அரசியலமைப்பிற்கான 18 ஆவது திருத்தமும் 19 ஆவது திருத்தமும் நாட்டிற்கு சாபக்கேடு என்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தம் நடைமுறையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜூன் 26 ஆம் திகதி தெரிவித்தார். ஊடக பிரதானிகளை சந்தித்துக் கலந்துரையாடும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி இந்த அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் குறித்து மனமுடைந்து விரக்தி நிலையில் இருந்து வருவதன் வெளிப்பாடே இவ்வாறு பகிரங்கமாக அதுவும் ஊடக பிரதானிகள் முன்னிலையில் தெரிவிக்க காரணமாகின்றது.
பொதுவாகப் பார்க்கின்றபோது ஜனாதிபதி, அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் தொடர்பாக ஏன் இந்தளவிற்கு வெறுப்பிலும் விரக்தியிலும் இருக்கின்றார் என்று பார்த்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் அவரால் நினைத்த எதையும் தன்னிச்சையாக அதிகாரம் என்ற பெயரில் செய்துகொள்ள முடியாத இக்கட்டான நிலை இருந்து வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்ய முடியாத நிலையில் தோல்வியை ஏற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதுவே 19, நாட்டிற்கு சாபக்கேடாகத் தெரிவதற்கு காரணமாகின்றது.
2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி மக்களாணை மூலம் பதவிக்கு வந்த ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலாக 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி பலவந்தமாகப் பதவி நீக்கினார். ஆனால் இந்த செயற்பாட்டை நிராகரித்த ஐ.தே.க.வின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான அமைச்சரவையும் அவர்கள் இருந்த இடத்தை விட்டு ஒரு அங்குலமும் நகரவில்லை. பதவி நீக்கப்பட்ட பிரதமரும் அவரது அமைச்சரவையும் அலரிமாளிகையை விட்டு வெளியேற மஹிந்த அணி 72 மணித்தியால கால அவகாசத்தை அறிவித்தது. அவ்வாறு வெளியேறத் தவறினால் மக்கள் படையுடன் சென்று பலவந்தமாக வெளியேற்றுவதாக சபதம் விடப்பட்டது. ஆனாலும் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை. இக்கட்டான நிலையில் மாட்டிய ஜனாதிபதி 14 நாட்களின் பின்னர் விஷேட வர்த்தமானி அறிவித்தலூடாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அறிவித்தல் செய்தார்.
ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷவும் அமைச்சர்களும் அரசாங்கத்தை நடத்த காத்திருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பதவியில் நியமிக்கும் நிலை ஏற்பட்டால் அடுத்த நிமிடமே பதவி விலகுவேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விட்டார். அதுவும் விட்டுக்கொடுக்காத ரணில் தலைமையிலான அமைச்சரவை உயர் நீதிமன்றத்தின் தயவை நாடியது. கடைசியில் ஜனாதிபதி ஐ.தே.க. அரசாங்கத்தை பதவி நீக்கியமை, தன்னிச்சையாக பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீறும் செயலென்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இறுதியில் பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்தை மீண்டும் நியமிக்கும் நிலை ஏற்பட்டதோடு அதுவரையில் மைத்திரிபால சிறிசேன அனுபவித்து வந்த 23 அமைச்சர்களைக் கொண்ட ஸ்ரீல.சு.கட்சியை இணைத்த கூட்டாட்சியையும் இழந்தார். அதன்பின்னர் உயர் பதவியிலிருந்த அதிகாரி ஒருவரை ஜனாதிபதி பதவி நீக்கியபோது அந்தப் பதவி நீக்கம் அரசியலமைப்பிற்கு முரணான செயல் என்று அரசியலமைப்பு பேரவை தெரிவித்து பதவி நீக்கியவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது.
2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட, அவ்வாறே தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்ற பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடன் நிறுத்தாவிட்டால் இனி ஒருபோதும் அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதுமில்லை, அமைச்சரவை கூட்டத்திற்கு வருவதுமில்லை என்று 2019 ஜூன் 07 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தி ஜனாதிபதி பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் எச்சரிக்கையை விடுத்திருந்தார். ஆனாலும் ஒரு வாரத்தின் பின்னர் ஐ.தே.க. அமைச்சரவையின் முன்னிலையில் மண்டியிடும் வகையில் வந்து அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். ஜனாதிபதியின் எதிர்பார்ப்பின்படி பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்த பின்னர் நிறுத்த முடியாது. அதற்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வேண்டும். அதனால் அந்த விடயத்திலும் ஜனாதிபதியின் எதிர்பார்ப்புக்கு 19 தடையாக அமைந்தது.
