லிபியா சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகுமா?

0 1,283

வட ஆபி­ரிக்க நாடு­களில் ஒன்­றான லிபி­யாவில் 34 ஆண்­டுகள் அதி­ப­ராக இருந்த கடா­பிக்கு எதி­ராக 2011 ஆம் ஆண்டு அங்கு உள்­நாட்டுப் போர் வெடித்­தது. அவர் ஆட்­சியில் இருந்து அகற்­றப்­பட்­ட­தோடு, கிளர்ச்­சி­யா­ளர்­களால் கடத்தி கொலை செய்­யப்­பட்டார். அத்­துடன் உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. ஆத­ர­வுடன் தேசிய இடைக்­கால பேர­வையின் கீழ் ஆட்சி அமைந்­தது. எனினும் அங்கு தொடர்ந்து அர­சி­யலில் நிலை­யற்ற தன்மை உரு­வா­னது. இதனால் அதே ஆண்டு லிபி­யாவில் மீண்டும் அர­சுக்கு எதி­ராக உள்­நாட்டுப் போர் மூண்­டது.

அல்­கைதா மற்றும் ஐ.எஸ். உட்­பட பல்­வேறு பயங்­க­ர­வாத அமைப்­பு­களும் அங்கு காலூன்­றின. அர­சுக்கு எதி­ராக போராடி வரும் புரட்­சி­கர லிபிய இரா­ணு­வத்தின் தள­பதி கலிபா ஹப்­தரின் படைகள் பெங்­கா­சியில் இருந்த அல் கைதாவை விரட்­டி­விட்டு அதை கைப்­பற்­றிக்­கொள்ள, மிஸ்­ரா­தாவில் உள்ள படைகள் ஐஸ் ஐஸை தோற்­க­டித்து சிர்தே நகரை கைப்­பற்­றிக்­கொண்­டார்கள். இந்த நிலையில் தனது படை­களை தலை­நகர் திரி­போ­லியை நோக்கி முன்­னே­றும்­படி கடந்த ஏப்ரல் மாதம் கலிபா ஹப்தர் உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

இதை­ய­டுத்து ஐ.நா. ஆத­ரவு பெற்ற அரசு படை வீரர்கள் திரி­போ­லியில் குவிந்­தனர். புரட்­சி­கர லிபிய இரா­ணு­வத்­தி­னரும் அங்கு விரைந்­தனர். இரு­த­ரப்­புக்கும் இடையே நடந்த கடு­மை­யான மோதலில் இது­வரை 21 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அரசு தரப்பில் கூறப்­பட்­டுள்­ளது. மோதலில் 14 வீரர்­களை இழந்­து­விட்­ட­தாக புரட்­சி­கர லிபிய இரா­ணுவம் கூறு­கி­றது. மேலும் 100 க்கும் மேற்­பட்டோர் காயம் அடைந்­தி­ருப்­ப­தா­கவும் அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இரு­த­ரப்­பினர் இடை­யி­லான கடு­மை­யான மோதல் கார­ண­மாக தலை­நகர் திரி­போ­லியில் பதற்­ற­மான சூழல் நீடிக்­கி­றது. இதற்­கி­டையில் திரி­போ­லியின் தெற்கு பகு­தியில் உள்ள இரா­ணுவ தளத்தை புரட்­சி­கர லிபிய இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். அவர்­க­ளிடம் இருந்து இரா­ணுவ தளத்தை மீட்கும் முயற்­சியில் அரசு படைகள் ஈடு­பட்­டுள்­ளன.

வட ஆபி­ரிக்கா நாடான லிபியா உலகின் செல்­வ­மிக்க பத்து எண்ணெய் உற்­பத்தி நாடு­களில் லிபியா ஒன்­றாகத் திகழ்­கி­றது. உலக உற்­பத்­தியில் 2% லிபி­யா­வி­னு­டை­ய­தாகும். அதிபர் கடா­பியின் ஆட்சிக் கவிழ்ப்­புக்கு முன்­பு­வரை லிபி­யாவின் தேசிய எண்ணெய்க் கழகம் அமெ­ரிக்க ஐரோப்­பிய ஏக­போக எண்ணெய் நிறு­வ­னங்­களை அகழ்வு சுத்­தி­க­ரிப்புப் பணி­களில் ஈடு­ப­டுத்தி வந்த போதிலும் அர­சு­ட­மை­யாக்­கப்­பட்ட அந்­நி­று­வனம் சுயேச்­சை­யாக எண்ணெய் வர்த்­த­கத்தை நடத்தி வந்­தது. ஐரோப்­பிய எண்ணெய்க் கழ­கங்­களின் நிர்ப்­பந்தம் ஒரு­புறம் இருந்­தாலும், முற்­றாக ஐரோப்­பிய சந்­தையை மட்­டுமே நம்­பி­யி­ருக்க முடி­யாது என்று கரு­திய லிபியா எண்ணெய் அகழ்வு சுத்­தி­க­ரிப்பு, வர்த்­தகம் முத­லா­ன­வற்றில் சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடு­க­ளையும் அனு­ம­தித்­தது. இதனால் ஐரோப்­பிய எண்ணெய்க் கழ­கங்­களின் நிர்ப்­பந்­தங்கள் லிபி­யாவில் செல்­லு­ப­டி­யா­க­வில்லை.

