கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில்
நீதிமன்ற தடை உத்தரவு கோரி முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மகஜர்
எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொதுபலசேனா அமைப்பு கண்டி நகரில் ஏற்பாடு செய்-துள்ள மாநாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கே முதன்மையளிக்கப்படும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளதால் முஸ்லிம்கள் பீதிக்குள்ளாகியுள்ளார்கள். எனவே அந்த மாநாட்டினை நடத்தாது நீதிமன்ற தடையுத்தரவொன்றினைப் பெற்றுக் கொள்ளுமாறு முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு நேற்று பதில் பொலிஸ் மா அதிபரிடம் மகஜரொன்றினைக் கையளித்துள்ளது.
முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட மகஜரைக் கையளித்துள்ளனர். மகஜரின் பிரதி பாதுகாப்பு செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கண்டி நகரில் சுமார் ஒரு இலட்சம் பௌத்தர்களும் 10 ஆயிரம் பௌத்த குருமார்களும் ஒன்றுகூடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரபுக்கல்லூரிகள், தௌஹீத் பள்ளிவாசல்கள், காதிநீதிமன்றங்கள், ஹலால் சான்றிதழ் என்பனவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் முஸ்லிம்கள் பீதிக்குள்ளாகியுள்ளார்கள்.
எனவே அவசரகால சட்டம் அமுலிலுள்ள நிலையில் இவ்வாறான இனவாதத்தைத் தூண்டிவிடும் மாநாடுகள் நடாத்தப்படக்கூடாது என தெரிவிக்க விரும்புகிறோம். இவ்வாறான மாநாடுகள் சமாதானத்தை சவாலுக்குட்படுத்துவனவாக அமையும். எனவே 7 ஆம் திகதி கண்டியில் நடைபெற ஏற்பாடாகியுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டுக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli