இலங்கைக்கு இவ்வருடம் 500 மேலதிக ஹஜ் கோட்டாவை வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாக சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சு ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலருக்கு நேற்று தொலைபேசியூடாக அறிவித்துள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
சவூதி ஹஜ் அமைச்சு இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை 500 இனால் அதிகரித்துள்ளமை தொடர்பான எழுத்து மூலமான ஆவணத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் உரிய கடிதம் கிடைக்கப்பெற்றதும் மேலதிக ஹஜ் கோட்டாவைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் அரச ஹஜ் குழு கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, மேலதிகமாகக் கிடைக்கவுள்ள ஹஜ் கோட்டா தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும்வரை பொதுமக்கள் மேலதிக கோட்டாவில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது தொடர்பில் போலி முகவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம் எனவும் எவருக்கும் முற்பணம் செலுத்த வேண்டாமெனவும் அரச ஹஜ் குழுவின் உறுப்பினரும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம். பாஹிம் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மேலதிக ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களில் போன்று இவ்வருடம் ஊழல்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும் மேலதிக ஹஜ் கோட்டா மூலம் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இவ்வருடம் ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சு ஏற்கனவே 3500 ஹஜ் கோட்டா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 3500 ஹஜ் கோட்டாக்களுக்குமான ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா கிடைக்கவுள்ளது.
மேலதிக ஹஜ் கோட்டா தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கூட்டம் ஒன்றினை அரச ஹஜ் குழு நடத்தவுள்ளது.
vidivelli