எண்ணெய் ஏற்­று­மதி செய்யும் நாடுகள் அமைப்­பிடம்(OPEC) தமது நாட்டின் எண்ணெய் விலையை டாலரில் அல்­லாமல் தினாரில் தீர்­மா­னித்து, அதன்­படி வழங்­கு­மாறு கடாபி கோரி­வந்தார். நாட்டின் செல்­வத்தை டாலரில் அல்­லாமல் தினாரில் சார்ந்­தி­ருக்கச் செய்ய அவர் முயற்­சித்தார். அந்­நிய கட­னு­த­வியைச் சார்ந்­தி­ராமல் நிலத்­தடி நீர் திட்­டங்­களை அவர் நிறை­வேற்ற முயற்­சித்தார். வளை­குடா நாடு­களின் சில வங்­கி­களைத் தவிர, மேற்­கத்­திய சர்­வ­தேச ஏக­போக வங்­கி­களை லிபி­யாவில் நுழைய அவர் அனு­ம­திக்­க­வில்லை. டாலரை மைய­மாகக் கொண்ட ஏகா­தி­பத்­திய நிதி மூல­தன ஆதிக்­கத்தின் கீழ் லிபியா வரா­ததும், எண்ணெய் வளங்­களும் வர்த்­த­கமும் முழு­மை­யாக ஐரோப்­பிய ஏகா­தி­பத்­தியக் கொள்­ளைக்குத் திறந்­து­வி­டப்­ப­டா­ம­லி­ருந்­ததும் ஏக­போக எண்ணெய் நிறு­வ­னங்­க­ளுக்கு பெரும் இடை­யூ­றாக இருந்­தன.

இந்­நி­லையில், பிரிட்­டனின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வர்த்­தக நிறு­வ­ன­மான விடோல், லிபி­யாவின் எண்ணெய் வர்த்­த­கத்தைக் கைப்­பற்றத் துடித்­தது. இதற்­காக பிரிட்­டிஷின் அன்­றைய அனைத்­து­லக வளர்ச்­சித்­துறை அமைச்­ச­ரான அலன் டங்­க­னுடன் அடிக்­கடி பேச்­சு­வார்த்தை நடத்தி வந்­தது. இவர் அமைச்­ச­ரா­வ­தற்கு முன், விடோல் நிறு­வ­னத்தின் ஆலோ­ச­க­ராகச் செயல்­பட்­ட­வ­ராவார். இன்­னொ­ரு­புறம், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் வர்த்­தக நிறு­வ­னங்­களும் லிபியா மீது குறி­வைத்­தன. எண்ணெய் நிறு­வ­னங்­களின் நோக்கம் இந்­நாட்டு அர­சு­களின் கொள்­கை­யாக மாறி­யது. பிரிட்­டனும் பிரான்சும் லிபி­யாவில் கடா­பியின் ஆட்­சியை நீக்­கி­விட்டு, தமது விசு­வாச ஆட்­சியைக் கொண்­டு­வர சந்­த­ரப்பம் பார்த்­தி­ருந்­தன.

லிபி­யாவில் அரபு வசந்தம் ஒரு பெரும் உள்­நாட்டுப் போராக வெடித்­தது. கடா­பியைப் பத­வியில் இருந்து வெளி­யேற்றத் துடித்த மேற்கு ஐரோப்­பிய நாடுகள் சந்­தர்ப்­பத்தை தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர். இதற்­க­மைய நேட்டோ தலை­மை­யி­லான கூட்டுப் படை­யினர் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உத­வி­களைத் தாரா­ள­மாக வழங்­கினர். கடாபி மற்றும் அவ­ரது உற­வி­னர்­களின் வெளி­நாட்டுச் சொத்­துக்கள் அனைத்தும் முடக்­கப்­பட்­டன. அவ­ரது படை­யி­ன­ருக்கு எதி­ராக போர் விமானத் , ஏவு­கணைத் தாக்­கு­தல்­களைத் தொடுத்து அவரை ஆட்­சியில் இருந்து அகற்றிக் கொள்ள வழி வகுத்­தன.

