சமகால பிரச்சினையை தீர்க்க நான் பங்களிப்பேன் என்றுதான் ஜனாதிபதி மன்னித்திருப்பார்
அந்தப் பொறுப்பை ஏற்றுத்தான் செயட்படுகிறேன் என்கிறார் ஞானசார தேரர்
நீங்கள் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த உடனே எதிர்காலத்தில் ஆன்மீக நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடுவீர்கள் என்று கூறுனீர். பிறகு தேசியத்தை கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதாகக் கூறினீர். ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் செய்யும் ரதன பிக்குவை சந்திக்க செல்கிறீர். அடுத்த நாள் உண்ணாவிரதத்தை விமர்சனம் செய்கிறீர். இவ்வாறு ஒன்றுடனொன்று முரண்படும் உங்களுடைய பேச்சுக்களை, நடவடிக்கைகளை எவ்வாறு மக்கள் புரிந்து கொள்வது ?
நீங்கள் பார்க்க வேண்டியது எனது மாற்றங்களை இல்லை. இந்த நாடு மாறும் விதத்தை பாருங்கள்.
நான் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரும்பொழுது ஆன்மிக நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடுவேன் என்று தான் நினைத்து கொண்டு வந்தேன். ஆனால் நான் மகாநாயக்க தேரர்களை சந்தித்துவிட்டு பன்சலையை விட்டு வெளியே வரும் பொழுது, இளம் பிக்குகள் என்னைச் சூழ்ந்து கொண்டு “அவ்வாறு முடியாது தேரரே…. எப்படி நீங்கள் ஒதுங்க முடியும்..?” என்று குழப்பமடைந்தவர்களாக கேட்டார்கள். அந்த குழப்பத்திற்குள்ளே உள்ள காரணம் இந்த சமூகம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது, விசேடமாக, சிங்களவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதனால் “நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். நான் மீண்டும் எமது தேசிய கடமையை நிறைவேற்ற நிபந்தனைகள் இன்றி முன் நிற்கிறேன்” என்று சொன்னேன்.
இவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டி ஏற்படுகிறது.
தேசியத்திற்கான கடமையை நிறைவேற்றல் அல்லது தேசத்தை கட்டி எழுப்புவதற்கு தற்பொழுது மேற்கொள்ளப் போகும் புதிய வேலைத்திட்டம் என்ன..?
இந்த நாட்டிற்கு, மக்களுக்கு இருப்பது ஒரு பாதுகாப்புதான். அது இந்த நாட்டு பெளத்த பிக்குகளின் நிழலாகும்.
இந்த சோசலிசம், கம்யூனிசம், வலதுசாரி, இடதுசாரி, லிபரல் வாதம், பாசிசம் இவை எதுவும் சஹ்ரான் போன்றவர்களின் குண்டுத் தாக்குதலுக்குமுன் தொடர்பற்றவை. தற்பொழுது இந்த நாட்டில் தற்கொலை தாக்குதல்காரர்கள் இருக்கின்றனர். வெளிநாட்டு செல்வாக்கு இருக்கிறது.
இந்த நாடு கலாசார ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன ரீதியான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவ்வாறு என்றால் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும், தமிழருக்கு ஒரு சட்டமும், முஸ்லிம்களுக்கு இன்னொரு சட்டமும் இருக்கிறது. இதனால் எப்படி இதனை ஒரு நாடு என்று சொல்ல முடியும்..? இதனால் நாம் தற்பொழுது புதிதாக சிந்திக்க வேண்டும்.
இதன் காரணமாக எமது கருத்து ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு தலைவன், ஒரு அதிகாரத்துடன் இந்த நாடு முன் செல்ல வேண்டும். அதற்கான வேலை திட்டத்தை செய்ய முடியுமான உயர் மட்ட, பரவலான அமைப்பொன்றை உருவாக்குவது பற்றி நாம் கலந்தாலோசனை செய்து கொண்டிருக்கிறோம்.
சிங்கள இனத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டம் அல்லவா அது..?
சிங்கள இனம் என்று சொல்வதை விட முக்கியம் இந்த நாட்டில் பிறந்த சிங்களம், தமிழ் , முஸ்லிம், மலே போன்ற அனைவரையும் இந்த பூமியின் பிள்ளைகள் என்று அழைப்பேன். இந்த பூமியில் தானே பிறந்துள்ளார்கள்.
அதனால் எமக்குத் தேவை இந்த நாட்டில் பிறந்த அனைவரையும் இந்த பூமியின் பிள்ளைகள் என்று கருதி, இந்நாட்டை அவர்களின் பிறந்த பூமியாக கருதி அனைவரும் ஒரே மாதிரியாக வாழ்வதற்கு முடியுமான சூழலை உருவாக்குவதாகும். ஒரு சட்டத்திற்கு நாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறோம். முஸ்லிம் சிறுவர்களுக்கு மத்ரசாக்கள் உள்ளன. சிங்கள பிள்ளைகளுக்கு வேறு பாடசாலைகள் உள்ளன. அவர்கள் வளரும் பொழுது ஸாஹிரா கல்லூரி, இந்துக் கல்லூரி, சிங்கள பெளத்த கல்லூரி, கிறிஸ்தவ பாடசாலை என்று உள்ளன. எங்கே கல்வியிற்கு ஒரு வேலை திட்டம்..? ஒவ்வொரு விதமாக செயற்படும் பொழுது எப்படி ஒற்றுமையை உருவாக்குவது..?
நாம் ஜப்பானுக்கு சென்றால் அங்கு சிங்கள பிள்ளைகளும் ஜப்பானியர்களின் பிள்ளைகளும் ஒரே பாடசாலையில் கற்பதை பார்க்க முடியும். அவ்வாறு தான் எமது நாட்டிலும் அமைய வேண்டும். அவ்வாறான வேலைத் திட்டம் எங்கே..?
எனவே, எமது தேவை இந்த நாட்டில் அனைவரையும் ஓர் இலக்கிற்காக ஒன்றுதிரட்டி, அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும், பயமின்றி வாழ முடியுமான சூழலை உருவாக்குவதாகும். அவ்வாறு இல்லாமல் சிங்களவர்களுக்கு என்று வேறு திட்டமில்லை.
கடந்த காலத்திலிருந்தே நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் பிக்குகள் செயற்படுவது இனங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் இல்லை. மென்மேலும் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவ்வாறான தொரு தரப்பினால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்..?
மோசமான அரசியலில் உள்ள தவறு அது. பிக்குகளின் கடமை, வகிபங்கு பற்றிய தெளிவை பிக்குகள் பெறவேண்டும். பிக்குகள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மாறுவதுதான் பிரச்சினை. அவர்கள் தமது செயற்றிட்டங்கள் பலவீனமடையும் பொழுது பிக்குகளை முற்படுத்துகின்றனர்.
நான் சொல்வது முதலில் மதத்தையும், அரசியலையும் பிரிக்க வேண்டும். இதனைச் செய்யாமல் இந்தப் பயணத்தை செல்ல முடியாது. பிக்குகளுக்கு இந்த நாட்டில் வரலாற்று ரீதியான கடமைகள் உள்ளன. பிக்குகள் மீதுள்ள வரலாற்று ரீதியான பயணத்தை அவர்கள் தெரிவு செய்ய வேண்டும். அது அரசியலுக்கு மேலுள்ள ஒரு விடயமாகும். அந்த நிலை தற்பொழுது இல்லை.
அதனால் புத்தரை முன்மாதிரியாகக் கொண்ட வேலைத் திட்டம் இன்றி, ஒவ்வொருவரின் சிந்தனைக்குட்பட்ட வேலைத் திட்டங்கள் தான் உள்ளன. ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வேலைத் திட்டத்திற்கேற்ப வேலை செய்யும் பிக்குகளைத்தான் நாம் காண்கிறோம். அதிலிருந்து இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
எனவே பிக்குகள் தமது தவறுகளை சீர்செய்து தலைவர்களுக்கு உபதேசம் வழங்கினால் இன்றுள்ள நிலைமையைவிட நல்லதொரு இடத்திற்கு இந்த நாட்டை நகர்த்த முடியும்.
பிக்குகளுக்கு புத்தர் வழங்கிய பொறுப்பு வேறொன்று இல்லையா..?