அதேபோன்று நியமனங்கள் விடயம், பொலிஸ்மா அதிபரை பதவி நீக்க எடுத்த நடவடிக்கை என்று பல விடயங்களில் ஜனாதிபதி முட்டி மோதிக்கொண்டுள்ளார். இந்நிலையில் பார்க்கும்போது ஜனாதிபதிக்கு இந்த அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் மனத்தாங்கலையும் விரக்தியையும் ஏற்படுத்தாமலிருக்க முடியாது. அதனால்தான் இந்தளவிற்கு விரக்தியடைந்துள்ளார். ஆனால், இவர் 2014 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக ஐ.தே.க. வால் நியமிக்கப்பட்ட போது வழங்கிய வாக்குறுதிகளில் இந்த 19 மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்காக இதே ஜனாதிபதி எடுத்த முயற்சிகளை பின்னோக்கிப் பார்த்தால் அவரது அன்றைய தேவை எவ்வாறிருந்தது என்பது புலனாகின்றது.
அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக சமர்ப்பித்து 2015 ஏப்ரல் 28 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது கூறயதாவது. “உலகில் எந்த ஆட்சியாலாவது ஜனாதிபதி ஒருவர் தமக்கிருக்கின்ற அதிகாரங்களை குறைத்துக் கொள்வதற்கு இணங்கிய வரலாறு இருக்கின்றதா? அந்தளவிற்கு நான் மிகவும் வெளிப்படையாக நடந்துகொள்கின்றேன். ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியின் அதிகாரத்தை கூட்டிக்கொள்வதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டன. ஆனால் நானோ அதற்கு மாற்றமாக செயற்படுகின்றேன். இதனை கருத்திலெடுத்து அரசியலமைப்பிற்கான இந்த திருத்தத்திற்கு முரண்பாடுகளை மறந்து ஆதரவு வழங்க வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
இந்த 19 நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பல்வேறுவிதமான முறைப்பாடுகளும் விமர்சனங்களும் இருந்து வந்தன. 19 ஆவது திருத்தம் 2015 மார்ச் 24 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது உயர் நீதிமன்றத்தில் 19 மனுக்கள் சமர்ப்பிக்ப்பட்டிருந்தன. அவற்றுள் 14 மனுக்கள் 19 இற்கு எதிராக செய்யப்பட்ட மனுக்களாகும். அந்த 14 மனுக்களையும் பரிசீலனை செய்த கே. ஸ்ரீபவன் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றவும் சில பிரிவுகளை திருத்தம் செய்யவும் அனுமதி வழங்கியிருந்தது. அத்துடன் அன்று நிலைமைய சரியாகப் புரிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போது முன்வைக்கப்பட்ட திருத்தங்களை சமர்ப்பிக்கவும் அதனைப் பரிசீலிக்கவும் பாராளுமன்றத்தில் ஆறுபேர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்தார். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அஜித் பெரேரா ஆகியோரும் எம்பிக்களான எம். சுமந்திரன், அனுர பிரியதர்சன யாப்பா, ரஜீவ விஜேசிங்க மற்றும் பைசர் முஸ்தபா ஆகியேர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து 174 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் பின்னர் ஆளும் கட்சி தரப்பால் 63 திருத்தங்களும் எதிர்க்கட்சி தரப்பால் 111 திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. இவற்றைப் பரிசீலனை செய்து வாக்கெடுப்பு நடைபெற்ற 2015 ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு முன்னர் குழுவின் சமர்ப்பணம் முன்வைக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதியால் கோரப்பட்டது. ஆனாலும் வாக்கெடுப்பு நடைபெற்ற செவ்வாயன்று மாலை 6.00 மணியாகியும் முடிவு எட்டப்பட்டிருக்கவில்லை. பின்னர் 6.00 மணிக்கு முடிவடையவிருந்த விவாதம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கப்பட்டு திருத்தம் முன்வைத்தவர்களான மஹிந்த தரப்பு மற்றும் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தரப்பு சுதந்திரக் கட்சியினரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குறிப்பிட்ட முக்கியமான இரண்டு திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் நிலைமை சாதகமாக மாறியது. இறுதியில் பிரேரணைக்கு ஆதரவாக 212 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் பதிவாகியது. எவ்வாறாயினும் 10 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்தளவு ஆதரவுடன் நிறைவேறிய ஒரு மசோதாவாக 19 ஆவது திருத்தம் அமைகின்றது.
