இலங்கையில் தற்போது, ஐஸீஸீபிஆர் சட்டமூலத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சட்ட மூலம் குறித்து எதிரும் புதிருமான வாதப்பிரதி வாதங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து பீபீஸீ சிங்கள சேவை, ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்த லால் த சில்வாவுடன் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.
சிங்களத்தில்: தஹமி ரணவீர
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
ஐ.ஸீ.ஸீ.பி.ஆர். சட்டமூலம் என்றால் என்ன?
2007– 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் (ICCPR). உள்நாட்டு யுத்த காலத்தைப் போன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்ற கைதுகள் தொடர்பாக ஐஸீஸீபிஆர் சட்டமூலம் குறித்து பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த சட்டமூலத்தின் அடிப்படை விதியாக அமைவது, “சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயமானது, யாப்பில் உள்ளடக்கப்பட்டில்லாத மனித உரிமைகளுக்குப் பொருத்தமான யாப்பதிகாரம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதோடு, அதனுடன் தொடர்பான அல்லது அதற்கனுசரணையாக அமையும் விதத்திலான சட்டதிட்டங்கள் உள்ளடக்கப்பட்டதான சட்டமூலமொன்றாகும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தில், இலங்கைப் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
30 வருடகால யுத்தத்தின் காரணமாக ஒரு சில அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. யுத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மீண்டும் அத்தகையதொரு நிலை உருவாகக்கூடாது என்பதற்காக சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சட்ட திட்டம் ஒன்றுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.
இந்த அடிப்படையிலேயே இலங்கையில் 2007 ஆம் ஆண்டு முதல் ஐஸீஸீபிஆர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடங்கப்படாதுள்ள மனித உரிமைகள் இதன்மூலம் உறுதிசெய்யப்படுகிறது.
1966 டிசம்பர் 16 ஆம் திகதி இச்சட்டம் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதொன்றாகும். 1976 மார்ச் மாதம் முதல் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச சமவாயத்தில் ஓர் உறுப்பு நாடாக இலங்கையும் இணைந்துள்ளது.
1980 ஜூன் 11 ஆம் திகதி மேற்படி சர்வதேச சமவாயத்தின் சட்ட திட்டங்களுக்கு உடன்பாடு தெரிவித்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் குறிப்பிடத்தக்க அளவை இலங்கை தனது அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது போன்றே பாராளுமன்றத்திலும் கொண்டுவந்து சட்டமாக அங்கீகரித்துள்ளது.
இதற்கு முன்னர் சிறிதளவுக்கேனும் யாப்பில் ஏற்கப்படாதிருந்த சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் ஐஸீஸீபிஆர் சட்டமூலம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சட்டமாக்கிக் கொள்வதற்கு அரசுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகளை இலங்கை மக்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமைகளை உறுதிசெய்து கொள்ளவும் இச்சட்டமூலம் வழிவகுத்துள்ளது.
இந்தச் சட்டமூலத்தால் மக்களுக்குப் பாதிப்பா?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த பிக்குகள் செய்த முறைப்பாடொன்றுக்கமைய விருதுபெற்ற எழுத்தாளரான சக்திக சத்குமார என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையொன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் பொதுமக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தக்கூடியதென்றே சக்திகவுக்கு எதிரான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் பொலிஸில் கைதியாகவே உள்ளார்.
இதேபோன்றே ரஹீம் மஸாஹினா அணிந்திருந்த நீண்ட மேலாடையின் பின் பகுதியில் “தர்ம சக்கரத்தின் வடிவிலான” சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறி ஹஸலக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
ஐஸீஸீபிஆர் சட்டமூலத்தின் ஷரத்தில் காணப்படும் கடுமையான சட்ட திட்டங்களுக்கமையவே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் பெரும்பாலானோர் இச்சட்ட மூலம் “மக்களைக் கட்டுப்படுத்தும்” ஒரு செயற்பாடாகவே கருதுகின்றனர். அதேபோன்றே தேவையற்ற விதத்தில் மக்களைக் கைதுசெய்வதற்கும் இச்சட்ட மூலம் பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சட்ட மூலத்தின் 3 (1) உறுப்புரையின் உள்ளடக்கம் பெரும்பாலும் மேற்படி கருத்துக்கு உரமிடுவதாகவுள்ளது. மேலே குறிப்பிட்ட கைதுகள் 3 (1) உறுப்புரையின் விதிகளுக்கமையவே இடம்பெற்றுள்ளன.