அது இவ்வாறுதான். நாட்டிற்கு அரசன் இல்லாதபோது அரசனை உருவாக்கியவர்கள் பிக்குகளாகிய நாம். அடுத்தது நாம் இந்த நாடு பெளத்த மதத்தால் போசிக்கப்பட்டுள்ளது என்று நம்புகிறோம். இந்த பூமி பெளத்த மதத்திற்காக அரசர்களால் பல சந்தர்ப்பங்களில் பூஜை செய்யப்பட்டது. அதனால் பெளத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது, சிங்கள இனத்திற்கு வரலாற்று ரீதியாக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக பேசாமல் எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
எங்கிருந்து இந்த வேலையை ஆரம்பிப்பீர்கள்..?
இந்தப் பிரச்சினையை கலந்தாலோசனை செய்ய தேசிய மட்டத்தில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதனை மக்களுக்காக திறக்க வேண்டும். முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகத்திலுள்ள பிரச்சினைகள் அங்கு முறையிடப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் உள்ள இந்தப் பிரிவினைக்கு காரணிகள் என்ன? அனைவரும் வந்து அந்த ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க முடியும். இதனை செய்யாமல் இருப்பதால் மென்மேலும் பிரிவினை அதிகரித்து, தேவையில்லாத வகையில் மக்கள் பல முகாம்களாக பிரிவர்.
நீங்கள் சொல்லும் விடயம், சிங்கள சமூகத்திற்குள் மாத்திரமே நீங்கள் பேசுகிறீர்கள் இல்லையா..? இவ்வாறானதொரு பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்றால் தமிழ் , முஸ்லிம் ஆகிய சமூகங்களுடன் நல்லதொரு கலந்தாலோசனையை ஆரம்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது தானே..?
இது நீங்கள் வெளிப்படையாக காணும் விடயம். உங்களுக்கு தெரியுமா..? நாம் எவ்வளவு முஸ்லிம் மக்களுடன் பேசுகிறோம் என்று? எவ்வளவு தமிழ் மக்களுடன் பேசுகின்றோம் என்று? நாம் கட்டாயமாக அவர்களுடனான கலந்தாலோசனையை உள்ளக ரீதியில் செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் அரசியல் செய்வதில்லை என்பதால் அவர்களின் பெயரை இவ்விடத்தில் நாம் கூறுவதில்லை.
வஹாபிஸத்திற்கு எதிரான சூபி முஸ்லிம்கள் இந்த தீவிரவாதத்திற்கு எதிராக எழுந்து வந்தனர். காத்தான்குடி, பேருவளை, மாதம்பே, சிலாபம், காலி, வெலிகம போன்ற பிரதேசங்களில் சூபிக்கள் இந்த தீவிரவாதத்திற்கு எதிராக பேச பயத்தில் வாயை மூடி இருக்கின்றனர். காரணம் வஹாபிஸ அடிப்படைவாதத்திற்கு அனைத்து அரசியல்வாதிகளும் கட்டுப்பட்டுள்ளனர். நாம் அவ்வாறு செய்வதில்லை. நாம் அவ்வாறான மக்களை அழிப்பதில்லை. வெளிப்படுத்தவும் மாட்டோம். ஆனால் நாம் இரகசியமாக மிகவும் சிறந்த முறையில் இந்த பிரச்சினையை தீர்க்க கலந்தாலோசனைகளில் ஈடுபடுகிறோம்.
சிங்கள சமூகத்திற்கு, சிங்கள தனித்துவத்திற்கு நகர முடியும் என்றால் , தமிழர் தமது தனித்துவத்தை பாதுகாக்க முடியும் என்றால், முஸ்லிம் சமூகம் அவர்களுக்கு உரிமை உள்ள அவர்களின் தனித்துவத்தை நோக்கி நகர்வதில் தவறு என்ன..?
நீங்கள் தேவையற்ற பைத்தியக்கார கதை ஒன்றை சொல்கிறீர். இந்த நாடு யாருடையது? இந்த நாட்டின் வரலாற்றை அமைத்தவர்கள் யார்? இந்த நாகரிகத்தை கட்டி எழுப்பியவர்கள் யார்? இந்தக் கதையை ஐரோப்பாவுக்கு சென்று கதைக்க முடியுமா? ஜப்பானில் கதைக்க முடியுமா? இது என்ன கதை?
