21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டு, கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவும் நேற்று சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினம் இருவருக்கும் முற்பகல் 10.00 மணிக்கு குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளுக்காக சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டிருந்த போதும், அங்கு சமுகமளிக்காமல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், காய்ச்சலுடன் கூடிய திடீர் சுகயீனம் காரணமாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தந்த வைத்தியசாலைகளில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, நேற்று பிற்பகல் அந்த வைத்தியசாலைகளுக்கு சென்ற சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மேற்பார்வையின் கீழான இரு சிறப்புக்குழுக்கள் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்ட பின்னர், அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், சி.ஐ.டி.யினரின் பாதுகாப்பின் கீழ் அந்தந்த வைத்தியசாலைகளிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்தக் கைதுகள் குறித்து சி.ஐ.டி.யின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழான அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு நேற்று மாலை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், மாலை வேளையில் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கும் சென்று சந்தேக நபர்களைப் பார்வையிட்டார். இதனையடுத்து அவ்விருவரையும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் பாதுகாப்பு நிமித்தம் வைத்தியசாலைகளில் இருந்த சி.ஐ.டி. அதிகாரிகள் விலகிக்கொண்டுள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸ்மா அதிபரையும் முன்னாள் பாதுகாப்பு செயலரையும் தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளனர். அவர்களின் பாதுகாப்பின் கீழ் அவ்விருவரும் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவிடமிருந்து பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடந்த ஜூன் 27 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைவாக, தண்டனை சட்டக் கோவையின் 296, 298, 327, 328, 329 மற்றும் 410 ஆம் பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவும் புரிந்துள்ளதாகக் கூறியே இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைகுழு, முன்னாள் பாதுகாப்பு செயலர் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் உள்ளிட்ட பலரின் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் கலகொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் மற்றும் அமைச்சுகளின் செயலர் பத்மசிரி ஜயமான்ன ஆகியோரடங்கிய விஷேட விசாரணைக்குழு, இடைக்கால மற்றும் இறுதி அறிக்கைகளை சமர்ப்பித்தது.
அதனை மையப்படுத்தி பொலிஸ்மா அதிபர் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இதனையடுத்து பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுதத் நாகஹமுல்ல மற்றும் சி.ஐ.டி. பனிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோரின் நேரடிக் கட்டுப்பாட்டில் பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த விசாரணைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஊடாக 2019.06.26ஆம் திகதியன்று ஆலோசனை கோரி கடிதமொன்று சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டது. அது தொடர்பிலான சட்டமா அதிபரின் ஆலோசனைகள் 2019.06.27ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கப்பட்டது.
அதன்படி 2019.04.21ஆம் திகதி தற்கொலை குண்டுதாரிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட மனித படுகொலைகள், பாரிய சொத்து சேதங்கள் தொடர்பாக குற்றவியல் பொறுப்பு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை மற்றும் சாட்சியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையை மையப்படுத்தி சட்டமா அதிபர் தீர்மானித்திருந்தார். அதன்படி குறித்த குற்றங்களுக்கு சந்தேக நபர்களாக அவ்விருவரையும் பெயரிட்டு குற்றவியல் சட்டக்கோவையின் நடைமுறைகளுக்கமைவாக செயற்பட்டு அவ்விருவரின் வாக்குமூலங்களை பதிவு செய்து நீதிமன்றுக்கு அறிவித்து அவ்விருவரையும் சந்தேக நபர்களாக நீதிமன்றில் ஆஜர்செய்ய பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் 2019.06.27 ஆம் திகதி எழுத்துமூல ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதன்படியே அவர்களைக் கைது செய்து மன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ள சி.ஐ.டி. நேற்று அவர்களை கொழும்பு – கோட்டை சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடிக்கு வருமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளது. எனினும் அவர்கள் அங்கு வருகை தராமையை அடுத்து, அது தொடர்பில் தேடியுள்ள சி.ஐ.டி. அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையிலேயே நேற்று பிற்பகல் அந்தந்த வைத்தியசாலைகளின் வைத்தியர்களுக்கு அறிவித்துவிட்டு அங்கு சென்ற சி.ஐ.டி.யினர் அவ்விருவரையும் 10 நிமிட இடைவெளியில் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்ப்ட்ட நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரான முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவை பார்வையிட்டார். இதன்போது ஹேமசிறி பெர்னாண்டோவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். இந்நிலையில் இன்றுவரை முதலில் ஹேமசிறி பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் இன்று அவ்வழக்கை திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு சென்ற நீதிவான் லங்கா ஜயரத்ன அவரையும் பார்வையிட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது அதேபோன்று பூஜித் ஜயசுந்தரவும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
vidivelli