அரச அலுவலகங்களில் அபாயா அணிய தடுத்ததாக முறைப்பாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுப்போம்
பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சர் மத்தும பண்டார
தங்களது கலாசார ஆடைகளை அணிந்து கடமைக்குச் சென்ற சில அரச ஊழியர்கள் அவர்களது அலுவலகங்களில் தொல்லைகளுக்குட்படுத்தப்பட்டதாக எமக்கு அறிக்கைகள் கிடைத்தன.
அதற்காக நாம் வருந்துகிறோம். இது தொடர்பாக ஏதும் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்போம் என பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஆங்கில ஊடகமொன்றினது நேர்காணலின்போது அரச முஸ்லிம் பெண் ஊழியர்களது ஆடை தொடர்பாக வினவப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், அமைச்சினால் வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமையவே நாம் திருத்தங்களைச் செய்தோம். அமைச்சரவையில் இது தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இறுதியில் எங்களால் திருத்தங்களைச் செய்வதற்கான பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் முதன்முதல் 1989 ஆம் ஆண்டே சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டது. அரச ஊழியர்கள் எவ்வாறான ஆடை அணிய வேண்டுமென அந்தச் சுற்று நிருபம் துல்லியமாகத் தெரிவித்துள்ளது. இந்தச்சுற்று நிருபத்துக்குப் பின்பு மேலுமொரு சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அச்சுற்று நிருபத்தில் பெண் அரச ஊழியர்கள் ஆடையினை தைத்துக் கொள்வதற்கான கொடுப்பனவொன்றினை வழங்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகத்திரையைத் தடைசெய்து அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டார். இதற்கு அமைவாகவே நாம் சுற்று நிருபத்தை அண்மையில் வெளியிட்டோம். அதில் அரச பெண் ஊழியர்களின் ஆடை சாரி (சேலை) அல்லது ஒசரி என்று குறிப்பிட்டோம்.
பாரம்பரிய கலாசார உடை இவ்வாறான ஆடை சட்ட ஒழுங்குகளுக்கு முரண்படலாம். அத்தோடு நாட்டின் கலாசாரத்துடனும் முரண்படலாம். ஆனால் அரச ஊழியர்களைப் பொறுத்தவரையில் நாம் இதனை வேறுபடுத்தியே பார்க்க வேண்டியுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடனே சுற்று நிருபத்தில் நாம் திருத்தங்களைச் செய்துள்ளோம்.
பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கத்துவர்களுக்கு அரச அதிகாரிகளை கேள்விக்குட் படுத்துவதற்கு உரிமை இருக்கிறது. அதனடிப்படையிலே அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிரி அரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்று நிருபம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தப்பட்டார்.
கடந்தகால அரசாங்கத்தில் அரச அதிகாரிகளுக்கு சுதந்திரமாக கருத்து வெளியிடுவதற்கும், பேசுவதற்கும் இடமளிக்கப்படவில்லை. ஆனால் அரச அதிகாரிகள் அச்சமின்றிப் பேசுவதற்கான வழியை நாம் திறந்து விட்டிருக்கிறோம். இந்த உரிமையை நாம் அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளோம். இதுவே நல்லாட்சி யாகும். நாட்டில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
vidivelli