3 (1) உறுப்புரையில், எந்தவொரு நபராலும் யுத்தத்தைத் தூண்டவோ, வேறுபடுத்தும் விதத்தில் எதிர்வாதம் புரியவோ, அல்லது வன்முறைகளில் ஈடுபடுவதோ, ஒன்று திரளுவதோ, இன, மத குரோதங்களை முன்னெடுப்பதோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்றே, 3 ஆவது உறுப்புரையின் (4) ஆவது உப பிரிவில், “இந்த உறுப்புரையின் கீழ் உள்ள குற்றச் செயல் பாரதூரமானதும் பிணை வழங்கமுடியாததுமான குற்றமாகும். இத்தகைய குற்றச்சாட்டு புரிந்துள்ளதாக சந்தேகப்படும் அல்லது முறைப்பாடு சுமத்தப்பட்டுள்ள நபர் விசேட சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றத்தினூடாகவேயன்றி வேறு நீதிமன்றங்களூடாக பிணையில் செல்ல முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 3(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச் செயலில் ஈடுபடுவோர் பிணை வழங்குவதற்குரிய முதல்படி உயர்நீதி மன்றமேயாகும். இதனைத் தவிர அதன் கீழுள்ள வேறு எந்த நீதிமன்றத்தாலும் பிணை வழங்க முடியாதென்பதாகும்.
இதற்கமைய 1997– 30 ஆம் இலக்க பிணை சட்டமூலம் இத்தகைய சந்தர்ப்பங்களில் செயலிழந்ததாகவே காணப்படும்.
“மேற்படி உறுப்புரைக்கு விரிவானதும் குறுகியதுமான இருவேறு விளக்கங்களை அளிக்க முடியும் அவ்வாறு விளக்கும் போது, சட்டமூலத்திலுள்ள இதர விடயங்களையும் வாசித்துப் பார்ப்பது அவசியம்” என்று பிரசன்த லால்த அல்விஸ் கூறுகிறார். இங்கு முதலாவது உறுப்புரையில் “யுத்தத்தைத் தூண்டுதல்” என்றுள்ளது. அதனைத் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது எதிர்வாதம் புரிதலும் குரோதத்தை உருவாக்குதலும் என்பதாகும். இவையிரண்டும் யுத்தத்தை மூளச்செய்யும் அளவுக்கான செயற்பாடாக அமைய வேண்டும்.
உதாரணத்திற்கு, எனது புத்த சமயம் தான் உலகிலே மிகவும் உன்னதமான தர்மம் என்று நான் சொன்னால், சட்ட மூலத்திற்கமைய இதுவொரு குற்றச் செயல் என்று எவராலும் எண்ணமுடியும். ஆனால் அது குரோதத்தை உண்டு பண்ணுமளவுக்கு நெருங்குவதில்லை என்று அவர் கூறுகிறார்.
சட்ட மூலத்தை விரிவாக ஆராய்ந்து பார்த்தால், அதன் நோக்கம் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதல்ல. உரிமைகளை மேலும் உறுதிசெய்வதாகவே உள்ளதாக சட்டத்தரணி பிரசன்த லால் மேலும் கூறுகிறார்.
ரஹீம் மஸாஹினாவின் ஆடையிலுள்ள சின்னம் காரணமாக அவர் கைதுசெய்யப் பட்டுள்ளமை குறித்து பிரசன்த லால் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு பௌத்தன் என்ற வகையில் நான் இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்குப் பல காரணங்களை முன்வைக்கலாம். முதன் முதலாக குறித்த ஆடையில் உள்ளது தர்மசக்கரம் அல்ல. அது கப்பலிலுள்ள சுக்கான் என்பது தெளிவாகவே தெரிகிறது.