உலகில் எந்தவொரு நாட்டிற்கும் “குடிமகனுக்கு உரிய” என்று சில உரிமைகள் உள்ளன. மேலும் நாட்டின் “தேசத்திற்கு உரிய” உரிமைகள் என்று இரண்டு வகை உள்ளன. எமக்கு தவறிய இடம் இதுதான். இதில் குடிமகன் யார் என்று புரிந்து கொள்ளவில்லை. வரலாற்று புகழ்மிக்க தேசிய இனம் யார் என்பதை புரிந்து கொள்ளவும் இல்லை. சிங்களவனின் தனித்துவத்தை பாதுகாக்கவில்லை என்றால் அதை சவூதிக்கு சென்று செய்ய முடியுமா? மத்திய கிழக்கிற்கு சென்று செய்ய முடியுமா?
எமக்கென்று ஒரு மொழி இருக்கிறது. எமக்கென்று ஒரு கலாசாரம் இருக்கிறது. எமக்கென்று தனித்துவம் ஒன்று இருக்கிறது. இன்று எமது எத்தனை பேர் மத்தியகிழக்கில் இருக்கின்றனர். அவர்கள் அங்கு இலங்கை கொலனி அமைக்கப் போவதில்லை. அங்குள்ள சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கின்றனர். பிறந்தது இந்த நாட்டில் என்றால் ஏன் இரண்டு நாடுகளில் காலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இந்த நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமே. இந்த நாட்டின் கலாசாரத்திற்கு நகர வேண்டுமே.
தற்பொழுது நடைபெறுவது இந்த எல்லையற்ற சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதும், சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாமையாகும். தலைக்கவசம் அணியாமல் செல்லும்போது முதலாவது நாளிலே தண்டனை வழங்கினால் அந்த சட்டத்தை தொடர்ந்து பின்பற்றுவர். ஒரு தொல்பொருள் உள்ள இடத்தை கைப்பற்றும்போது சட்டத்தை அமுல்படுத்தினால் அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டிருப்பர். தற்பொழுது அரசியல்வாதிகள் சட்டத்தை அசைத்துக் கொண்டிருக்கின்றனர். சட்டத்தை சரியாக செய்ய விடுவதில்லை. இவ்வாறான சூழலில் தான் தேவையற்ற மோதல்கள் உருவாகின்றன.
சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் வரலாறு நெடுகிலும் பிரிவினை காணப்பட்டாலும் சிங்களம் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் அண்மைக்காலம் வரை நெருங்கிய நட்பு காணப்பட்டது. இந்த நட்பு இவ்வாறு தகர்த்தெறியப்பட இடமளிப்பது அல்லது அதற்கு யாராவது காரணமாக இருப்பது பெரிய தவறு இல்லையா..?
சஹ்ரான்கள் வெடித்தது இன்று நேற்று என்றாலும், இதனுடைய ஆரம்பம் எழுபதுகளில், எண்பதுகளில் இடம்பெற்றது. உலகளாவிய ரீதியில் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று மாத்திரம் இல்லை, இஸ்லாத்துடைய கதையைப் பார்த்தால், இஸ்லாம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள விடயங்கள், விசேடமாக மேற்கு ஐரோப்பாவில், முஸ்லிம்களாக இருந்து, இஸ்லாத்தை பின்பற்றி, அதனை உயர் கல்வியில் கற்றவர்கள் கூட இன்று அதனை விமர்சனம் செய்கின்றனர். அவர்களுடைய எழுத்துக்களை பார்க்கும்போது எந்தவொரு சமூகத்திலும் முஸ்லிம் சமூகம் 2% ஐ விட அதிகரிக்கும் பொழுது , 5% ஐ அதிகரிக்கும் பொழுது 7% ஐ அதிகரிக்கும் பொழுது, இவ்வாறு 50% ஐ அதிகரிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று கணக்குப் பார்த்துள்ளனர். அதற்கு உலகில் வேண்டியளவு சான்றுகள் உள்ளன. 10% ஐ அதிகரிக்கும் பொழுது அவர்கள் தமது தீவிரவாதத்தை, பிரிவினைவாதத்தைக் கொண்டு வருகின்றனர். அது புதிய விடயம் இல்லை. உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்கு நடந்த விடயம் அதுதான்.