லிபி­யாவின் தேசிய இடைக்­காலப் பேரவை தேசிய அர­சாங்கம் (Government of National Accord – GNA) லிபிய எழுச்­சியை தொடர்ந்து கடா­பிக்கு எதி­ரான இயக்­கத்­தினர் அமைத்த அரசு அமைப்பு ஆகும். இதன் உரு­வாக்கம் 27 பெப்­ர­வரி 2011 அன்று பெங்­கா­சியில் அறி­விக்­கப்­பட்­டது. லிபி­யாவில் ஓர் முறை­யான அர­ச­மைப்பு ஏற்­ப­டும்­வரை இப்­பே­ர­வையே சட்­ட­பூர்வ அர­ச­மைப்­பாக சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்­றுள்­ளது. ஐக்­கிய நாடுகள் அவை­யிலும் லிபி­யாவின் இடத்தை பெற்­றுள்­ளது. அரபு நாடுகள் கூட்­ட­மைப்பு மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின். அங்­கீ­கா­ரத்­தையும் பெற்­றுள்­ளது. எனினும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யான கலிபா ஹப்தர் அதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. கடா­பிக்கு பிறகு ஆயுத குழுக்­களை இணைத்து உரு­வாக்­கப்­பட்ட இரா­ணு­வத்தின் முக்­கிய தலை­வர்கள் ஹப்­தரை ஆத­ரிக்க அவரின் அணி லிபியா தேசிய இரா­ணுவம் (Libya National Army – LNA) என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.

இந்த இரு அணி­க­ளையும் இணைக்க பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இதற்கு உள்­நாட்டு பிரச்­சி­னை­களை விட வெளி­நாட்டு அழுத்­தங்­களே கார­ண­மாகும். GNA இற்கு ஐ.நா., மேற்கு நாடு­க­ளுடன் துருக்கி, கட்டார் மற்றும் தியூ­னி­சியா போன்­றவை ஆத­ரவை வழங்க, LNA இற்கு ரஷ்யா, பிரான்ஸ், எகிப்து , ஐக்­கிய அமீ­ரகம் மற்றும் சவூதி அரே­பியா போன்­றவை ஆத­ரவை வழங்­கு­கின்­றன. லிபி­யாவின் GNA, தூனி­சியா மற்றும் அல்­ஜீ­ரியா போன்ற நாடுகள் ஒரு கூட்­ட­ணி­யாக செயற்­பட வாய்ப்­பி­ருப்­பதால். அந்த கூட்டு கலீபா ஹப்­தரின் மீதான அழுத்­தத்தை அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. ஆகவே அதற்கு முன்னர் திரிப்­போ­லியை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வதே அவ­ரது இலக்­காக இருக்­கி­றது.

அயல் நாடு­க­ளான தூனி­சி­யா­விலும், எகிப்­திலும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கெ­தி­ரான மக்கள் எழுச்சி இடம்­பெற்­ற­தனால் லிபி­யா­வையும் அதன் தொடர்ச்­சி­யாக நோக்­கு­வது தவ­றா­னது. அந்த நாடு­களில் வீதிக்கு வந்து போரா­டிய மக்கள், அரச அடக்­கு­மு­றையை அஹிம்சை வழியில் எதிர்த்து நின்­றனர். இரா­ணு­வத்தை பகைப்­பதும், திருப்பித் தாக்­கு­வதும் போராட்­டத்தை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கை­யாக கரு­தி­னார்கள். சுடு­வ­தற்கு மட்­டுமே பயிற்­றப்­பட்ட படை­க­ளையும், கன­ரக ஆயு­தங்­க­ளையும், கண்டு அஞ்­சாது வெறுங்­கை­யுடன் எதிர்த்து நின்­ற­தா­லேயே உலக மக்­களின் அனு­தா­பத்தை பெற்­றார்கள்.

லிபி­யா­விலோ நிலைமை வேறு வித­மாக இருந்­தது. மக்கள் எழுச்சி ஏற்­பட்ட முதல் நாளி­லேயே சில ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கைகளில் ஆயு­தங்கள் காணப்­பட்­டன. ஆர்ப்­பாட்டம் தொடங்கி ஒரு சில நாட்­க­ளி­லேயே, நவீன ஆயு­தங்கள் புழக்­கத்­திற்கு வந்­தன. ஊட­கங்கள் கதை புனைய ஆரம்­பித்­தன. லிபிய இரா­ணுவம் முழு­வதும் ஆர்ப்­பாட்டக் காரர்கள் பக்கம் சேர்ந்து விட்­டது போன்ற அர்த்தம் தொனிக்கும் செய்­தி­களைக் கூறின. கடாபி ஆபி­ரிக்க கூலிப்­ப­டை­களை அனுப்பி ஆர்ப்­பாட்­டத்தை ஒடுக்­கிய கதை பரப்பப் பட்­டது. ஆனால் ஓரிரு வாரங்­களில் கிளர்ச்­சி­யாளர் கட்­டுப்­பாட்டில் இருந்த நக­ரங்­களை, கடா­பிக்கு விசு­வா­ச­மான படைகள் சண்­டை­யிட்டு மீட்­டன.