இவ்வாறு மைத்திரிபால சிறிசேன மிகவும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றிய 19 இன்று அதே ஜனாதிபதிக்கு நாட்டின் சாபக் கேடாகவும் அதனை நீக்காதவரையில் நாட்டை முன்னேற்ற முடியாது என்ற நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு பிரதான காரணம் நிறைவேற்று அதிகாரம் என்ற பெயரில் தனி நபர் ஒருவர் அதிகாரத்தை பயன்படுத்தி சர்வாதிகாரியாக மாறும் நிலைக்கு 19 ஆவது திருத்தத்தில் தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 19 இன்படி பதவிக்குவரும் அரசாங்கம் ஒன்று ஒருவருடம் பூர்த்தியடைந்த எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி நினைத்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தலாம் என்ற நிலை இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் 19 இற்கு முன்னர் இருந்த ஒரு வருட நிறைவில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற அதிகாரத்தை வைத்தே 2004 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அப்போதைய ஐ.தே.க. ஆட்சியை கவிழ்த்தார். அந்த அதிகாரம் காரணமாக ஜனாதிபதி வேறு கட்சி, பிரதமரும் அமைச்சரவையும் கொண்ட அரசாங்கம் வேறு கட்சி என்ற நிலையில் ஆட்சி அமைந்தால் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகி அடிக்கடி தேர்தல் நடத்தப்படுகின்ற நிலை ஏற்படுகின்றது.
இந்நிலைமைகளைக் கவனத்தில் எடுத்தே 19 இல் பதவிக்கு வருகின்ற அரசாங்கம் அதன் முதலாவது கூட்டத்தை நடத்தும் தினத்தில் இருந்து நான்கரை வருடங்கள் (4 ½) நிறைவடையும் வரையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்று 70(1) சேர்க்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறே ஜனாதிபதியின் பதவிக்காலம் 06 வருடங்கள் என்றிருந்தது 05 ஆக குறைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அரச பதவி நியமனங்கள், பதவி நீக்கம் தொடர்பாக கவனம் செலுத்த 10 சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதோடு அரசியலமைப்பு பேரவையும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஏனைய திருத்தங்களாக அரசியலமைப்பின் பிரிவுகளான 30, 31, 33, மற்றும் 33அ என்பவைகளாக அமைகின்றன. அரசியலமைப்பின் 07 ஆம் அத்தியத்திற்கு புதிய இணைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. அத்துடன் அமைச்சரவை நியமிக்கப்படும் போது ஜனாதிபதி பிரதமரின் அறிவுரைக்கமைய அமைச்சரவையை நியமிப்பார் என்று இருந்த பிரிவை பிரதமரிடம் வினவிய பின்னர் என்று திருத்தம் செய்யுமாறும் எதிர்க்கட்சியினர் அப்போது வேண்டிக் கொண்டனர். இறுதியில் அவ்வாறே திருத்தம் செய்ய வேண்டியேற்பட்டது. அத்துடன் அமைச்சரவையின் தலைவர் பிரதமர் என்ற விடயமும் உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
10 சுயாதீன ஆணைக்குழுக்கள் காரணமாக அரச நிர்வாக மற்றும் உயர் பதவிகள் அனைத்தும் அரசியல் மயப்படுத்தலிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அந்த 10 ஆணைக்குழுக்களில் முக்கியமான 05 ஆணைக்குழுக்களாகும். அரசியலமைப்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்த அமைப்பிற்கான 17 ஆவது திருத்தத்தில் இவை உட்படுத்தப்பட்டவைகளாக இருந்தாலும் அரசியலமைப்பிற்கான 18 ஆவது திருத்தத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் அவை நீக்கப்பட்டவைகளாகும்.
19 இல் உள்ள அரசியலமைப்பு பேரவை காரணமாக 2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் பதவியிலிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை ஜனாதிபதியால் பதவி நீக்கிவிட முடியவில்லை. அதனால் அவரை கட்டாய லீவில் அனுப்பிவிட்டு ஜனாதிபதி அவருக்குத் தேவையான ஒருவரை பொலஸ்மா அதிபராக நியமித்துள்ளார். இவ்வாறு பார்க்கும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறும் வகையில் நிறைவேற்று அதிகாரத்தை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்த முற்பட்டபோதும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் இந்த 19 ஆவது திருத்தம் தடையாக அமைந்திருக்கின்றது. 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் 2016 ஆம் ஆண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.தே.க. ஆட்சியை கவிழ்த்து பாராளுமன்றத்தை கலைத்திருப்பார். ஆனாலும் முடியவில்லை.
இவ்வாறு பார்க்கின்றபோது அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் சாபக்கேடாக அமைந்திருப்பது நாட்டிற்கல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கேயாகும். எந்த வகையிலும் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நீக்கப்படக்கூடாது. நடைமுறைக்கு அவசியமான திருத்தமாகும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 19ஐ நீக்க வேண்டிய தேவை எதுவும் தற்போதைக்கு இல்லை. செய்ய வேண்டியது ஐ.தே.க. அரசாங்கத்தோடு பதவிக்கு வந்த காலம் முதல் இன்று வரையில் கடைப்பிடித்து வரும் முரண்பாட்டு அரசியல் நிலையையும் சுயநல அரசியல் போக்கையும் கைவிட்டு இணங்கி போயிருந்தால் நாடு அபிவிருத்தி அடைந்திருக்கும். ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலுக்குகூட இத்தகைய அரசியல் ரீதியான முரண்பாடுகளே காரணமென்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.
தற்போதைய நிலையில் அவருக்குத் தேவைப்பட்டிருப்பது பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதாகும். ஏதாவதொரு வகையில் ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிப்பதாகும். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது 19 என்பதால் அதனை சாபக் கேடாகவும் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாகவும் காட்டி நாட்டில் மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. 18 ஆவது திருத்தம் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமும் இல்லை. 19 நிறைவேற்றப்பட்டதுடன் 18 செல்லுபடியற்றதாக்கப்பட்டது. அதில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் இரண்டு முறைக்கு மேலும் எத்தனை தடவையும் ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் பதவி வகிக்கலாம் என்ற திருத்தம் உட்படுத்தப்பட்டிருந்ததால் அந்தப் பிரிவு நீக்கப்பட்டது.
அதனால் தற்போதிருப்பது 19 ஆவது திருத்தமாகும். இந்நிலையில் பார்க்கின்றபோது 19ஐ நீக்க எடுக்கும் ஜனாதிபதியின் முயற்சி கண்மூடித்தனமான ஒன்றென்றே கூறவேண்டும். 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதால் நிறைவேற்று அதிகாரத்தை சர்வாதிகாரி போன்று பயன்படுத்தி பதவி வகிக்கும் ஜனாதிபதி நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளமுடியும். அதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது. 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு ஏற்பட்டுத்தப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகம் செய்யப்பட்டபோது மாக்சிஸ இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இந்த ஜனாதிபதி முறை நாட்டிற்கு பாதகமானது என்ற குற்றச்சாட்டாகும். ஆனாலும் அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் 37 வருடங்களாக இந்த முறையில் ஒரு திருத்தத்தை செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. ஆனாலும் ஜனாதிபதியின் அதிகார குறைப்பு என்ற அடிப்படையில் 2015 ஏப்ரலில் பதவியிலிருந்த ஜனாதிபதியே தம்மிடம் குவிந்திருக்கும் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்று முன்வந்ததால் அது சாத்தியமானது.
ஆனால் தற்போதைய நிலையில் அதே அதிகாரத்தை தமக்கு தேவையான முறையில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டபோது அதற்கு 19 ஆவது திருத்தம் தடையாக இருப்பதால் அதனை நீக்க வேண்டுமென்ற தேவை ஏற்படுத்தப்படுவதால் மக்களே இறைமையுள்ளவர்கள் என்ற முறையில் 19ஐ நீக்குவதற்கு எதிரான அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கின்றது.
எம்.எஸ். அமீர் ஹுசைன்
vidivelli