முரண் நிலைகள் உள்­ளன. எனினும் மைத்­தி­ரி­பால ஆட்­சிக்கு வந்­த­வுடன் நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி நீக்கம், தகவல் அறியும் உரிமை சட்டம் என்­பன பற்றி பேசினார். ஆனால் சிவில் சமூகம் என்ற வகையில் இந்த மறு­சீ­ர­மைப்பு பணிகள் அனைத்­தையும் பற்றி நாம் கடந்த 25 ஆண்­டு­க­ளாக வலி­யு­றுத்தி வந்தோம். இதன்­படி எனது கருத்து என்­ன­வெனில் சிவில் சமூகக் குழுக்கள் நிகழ்ச்சி நிரலை தயா­ரிக்க அதனை அமுல்­ப­டுத்தும் பணி­களை அர­சியற் கட்­சி­களே முன்­னெ­டுக்க வேண்டும். சிவில் சமூ­கத்­தி­னரால் மேடை­களை மட்­டுமே அமைத்துத் தர முடியும். 2014ஆம் ஆண்டு இவ்­வா­றான ஒரு காலப்­ப­கு­தியில் நாங்கள் இந்த நிகழ்ச்சி நிரலை முன்­வைத்த வேளை இலங்­கையில் இதற்­கெல்லாம் சாத்­தி­யமே இல்லை என்று பலரும் கைக்­கொட்டி சிரித்­தனர். ஆனால் இவற்றில் சில பணி­க­ளை­யா­வது எங்­களால் நிறை­வேற்ற முடிந்­தது. மற்­றைய பெரும் பிரச்­சினை ரணில்- சிறி­சேன முறுகல் நிலை­யாகும்.

நல்­லி­ணக்கம் என்­பது முற்­றிலும் குழம்பிப் போயி­ருக்­கின்ற இலங்­கையில் எதிர்­கா­லத்தில் நல்­லி­ணக்கம், இனங்­க­ளுக்­கி­டையே சக­வாழ்வு என்ற விட­யங்­களை எப்­படி கையாளப் போகின்­றீர்கள்?

முதலில் மக்­க­ளுக்கு சிறந்த முறையில் இவற்றை பற்றி தெளி­வு­ப­டுத்த வேண்டும். ஏன் எமது நாட்­டிற்கு நல்­லி­ணக்கம் அவ­சியம்? எவ்­வாறு இதனை வேறு நாடு­களில் செய்­தி­ருக்­கின்­றார்கள்? என்­பது பற்­றி­யெலாம் நாம் மக்­க­ளுடன் பேச வேண்டும்.

எனது கண்­ணோட்­டத்­தின்­படி இதற்கு குறு­கிய கால தீர்­வில்லை. நீண்ட கால செயற்­பா­டு­க­ளான நாட்டின் கல்­வித்­து­றையில் மாற்றம் செய்­வது போன்ற பல்­வேறு விட­யங்கள் உள்­ளன. இதன்­படி இன்றோ நாளையோ நாட்டில் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது. ஆனால் அர­சாங்கம் இந்த விட­யத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி அதற்கு தலைமை தாங்கி செயற்­ப­டு­மாயின் அந்த மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடியும். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வெண்­தா­மரை இயக்கம் போன்ற திட்­டங்­களே தற்­போது எமக்கு தேவை.

நல்­லி­ணக்க செய­லணி குறு­கிய காலத்தில் அமுல்­ப­டுத்தக் கூடிய நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் பற்­றிய பரிந்­து­ரை­க­ளையும் நீங்கள் முன்­வைத்­தி­ருந்­தீர்கள். அந்த பரிந்­து­ரைகள் ஏதேனும் அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­னவா?