துனி­சி­யா­விலும், எகிப்­திலும் உணவு விலை­யேற்­றத்தை எதிர்த்து தான் மக்கள் எழுச்சி பெற்­றனர். லிபி­யாவில் அது போன்ற நிலைமை இருக்­க­வில்லை. ஏற்­க­னவே லிபிய அரசு அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்கள் மீதான வரியை இரத்துச் செய்­தி­ருந்­தது. மேலும் உணவுப் பொருள் விலை­யேற்­றத்தால் வாழ முடி­யாமல் கஷ்­டப்­படும் ஏழைகள் யாரும் லிபி­யாவில் கடா­பியின் ஆட்­சியில் இருக்­க­வில்லை. ஜன­நா­யகக் கோரிக்கை லிபி­யாவில் ஓர­ள­வுக்கு இருந்து வந்­தது என்­பதும், மக்­களில் ஒரு பிரி­வினர் கடா­பியின் மேலான நம்­பிக்­கையை இழந்­தி­ருந்­தனர் என்­பதும் உண்மை தான். ஆனால், துனீ­சியா, எகிப்து உள்­ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்­லாது லிபி­யாவில் பெரு­ம­ள­வி­லான மக்கள் போராட்­டங்­களோ எதிர்ப்­பு­களோ உரு­வா­கி­வி­ட­வில்லை.

பொதுவில் நீண்ட நாட்­க­ளாக மக்­க­ளுக்­கான ஜன­நா­ய­கத்தை கடாபி மறுத்து வந்­துள்ளார். மொத்த நாட்­டையும் அதன் பொரு­ளா­தா­ரத்­தையும் அவ­ரது குடும்­பமே கட்­டுப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கி­றது. ஆனால், அடிப்­ப­டையில் வேறு ஒரு முக்­கி­ய­மான அம்­சத்தில் கடாபி மற்­ற­வர்­க­ளிடம் இருந்து வேறு­பட்டார். அது தன் தேசத்தின் வளங்­களை மேற்­கத்­திய ஏகா­தி­பத்­தி­யங்­களின் கைகளில் முழு­மை­யாக ஒப்­ப­டைக்­காமல் இருந்­தது தான். ஈராக்கின் அமை­தி­யின்­மையைத் திட்­ட­மிட்டு உரு­வாக்­கிய அமெ­ரிக்கா, மத்­திய கிழக்கைத் தன் முழுக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வரும் வாய்ப்­பாக அதைக் கரு­தி­யது. சதா­முக்கு அடுத்த எதி­ரி­யாகப் பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்­டி­ருந்த லிபி­யாவின் கடாபி இருந்தார்.

அமெ­ரிக்க இரட்டை கோபுர தாக்­கு­தலை அடுத்து தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான போர் எனும் பெயரில் தன் எதிரி நாடு­களை வேட்­டை­யாட அமெ­ரிக்கா துவங்­கி­யி­ருந்த ஆரம்ப நாட்­களில் லிபி­யா­வையும் தனது நாடுகள் பட்­டி­யலில் சேர்த்­தி­ருந்­தது. ஆப்கான், ஈராக்கைத் தொடர்ந்து தனது ஆக்­கி­ர­மிப்பு பட்­டி­யலில் லிபி­யாவை வைத்­தி­ருந்த நிலையில் வேறு நாடு­களின் ஆத­ரவு இல்­லாத நெருக்­க­டியில் கடாபி தன்­னிச்­சை­யாக அமெ­ரிக்க ஆத­ரவு நிலையை எடுக்கத் தள்­ளப்­ப­டு­கிறார்.

அவரே சுய­மாக முன்­வந்து தமது நாட்டின் அணு ஆயுதத் திட்­டங்­களைக் கைவி­டு­வ­தாக அறி­வித்­த­தோடு அல்­லாமல், அது தொடர்­பாக லிபியா சேக­ரித்து வைத்­தி­ருந்த தொழில்­நுட்ப விப­ரங்­க­ளையும் கரு­வி­க­ளையும் ஒப்­ப­டைக்­கவும் செய்­கிறார். மட்­டு­மல்­லாமல், அல்­கைதா அமைப்பைப் பற்­றிய மிக முக்­கி­ய­மான உளவுத் தக­வ­லையும், அணு ஆயுதக் கள்ளச் சந்தை பற்­றிய உளவுத் தக­வல்­க­ளையும் கூட அமெ­ரிக்க உளவுத் துறைக்கு கைய­ளிக்­கிறார். அதைத் தொடர்ந்து லிபியா திருந்தி விட்­ட­தாக அறி­விப்பு செய்யும் அமெ­ரிக்கா அதன் மேல் இருந்த பொரு­ளா­தாரத் தடை­க­ளையும் 2004 ஆம் ஆண்டே விலக்­கி­யது.

ஆக, தெளி­வாக ஒரு மேற்­கத்­திய ஆத­ரவு நிலையை கடாபி எடுத்த பின் இந்தப் போருக்­கான தேவை ஏன் எழுந்­தது? ஒரு பக்கம் கடா­பி­யோடு உற­வாடி வந்த நிலையில், இன்­னொரு பக்கம் அவரின் எதிர்ப்­பா­ளர்­களை அமெ­ரிக்­காவும் அதன் அல்­லக்கை நாடு­களும் ஏன் வளர்த்து விட வேண்டும்? லிபி­யர்­க­ளுக்கு ஜன­நா­ய­கத்தை வழங்­கு­வ­தற்­கா­கவே அப்­படிச் செய்­தார்கள் என்­பதை கிஞ்­சித்தும் ஒப்புக் கொள்ள முடி­யாது.

ஈராக் மற்றும் ஆப்­கானில் காலை விட்டு மாட்டிக் கொண்­டதைப் போல் அல்­லாமல் உள்­நாட்­டி­லேயே கூலிப்­ப­டை­யி­னரை உரு­வாக்கி லிபி­யாவை மறை­மு­க­மாக ஆக்­கி­ர­மித்த அமெ­ரிக்கா. மேலும், ஈராக் ஆப்கான் போல் அல்­லாமல், பிற­ரு­டைய பங்­கேற்­பு­டனும் செல­விலும் தனது போரை நடத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் உலக மேலா­திக்கக் கன­வுகள் நிறை­வேறத் தேவை­யென்றால் எந்த நாட்டின் மேலும் எப்­போது வேண்­டு­மா­னாலும் தனது இரா­ணு­வத்தை ஏவி விடலாம் என்­கிற ஒரு யதார்த்­தத்தை ஈராக் யுத்­தத்­திற்குப் பின் அமெ­ரிக்கா லிபி­யாவில் நிலை­நாட்­டி­யுள்­ளது.

லிபி­யாவில் உள்­நாட்டுப் போர் மூர்க்­க­மாக நடந்து வந்த நிலையில், அமெ­ரிக்கா மற்றும் நேட்டோ கூட்­ட­ணியின் வான்­வழி குண்­டு­வீச்சுத் தாக்­கு­தலை நியா­யப்­ப­டுத்த பென்­காசி நகரில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் அரசுப் படை­களால் படு­கொலை செய்­யப்­பட்­ட­தாக அப்­போ­தைய அமெ­ரிக்க அதிபர் ஒபாமா கூறி­யி­ருந்தார். ஈராக்கில் பேர­ழி­வுக்­கான ஆயு­தங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்று முன்பு அமெரிக்க அதிபராக இருந்த புஷ் ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்ததைப் போல லிபியா மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க புஷ் வழியில் ஒபாமா செயற்பட்டார். ஆனால், பென்காசி நகரில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக ஒபாமா கூறியதற்கும், ஊடகங்களால் பீதியூட்டப்பட்ட செய்திகளுக்கும் இதுவரை எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
இனப்படுகொலையும் மனித உரிமை மீறலும் ஒரு நாட்டில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி, சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படும் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் இனி நேரடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் என்பதும், லிபியாவைப் போன்ற கதி இனி உலகின் மூன்றாம் மண்டல நாடுகளிலும் நிகழும் என்பதும் இப்போது எழுதப்படாத விதியாகிவிட்டது.

கடாபியை ஆட்சியில் இருந்து அகற்றிய எதிரணிக்குள் எழுந்த உள்வீட்டு சண்டை எட்டு வருடங்கள் கழித்தும் தீர்ந்தபாடில்லாமல் தொடர்ந்து வருகிறது. கடாபிக்கு பின்னர் தடியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்ற அடிப்படையில் லிபியாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதாவது லிபியாவின் தற்போதைய நிலை சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.