பௌத்த கொடியைக் கொண்டு தைக்கப்பட்ட சட்டை சந்தையில் விற்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன். தர்மசக்கரத்தைப் போல அதுவும் குற்றம் தானே! ஆனால், சம்பந்தப்பட்ட பெண் முஸ்லிம் என்பதால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மக்கள் தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிவது போன்றே அணிகலன்களாக தர்மசக்கர சின்னங்களையும் அணிகிறார்கள். எனவே இவற்றையும் இவற்றைத் தயாரிக்கிற நிறுவனங்களையும் அல்லவா குற்றவாளிகளாகக் கணிக்கவேண்டும்.
சட்டத்தரணி திஷ்ய வேரகொட என்பவர் சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்திய ஐஸீஸீபிஆர் சட்ட மூலம் சிவில் சுதந்திரத்தை கட்டுப் படுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், சக்திகவின் கைது சுதந்திரத்திற்கு வரையறை போட்டுள்ளதுடன் ரஹீம் மஸாஹினாவின் கைதில் சட்டமூலத்தின் எக்காரணியும் பேணப்படாமலேயே இடம்பெற்றுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐஸீஸீபிஆர் செயற்படுத்தப்பட்ட விசேட சந்தர்ப்பம் எது?
2018 மார்ச் மாதம் திகன வன்செயல்களின் பின்னர் மஹசொஹொன் அணியின் அமித் வீரசிங்ஹ உள்ளிட்ட இதர நபர்கள் நீண்டநாட்கள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தமை மேற்படி சட்ட மூலம் மற்றும் அவசர கால சட்ட விதிகளுக்கமையவே இடம்பெற்றுள்ளன.
அவசரகால சட்டவிதி போன்றே இந்த சட்டமூலம் செயற்படும் போது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய எல்லா இனத்தைச் சேர்ந்த மக்களும் அவ்வப்போது இடம்பெற்ற சண்டை, குழப்பங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருந்தபோதிலும் ஐஸீஸீபிஆர் சட்ட மூலத்தில் பல்வேறு வகைகளிலும் உரிமைகள் பேணப்பட்டுள்ளன. 4(1) உறுப்புரையில் முறைப்பாட்டுக்கு இலக்காகி யுள்ள நபரின் உரிமைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தாமரை மலர் ஒன்றில் வீற்றிருப்பதான புத்தரின் உருவப்படம் ஒன்றை தனது கையில் பச்சை குத்தியிருந்த நயோமி கோல்மன் என்ற வெளிநாட்டுப் பெண்மணி, 2014 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர், பெரும்பான்மை மக்களை சினம் கொள்ளச் செய்யும் வகையில் பச்சை குத்தப்பட்டுள்ளதால் இவர் கைது செய்யப்பட்டார் என்று நீதிமன்றத்தில் பொலிஸார் குற்றத்தை முன் வைத்தனர்.
பின்னர் நீதிமன்ற பணிப்புரைக்கமைய அவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் பிரித்தானிய பிரஜையான அப்பெண், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் இறுதியில் அப்பெண்ணுக்கு நஷ்ட ஈடாகவும், வழக்குச் செலவாகவும் எட்டு இலட்சம் ரூபா செலுத்தும்படி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இலங்கைக்கு பல தடவைகள் உல்லாசப்பயணியாக வருகை தந்துள்ள நயோமி, தான் ஒரு தூய்மையான பெளத்த பெண் என்றும், புத்தபெருமான் மீதுள்ள பற்றினாலேயே தான், தனது கையில் அவரது உருவப்படத்தை பச்சை குத்தியுள்ளேன் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறிருந்த போதிலும் மேற்படி உறுப்புரைக்கமைய, ஒருவருக்கெதிராக வழக்குத் தொடரும் போது பொலிஸார் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். இது நீதிமன்றத்துக்குக் கூட சில கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்ட மூலமாகும் என்று பிரசன்த லால் அல்விஸ் தெரிவித்தார்.
