“ஆர்மோனிய பெட்டிக்கு அழகு தமிழை அறிமுகப்படுத்திய பெருமை ஒரு கவிஞருக்கு உண்டென்றால், அது கண்ணதாசனுக்குத் தான் உண்டு” என சக கவிஞரான திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் மனந்திறந்து பாராட்டுகின்றார் என்றால் அது கவிஞர் கண்ணதாசன் என்ற பெருங்கவிஞரின் பெருமைக்குச் சான்று.
தமிழ்த் திரை இலக்கியத்தில் தத்துவம்–நகைச்சுவை–காதல்–சோகம்–பக்தி எனப் பல்துறை பாடல்களையும் எழுதி, புகழ் குவித்த கவிஞர் கண்ணதாசன் உரைநடை இலக்கியத்திலும் சாதனை படைத்தார். “ஏசுகாவியம்” எழுதி தமிழ்ப்பேசும் கிறிஸ்தவ சகோதரர்களின் பேராதரவையும், “அர்த்தமுள்ள இந்துமதம்” நூற் தொகுதிகளை எழுதி இந்துக்களின் அன்பையும் பெற்றுக் கொண்டார். அப்படியென்றால், தமிழ்ப்பேசும் முஸ்லிம்களுக்காக சமய சார்பாக எதுவும் எழுதவில்லை என்கிறீர்களா?
கவிஞர் கண்ணதாசன் ஆரம்ப காலங்களில் திராவிட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தபோது முஸ்லிம்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் இருந்தமையால் இஸ்லாத்தையும்–அதன் விழுமிய சிறப்புக்களையும் நன்கு அறிந்து –தெரிந்து–புரிந்து கொண்ட தெளிவு கவிஞரிடம் இருந்தமையால், முதலில் புனித குர்ஆனை பூந்தமிழில் மொழிமாற்றஞ் செய்யவே விழைவு கொண்டார். அதாவது “அர்த்தமுள்ள இந்துமதம்”–“ஏசுகாவியம்” இரண்டையும் எழுதமுன், குர்ஆனைத் தமிழுக்குத் தரவே கவிஞர் விரும்பினார்.
ஆனால்–கவிஞர் விரும்பியது நடக்கவில்லை. “ஏசுகாவியம்”–“அர்த்தமுள்ள இந்து மதம்” இரண்டும் வெளிவந்து விட்டன. முஸ்லிம்களின் புனித குர்ஆனை தமிழுக்கு மொழிபெயர்க்கும் கவிஞரின் முயற்சி ஏன் நடக்கவில்லை? அது அறிவுபூர்வமான ஒரு சிந்தனையோட்டத்தை ஏந்தியிருந்தமை, சமகால இலங்கையின் சிந்தனைக்கு விருந்தாகும்.
கவிஞர் கண்ணதாசன் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராகக் கொடி கட்டிப் பறந்த காலம். கவிஞரின் பாடல் வரிகள் பட்டித் தொட்டி எங்கும் முணுமுணுக்கப்பட்ட தருணம். கவிஞர் நினைத்ததை முடிக்கும் புகழ் குவிந்த வேளை. கவிஞர் கண்ணதாசன் தான் நடத்திய “தென்றல்” என்ற சஞ்சிகையில் முஸ்லிம்களின் புனித மறையான குர்ஆனை தமிழ்ப்படுத்தும் தன் ஆசையை வெளியிட்டார்.
செய்தி தமிழ் கூறும் நல்லுலகெங்கும் தென்றலாய் பரவிற்று. ‘பிரபலமான கவிஞர்–அருமையான முயற்சி–அழகு தமிழில் அறிவுப்பசிக்குத் தீனியாக வெளிவரும்’ எனத் தமிழ் உள்ளங்கள் எதிர்பார்த்தன. தமிழ் நாட்டு முஸ்லிம்கள் ‘நல்ல பணிதானே’ என்று பாராட்டிவிட்டு வாளாவிருக்கவில்லை. சிந்தித்தார்கள்; சீர்தூக்கிப் பார்த்தார்கள். ஒரு முடிவுக்கு வந்தனர். அம்முடிவை கவிஞர் முன் வைப்போம். கவிஞருடன் கலந்துரையாடுவோம். கருத்துப் பரிமாறுவோம். தெளிவு பிறக்கும் இன்ஷா அல்லாஹ் எனத் தீர்மானித்தனர்.
