இனவாத மாநாடுகள் தடுக்கப்பட வேண்டும்

0 733

காவி­யுடை அணிந்த இன­வாத பௌத்த குரு­மார்­களின் அண்­மைக்­கால செயற்­பா­டுகள் நாட்டில் இன­வா­தத்­துக்கு எண்ணெய் வார்ப்­ப­தாக அமைந்­துள்­ளன. உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத செயற்­பா­டுகள் மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தத்தைத் தூண்­டு­வ­திலும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­திலும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் முன்­னின்று செயற்­பட்டு வருகிறார்.

2014 ஆம் ஆண்டு அளுத்­கம மற்றும் பேரு­வளைப் பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளுக்குக் கார­ண­மாக இருந்­த­வரும் ஞான­சார தேரர் என்­பதை எவ­ராலும் மறுக்­க­மு­டி­யாது. 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஞான­சார தேரர் பேரு­வ­ளையில் ஆற்­றிய உரையே அளுத்­கம வன்­செ­யல்­க­ளுக்கு வித்­திட்­டது. இதனால் பாரிய அழி­வு­களும் உயிர்ச்­சே­தங்­களும் ஏற்­பட்­டன. அன்று ஞான­சார தேரர் பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் உரை­யாற்­று­கையில்;

‘அப­ச­ரணய்’ அதா­வது அழிவு அல்­லது சாபம் ஏற்­படும் என்றார். அவர் கூறி­யது போன்று இன­வா­தி­களால் அழி­வுகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன.

அளுத்­கம வன்­செ­யல்­க­ளை­ய­டுத்து நாட்டில் வெறுப்புப் பேச்­சு­க­ளுக்குத் தடை விதிப்­ப­தற்­கான சட்­ட­மொன்­றினை இயற்­றிக்­கொள்ள மேற்­கொண்ட முயற்­சி­களும் பய­னற்­றுப்­போ­யின. முஸ்லிம் சமூ­கத்தை அச்­சு­றுத்­திய இது போன்­றவொரு சம்­பவம் கடந்த மாதம் ஆரம்­பத்தில் இடம்­பெற்­றதை எம்மால் மறக்­க­மு­டி­யாது. அன்று முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் அமைச்­சர்­களும் மேற்­கொண்ட சம­யோ­சித தீர்­மானம் சமூ­கத்தை அழி­வு­க­ளி­லி­ருந்தும் காப்­பாற்­றி­ய­தென்றே கூற­வேண்டும்.

அப்­போ­தைய அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் ஆகியோர் இஸ்­லா­மிய அடிப்­படை வாதி­களின் ஆத­ர­வா­ளர்கள் எனக்­கூறி அவர்கள் பதவி விலக வேண்டும் அல்­லது பதவி விலக்­கப்­பட வேண்­டு­மென நாடு தழு­விய ரீதியில் கோரிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இந்தக் கோரிக்­கையை முன்­வைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் கண்­டியில் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முன்­னெ­டுத்தார். இரு தினங்­களின் பின்பு உண்­ணா­வி­ர­த­மி­ருந்த அத்­து­ர­லிய ரதன தேரரைப் பார்ப்­ப­தற்­காக கண்­டிக்குச் சென்ற ஞான­சார தேரர் ஓர் அச்­சு­றுத்­தலை விடுத்தார். அதா­வது மறு­தினம் 3 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்பு குறிப்­பிட்ட மூன்று அர­சி­யல்­வா­தி­களும் பதவி வில­கா­விட்டால் இன்றேல் பதவி விலக்­கப்­பட்­டா­விட்டால் நாடு முழு­வதும் திரு­விழா காண­வேண்­டி­யேற்­படும் என்று அச்­சு­றுத்தல் விடுத்தார். இது பேரு­வ­ளையில் அவர் விடுத்த ‘அப­ச­ரணய்’ கருத்­துக்கு ஒத்­த­தாகும்.

அளுத்­கம வன்­செ­யல்­களின் வடுக்கள் மாறாத நிலையில் முஸ்லிம் சமூகம் பீதிக்­குள்­ளா­கி­யது. மீண்டும் அழி­வு­களா? என்று சிந்­தித்­தது. இந்­நி­லையில் மூவரும் தங்கள் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். இத­னை­ய­டுத்து முஸ்­லிம்­களின் பாது­காப்­பினை வலி­யு­றுத்­தியும் அநா­வ­சிய கெடு­பி­டி­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் முஸ்லிம் அமைச்­சர்களும் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­தனர். இதனால் ஞான­சா­ர­தேரர், அத்­து­ர­லிய ரத­ன­தேரர் உட்­பட இன­வாத பௌத்த தேரர்கள் எழுச்சி பெற்­றனர். தங்­களால் எதையும் சாதிக்க முடியும் என கர்வம் கொண்­டனர்.

கல்­முனை வடக்கு தமிழ்ப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தும் கோரிக்­கையும் இவ்­வா­றா­ன­தொன்றே. சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டமே ரன்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இப்­போ­ராட்­டத்­திலும் ஞான­சார தேரர் சம்­பந்­தப்­பட்டார். ஒரு­வார காலம் நடந்த இப்­போ­ராட்டம் ஞான­சார தேரர், அத்­து­ர­லிய ரதன தேரர் மற்றும் அரச தரப்பு செய­ல­கத்தை தர­மு­யர்த்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே கைவி­டப்­பட்­டது.

எதிர்­வரும் 7 ஆம் திகதி பொது­ப­ல­சேனா அமைப்பு மீண்­டு­மொரு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பாட்டை முன்­னெ­டுக்­க­வுள்­ளது. கண்டி தலதா மாளிகைத் திடலில் மாநாடு ஒன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளது. இம்­மா­நாட்டில் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்­களும் சுமார் 10 ஆயிரம் பிக்­கு­களும் கலந்து கொள்­ள­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

மாநாட்டில் அர­புக்­கல்­லூ­ரிகள், காதி­நீ­தி­மன்­றங்கள், ஹலால், தௌஹீத் பள்­ளி­வாசல்களுக்­கெ­தி­ராக தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்டு அர­சிடம் மகஜர் கைய­ளிக்கப் பட­வுள்­ளது.

அவ­ச­ர­கா­லச்­சட்டம் அமுலில் இருக்கும் போது இன­ரீ­தி­யான முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும் இவ்வாறான மாநாடுகளை நடத்த முடியுமா? பாதுகாப்புத் தரப்பினரும், அரசும் இவ்வாறான செயற்பாடுகளில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகால சட்டவிவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி இம்மாநாடு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனத் தெரிவித்துள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவசரகாலச் சட்டத்தை மீறி இடம்பெறும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.