3(1) உறுப்புரையின் கீழ் வழக்குத் தொடரும் போது மேல் நீதிமன்றத்தில் பிணை கோரும் சந்தர்ப்பத்தில் விசேட காரணிகள் முன் வைக்கவேண்டும். ஆனால் குறித்த அந்த விசேட காரணிகள் எவை என்று சட்டத்தினுள் குறிப்பிடப்பட்டில்லை.
இதற்கமைய வழக்குகளில் நீதிபதிகளுக்கு அதிவிசேட காரணிகள் எவையென்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்கு பூரண சுதந்திரம் உள்ளது.
அடிப்படை உரிமைகளின் கீழ் வழக்குகள்
சக்திக சத்குமார மற்றும் மஸாஹிமா ஆகிய இருவரும் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழ்க்குத் தாக்கல் செய்துள்ளனர்.
1978 ஆம் ஆண்டின் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரஜைகளுக்குள்ள மனித உரிமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
“இலங்கையில் வதியும் மக்கள் சந்ததிகள் மத்தியில் தார்மீக சுதந்திர சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பவும் அவர்களைப் பேணிப் பாதுகாக்கவும் அச்சந்ததியினரால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு உதவ முன்வரும் அனைத்துலக மக்களினதும் அபிமானம் மற்றும் செல்வம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் அபரிமிதமான உரிமையாக சுதந்திரம், சமநிலைத்தன்மை, நேர்மை, அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பன சகல மக்களுக்கும் உறுதிப்படுத்தக் கூடியதான ஜனநாயக சோஷலிஸ குடியரசாக இலங்கையை உருவாக்குவதற்காக….” என்றே யாப்பு விதி கூறுகிறது.
அதே போன்றே யாப்பின் 4(ஈ) அடிப்படை உரிமை தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது:
“அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு ஏற்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் யாவும் நிர்வாக நிறுவனங்களால் பேணப்பட வேண்டும். மதித்து ஒழுக வேண்டும், வளர்க்கப்பட வேண்டும். மேலும் அந்த அடிப்படை உரிமைகள் இங்கு இதன் பின்னர் வரும் விதிமுறைகள் வலிந்துரைக்கும் விதத்திலும் அதன் அளவை மிகைத்தோ வரையறுத்தோ மேற்கொள்வதும் அல்லது வலிதற்றதாக்குவதும் கூடாது.”
அரசியலமைப்பின் 14(1) உறுப்புரையின் கீழ் எந்தவொரு நபருக்கும் பேச்சுச் சுதந்திரம் அல்லது கருத்து வெளியிடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்றே அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரையின் கீழ் எந்தவொரு நபருக்கும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்குரிய சுதந்திரமும் நம்பிக்கை கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய சுதந்திரம் உள்ளது.
வழங்கப்பட்டுள்ள உளச் சுதந்திரத்தின் அடிப்படையில் விரும்பும் எந்தவொரு விடயத்தையும் சிந்திப்பதற்கும் எந்தவொரு மதத்தையும் ஒழுக்கப்பண்புள்ள எந்தொவரு சிந்தனையையும் பின்பற்றுவதற்குரிய உரிமையும் உள்ளது.
எவ்வாறானபோதிலும் மேற்கண்ட சகல உரிமைகளையும் அடுத்தவருக்கு பாதிப்பேற்படாதவாறே அனுபவிக்க வேண்டும். அடுத்தவரின் சுயகௌரவத்தைப் பாதிக்காதவாறும் அவர்களது உரிமைகள் பேணப்படும் வகையிலுமே நடந்துகொள்ள வேண்டும்.
தனிநபர் உரிமைகள் அளவு கடந்து பயன்படுத்துவதற்கெதிராக இலங்கையில் பல்வேறு சட்டமூலங்கள் மற்றும் சட்டத்திட்டங்கள் பலவும் உள்ளன.
vidivelli