தற்பொழுது இந்தப் பிரச்சினை இங்கிலாந்தில் இல்லையா..? அவுஸ்திரேலியாவில் இல்லையா..? அந்த அனைத்து நாடுகளிலுமே இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. எந்தவொரு நிலையிலும் இவற்றைக் கவனிக்காது எம்மால் செயற்பட முடியாது.
இதற்கு தீர்வு, சிங்கள மக்களின் சனத்தொகை அதிகரிப்பில் கவனம் செலுத்துவது, சிங்கள தாய்மார்கள் அதிகமான பிள்ளைகளை பெற வேண்டும் என்ற கருத்து மக்கள் மயப்படுத்தப்படுகிறது. அந்த கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீரா..? அது தீர்வு என்று நினைக்கிறீரா..?
நாம் பிறப்புக் கட்டுப்பாடு பற்றிப் பேச வேண்டியது முஸ்லிம் பிரச்சினை காரணமாக இல்லை. நாட்டிலுள்ள வளங்களை நினைத்து. நாட்டில் நீர் வளம் குறைவு. இடம் குறைவு. வளிமண்டலத்திற்கு ஒரு எல்லை இருக்கிறது. எமக்குள்ள அனைத்து இயற்கை வளங்களும் மட்டுப்படுத்தப்பட்டவை.
ஒரு இனத்தை அதிகரிக்கச் சொல்லவும், இன்னொரு இனத்தை அழிக்கும்படி எம்மால் சொல்ல முடியாது. அது நல்ல முறையும் இல்லை. இது எமக்கு மாத்திரம் இல்லை, முழு உலகுக்கும் உள்ள பிரச்சினை. அதனால் நாம் இயற்கை வளங்களை கவனத்தில் கொண்டு இதற்காக நாம் என்ன செய்ய முடியும் என்று உரையாடலை ஆரம்பிக்க வேண்டும்.
முஸ்லிம் வியாபாரத்தைப் புறக்கணிப்புச் செய்ய வேண்டும் என்ற கருத்து சிங்கள சமூகத்தில் பரவுகிறது. அந்த கருத்துடன் உடன்படுகிறீரா..?
இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அடிக்க வேண்டிய இடங்களுக்கு இல்லை அடிக்கப்படுகிறது. அப்பாவி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பாதையில் வடை விற்கும் வியாபாரி பாதிக்கப்பட்டார். இது அநியாயம் ஆகும்.
நாம் வியாபாரத்தை புறக்கணிப்பு செய்வதென்றால் ஒட்டுமொத்த முஸ்லிம்களை புறக்கணிப்பு செய்ய கூடாது. நாம் வஹ்ஹாபி, சலபிகளின் வியாபாரம் எவை என்று இனம் காண வேண்டும். அவற்றை இனம் கண்டு புறக்கணிப்பு செய்து பாரம்பரிய சுதேச முஸ்லிம் மக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
தற்பொழுது தனித்தனியாக நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. எம்மால் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால்தான் நான் கூறினேன் தேசிய வேலைத் திட்டம் இல்லை என்றால் எல்லாம் குழப்பமடைகின்றன. அவ்வாறு நடக்கும் பொழுது தேவை இல்லாத பாதையில் இது செல்லும்.
உங்களுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்தது சிறையில் அவர் உங்களைச் சந்தித்து நடந்த உரையாடலின் பிறகுதானே? எவ்வாறான உடன்பாடுக்கு இரு தரப்பினருக்கும் வர முடிந்தது?
ஒரு உடன்பாடும் இல்லை. ஜனாதிபதி என்னைச் சந்தித்த பொழுது நான் இஸ்லாம் பிரச்சினையை பற்றிய அதிகமான தகவல்களை சொன்னேன். நாம் நினைக்கும் இடத்தில் இல்லை இந்த பிரச்சினை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.
நான் நினைக்கிறேன் அவர் இந்த பிக்கு வெளியே வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்வார் என்று சிந்தித்திருப்பார். அந்தப் பொறுப்பை சுமந்து தான் நான் செயற்படுகிறேன். அவ்வாறு இல்லாமல் எந்தவொரு நிபந்தனையும், எந்தவொரு அரசியலும் அவர் என்னுடன் பேசவில்லை.
நேர்காணல்: ஷீ லால் செனெவிரத்ன
தமிழில்: -சப்ராஸ் சம்சுதீன்
vidivelli