நாங்கள் 50 பரிந்­து­ரைகள் அடங்­கிய அறிக்­கை­யினை அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்­தி­ருந்தோம். ஆனால் அதனை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அர­சாங்கம் ஏற்றுக் கொள்­ள­வில்லை. நாம் அதில் பொறுப்புக் கூறல் என்ற விட­யத்­தினை பற்­றியும் தெரி­வித்­தி­ருந்தோம். ஆகக்­கு­றைந்­தது ஒரு சர்­வ­தேச நீதி­ப­தி­யா­வது ஒவ்­வொரு வழக்கின் விசா­ர­ணை­களின் போதும் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றும் தெரி­வித்­தி­ருந்தோம். அப்­பொ­ழுது தான் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­பிக்கை வரும். நாம் அவர்­க­ளிடம் சென்று பேசும் போது நம்­பிக்கையற்றிருக்கும் எங்­க­ளுக்கு நம்­பிக்கை தரும் விதத்தில் எத­னை­யா­வது செய்து காட்­டுங்கள் என்று கூறி­யி­ருந்­தனர். இதன்­படி ஒரு வழக்­கிற்கு ஆகக் குறைந்­தது ஒரு சர்­வ­தேச நீதி­பதி என்ற அடிப்­ப­டையில் முதலில் செயற்­பா­டு­களை ஆரம்­பிக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரின் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பிய பின்னர் அவர்­களை அவ­ரவர் நாடு­க­ளுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியும். ஆனால் இந்த பரிந்­து­ரையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நாட்டின் இறை­மைக்கு பாதிப்பு என்றும், படை­யி­னரைக் காட்டிக் கொடுக்க முடி­யாது என்றும் அர­சாங்கம் எதிர்ப்பு தெரி­வித்­தது. ஆதலால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எமது பரிந்­து­ரை­களை அர­சாங்கம் ஏற்றுக் கொள்­ள­வில்லை. இப்­பொ­ழுது நிலை­மா­று­கால நீதியின் கீழ் எங்­க­ளுக்கு காணாமல் போனோர் அலு­வ­ல­கமும், இழப்­பீட்­டுக்­கான அலு­வ­ல­கமும் (Of­fi­ce of rep­a­r­a­t­ions), உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவும் மட்­டுமே உள்­ளது.

காணாமல் போனோர் அலு­வ­லகம் சரி­யான முறையில் இயங்­கு­வ­தற்கு சில உத­வி­களை அர­சாங்கம் செய்ய வேண்டும். தட­ய­வியல் நிபு­ணர்­களை ஈடு­ப­டுத்­துதல், ஆட்­களை பயிற்­று­விக்கும் பணி­களை மேற்­கொள்ளல் ஆகிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். மற்றும் காணாமல் போனோர் சம்­பந்­த­மாக சுமார் 20 ஆயிரம் கோப்­புகள் உள்­ளன. எங்­கி­ருந்து இந்த கோப்­புகள் தொடர்­பான விசா­ர­ணை­களை ஆரம்­பிப்­பது ஆகிய தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது. இவற்றை விரை­வாக செய்து முடிக்­கலாம். ஆனால் அவ்­வாறு செய்தால் அது சரி­யான நட­வ­டிக்­கை­யாக அமைய மாட்­டாது. ஆனால் இது ஒரு நிரந்­தர அலு­வ­லகம். எந்த அர­சாங்கம் வந்­தாலும் அது இயங்கும்.

எவ்­வா­றா­யினும் குறு­கிய காலத்தில் அமு­லாக்கக் கூடிய பரிந்­து­ரை­களும் அதில் இருந்­தன. அதற்கு அரசியல் அர்ப்பணிப்பு தன்மை அவசியம். அரசியலமைப்பு திருத்தங்களை விரைவாக செய்ய முடியும். அவற்றை காலம்தாழ்த்துவதால் தான் பிரச்சினை. இவற்றை அமுல்படுத்தியிருந்தால் நாட்டில் மீண்டும் ஓர் பதற்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற சம்பவத்தினை தடுத்திருக்கலாம். இதன்படி நல்லிணக்க செயலணியிலிருந்த ஓர் உறுப்பினர் என்ற ரீதியில் நான் விரக்தியுற்ற மனநிலையிலேயே இருக்கின்றேன். அதிக உழைப்புடனும் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் நாம் இந்த பணியினை நாட்டிற்காக செய்திருந்தோம்.

நாட்டில் இனங்களுக்கிடையே சகவாழ்வினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதில் இலங்கை மக்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

தத்துவ அறிஞரான மார்கலிட்(Margalit) கூறிய ஒரு விடயத்தினை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். (A decent society or civilized society is one whose institutions do not humiliate the people under their authority and whose citizens do not humiliate one another )அதாவது அனைத்து இன மக்களும் மற்றைய இன மக்களை மதிக்க வேண்டும். அவரவர்களின் அடையாளத்திற்கு கௌரவமளிக்க வேண்டும். பல்லின சமூகமே இலங்கையினை வளப்படுத்தியது என்பதனை நாம் மறந்து விட முடியாது. நாம் இந்த வேறுபாடுகளையும், தனித்துவத்தையும் மதித்து பேண வேண்டும். அனைத்து மக்களினதும் அடிப்படை மனித உரிமைகளை மதிப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும். இதன்படி சமத்துவமும், கௌரவமுமே (Equality and Dignity) இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அரபு வசந்தத்தின் பின்பு மத்திய கிழக்கு நாடுகளில் டியூனிசியா, தென்னாபிரிக்கா, ருவாண்டா, தென் அமெரிக்காவில் சிலி முதல் ஆர்ஜன்ரீனா வரை நாடுகளை நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்த நாடுகளுக்கு உதாரணங்களாகும். இலங்கையும் அந்த பாதையில் பயணிக்க வேண்டும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.