நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் வன்செயல்களின் போதெல்லாம் அரசாங்கம் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கும், காயங்களுக் குள்ளானவர்களுக்கும் வன்செயல்கள் காரணமாக பலியானவர்களுக்கும் நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கி பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்தியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்கு வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற வன்செயல்களை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்போர் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு தாமதமில்லாமல் உடனடியாக நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துரையாடல்களின்போதும் உறுதியளித்தாலும் நஷ்டஈடுகள் காலந்தாழ்த்தியே வழங்கப்பட்டுள்ளன. இதனை நாம் கிந்தோட்டை மற்றும் அளுத்கம, கண்டி – திகன வன்செயல் சம்பவங்களினையடுத்து அறிந்துகொண்டோம்.
கண்டி – திகன வன்செயல்கள் அரங்கேற்றப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகி பல மாதங்களும் கடந்துவிட்ட நிலையில் நஷ்டஈடு வழங்கல் இன்னும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. மொத்தம் 546 சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டுப்பணியகம் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இவற்றில் 174 சொத்துகளுக்கு இன்னும் நஷ்ஈடுகள் வழங்கப்படவில்லை. 174 சொத்துகளுக்கு நஷ்டஈடாக 17 கோடி 5 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
கண்டி – திகன வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட 372 சொத்துகளுக்கு நஷ்டஈடாக 19 கோடி 48 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இதுவரை நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை. இதுவும் இழுபறி நிலையிலேயே காணப்படுகிறது. அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இழைக்கப்பட்டுள்ள சேதம் 27 மில்லியன் ரூபாய் என உரிய அரச நிறுவனங்களால் மதிப்பீடு செய்யப்பட்டும் பள்ளிவாசலுக்கு ஒரு மில்லியன் ரூபாவே நஷ்டஈடாக வழங்குவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளமை நஷ்டஈடுகளிலும் முஸ்லிம்கள் புறந்தள்ளப்படுகின்றமை தெளிவாகிறது.
அம்பாறையில் பாதிக்கப்பட்ட ஏனைய 13 சொத்துகளின் சேதமதிப்பீடு 3.6 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டும் 1.3 மில்லியன் ரூபாவே நஷ்டஈடாக வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே முஸ்லிம் சமூகம் கடந்த மே மாதம் மேலும் பல அழிவுகளை வன்செயல்கள் மூலமாக எதிர்கொண்டது. கம்பஹா, குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடம்பெற்ற வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள் இடம்பெற்றுள்ளதாக அவ்வவ் பிரதேசங்களின் பிரதேச செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பெரும் எண்ணிக்கையிலான பள்ளிவாசல்களும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 2 பள்ளிவாசல்களும், குருநாகல் மாவட்டத்தில் 26 பள்ளிவாசல்களும், புத்தளம் மாவட்டத்தில் 13 பள்ளிவாசல்களும் இனவாதிகளால் தாக்கப்பட்டு சேதங்களுக்குள்ளாகியுள்ளன. மொத்தம் 314 கடைகள் தாக்குதல் களினால் சேதப்படுத்தப்பட்டும், எரிக்கப்பட்டுமுள்ளன.
இவற்றுக்கான உரிய நஷ்டஈடுகள் வழங்குவதைத் துரிதப்படுத்துமாறு புனர்வாழ்வு அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தங்களது கடைகளைத் திறந்து வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கு முற்பணம் வழங்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமரின் பணிப்புரையும் ஆலோசனைகளும் துரிதப்படுத்தப்படவேண்டும். அம்பாறை வன்செயல்கள் இடம்பெற்று ஒரு வருடத்திற்கு மேலாகியும் நஷ்டஈடுகள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திகன வன்செயல் நஷ்டஈடுகளின் ஒரு தொகுதி இன்னும் வழங்கப்படவில்லை. இவற்றுக்கெதிராக பிரதமர் தனது அதிகாரத்தைப் பாவித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதேபோல் கொட்டாரமுல்லையில் இனவாதிகளினால் பலியெடுக்கப்பட்ட பௌஸுல் அமீருக்கான நஷ்டஈடு 1 ½ மாதங்கள் கடந்தும் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. 3 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 7 இலட்சம் ரூபா வழங்கப்படவேண்டியுள்ளது. தாமதத்திற்குக் காரணம் அவரது மரண அத்தாட்சிப்பத்திரம் இதுவரை சம்பந்தப்பட்ட திணைக்களத்துக்குக் கிடைக்காமையே எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன வன்முறைகள் நடக்க வழிவிட்டுவிட்டு அதன்பின்னர் நஷ்டஈடு வழங்குகின்ற கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும். அரசாங்கம் வன்செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இந்தக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பதை அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.
விடிவெள்ளி