தீர்மானத்தின்படி கவிஞரை முஸ்லிம் அறிவு ஜீவிகளான உலமாக்கள் சிலர் சந்தித்தனர். கவிஞரோ இன்முகம் காட்டி, நன்மொழி பேசி வரவேற்று உபசரித்தார். கருத்துப் பரிமாற்றம் ஆரம்பமானது.
“கவியரசே….. நீங்கள் வெளியிட்ட ஆசை நியாயமானது. நாங்களும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக உங்களை மெச்சுகின்றோம்; புகழ்கின்றோம்; நன்றியும் தெரிவிக்கின்றோம். ஆனால், ஒரு சில சிக்கல்கள் மனத்தை சிணுங்கச் செய்கின்றன. அவற்றை உங்களின் மேலான கவனத்திற்குத் தருகின்றோம். அவை பற்றி நீங்கள் ஆழமாக சிந்தித்து முடிவெடுங்கள்” என முஸ்லிம் உலமாக்கள் முன்னுரை நிகழ்த்தினர்.
“என்ன சிக்கல் என்பதை மனந்திறந்து தெளிவாகச் சொல்லுங்கள்.
மெல்லாம் கூடிப் பேசி தெளிவு பெறுவோம்” எனக் கவிஞர் கூறி, சுதந்திரமான கருத்துக்களுக்கு வாசலைத் திறந்து வழிவிட்டார். தானொரு புகழ் பூத்த பெருங்கவிஞன் என்ற பம்மாத்து சிறிதுமின்றி இடமளித்தார்.
“கவியரசரே…. எங்களது திருமறை குர்ஆன் மனிதனால் எழுதப்பட்ட நூலன்று. அது வல்ல இறைவனால் வஹிமூலம் நபிகளாருக்கு அருளப்பட்ட இறைவேதம். அதனால் தானோ, என்னவோ அது அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை ஒரு வரியேனும்– ஒரு எழுத்தேனும்–ஒரு அட்சரமேனும் சேர்க்கப்படவோ, நீக்கப்படவோ இல்லை….”
“…..இது முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்ட வேதமல்ல. முழு மனித சமுதாயத்திற்காகவும் அருளப்பட்ட வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கென இறக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத்திட்டம். அதனால் இது முழு உலக மனிதர்களுக்கும் கிடைக்கத்தக்க விதத்தில் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் மாற்றப்பட வேண்டியது அவசியமே. அந்த வரிசையில் நம் தேன் தமிழிலும் இக்குர்ஆன் மொழி மாற்றம் செய்யப்படுவது வரவேற்கத்தக்க முயற்சியே! ஆனால்……..” என நீட்ட……
“தயக்கமின்றி சொல்லுங்கள்….” எனக் கவியரசர் வாசலை அகலத் திறந்தார்.
“நீங்கள் தமிழ்க்கவிஞர். உங்களுக்குத் தமிழ்ப்புலமை பாண்டித்தியம் எல்லாம் உண்டு. குர்ஆன் அரபுமொழியில் இறக்கப்பட்ட வேதம். உங்களுக்கோ அரபு தெரியாது. அரபு மொழி வாசிக்க–எழுத மட்டும் தெரிந்தாலும் போதாது. அம்மொழியில் நன்கு பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்……”
“அரபு மொழி நம் தமிழ் போல தொன்மையான மொழி. சொல்வளம் மிக்க மொழி. சில பொருட்களுக்கு அரபியில் நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் கூட இருக்கின்றன. ஒட்டகத்திற்கு மட்டும் ஆயிரம் சொற்கள் வரை இருக்கின்றன. ஆயிரம் சொற்களுக்கும் ஆயிரம் கருத்துக்கள் இருக்கின்றன. இந்த சொற்களின் சிலவற்றுக்கு வரலாற்றுப் பின்னணியில் தான் அசலான உருவங்கள் இருக்கின்றன…”
“அத்தகைய அசலான சொற்களின் முழு வடிவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கோ அரபு மொழியும் தெரியாது; அரபு மொழியில் பாண்டித்தியமும் இல்லை. வரலாற்றுப் பின்னணியும் புரியாது. இந்நிலையில் குர்ஆனை தமிழ்ப்படுத்துவது எங்ஙனம் சாலும்? என சிந்தியுங்கள்” எனக் கூறிய உலமா அமைதியானார்.
இவற்றை எல்லாம் செவிமடுத்த செந்தமிழ்க் கவிஞரும் சிந்திக்கலானார். சிறிது நாழிகை அவர்களிடையே அமைதியாகக் கழிந்தது. அமைதியை கிழித்துக் கொண்டு, “நீங்கள் சொல்லிய எந்தத் தகுதியுமே எனக்கில்லை. வரலாற்றுப் பின்னணி புரியாமல் சொற்களுக்குப் பொருள் தேடுவது முடியாத காரியம். இது விரலை சுட்டுக் கொள்ளும் முயற்சி. நான் இம்முயற்சியை கை விடுகிறேன்…” எனக் கூறலானார் கவிஞர் கண்ணதாசன்.
என்னே பெருந்தன்மை! தனது தகுதியைத் தொட்டுக்காட்டியதை – தானொரு நாடறிந்த கவிஞன் என்ற மமதையோ, ஈகோ உணர்வோ சிறிதுமின்றி ஏற்றுக் கொண்ட அந்த மனம், எவ்வளவு விசாலமானது? தானொரு ‘உலக மகா கவிஞன்’ என்பதை அழகாக அடையாளப்படுத்தி விட்டார் கவியரசர் கண்ணதாசன்.
வரலாற்றுப் பின்னணி புரியாமல், ஒரு சொல்லுக்குப் பொருள் தேடும் அரைவேக்காட்டு மனிதர்கள், கவிஞரின் வார்த்தைகளை சிந்திப்பார்களாக!
இந்த சம்பவத்தின் மூலம் மட்டுமா தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் மனங்களில் கவிஞர் கண்ணதாசன் இடம் பிடித்தார். இன்னொரு விடயமும் உண்டு. அதன் மூலமும் முஸ்லிம்கள் நெஞ்சங்களில் கவிஞர் ஆசனம் போட்டு அமர்ந்துள்ளார். அது என்ன விடயம்?
கவிஞருக்கு மிக நெருக்கமான முஸ்லிம் நண்பர்கள் “உங்களது அழகுத் தமிழால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டும்” என அன்புத் தொல்லை செய்து நச்சரித்தமையால், என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் குர்ஆனின் தலைவாசல் எனத்தகும் ஸூரத்துல் பாஃத்திஹா (அல்ஹம்து) வின் ஏழு வசனங்களையும் கவிஞர் தமிழ்க் கிண்ணத்தில் தந்துள்ளார். நீங்களும் அவற்றை சுவைத்துப் பாருங்கள். “திறப்பு” எனும் தலைப்பில் கவிஞர் தந்த தமிழ் வரிகள் இதோ…
எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லா(ஹ்)வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்;
உலகமெல்லாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லா(ஹ்)வே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;
அவன் அருளாளன் அன்புடையோன்
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்
உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகின்றோம்;
நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார்மீது சொரிந்தனையோ,
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்திவிடு;
எவர்மீது உன்கோபம்
எப்போதும் இறங்கிடுமோ,
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ,
அவர்களது வழிவிட்டு
அடியவரைக் காத்துவிடு!
——
“சத்திய எழுத்தாளன்” கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர்கனி
vidivelli