தங்கொட்டுவ வாராந்த சந்தையில் அனைத்து இனத்தினைச் சேர்ந்த வியாபாரிகளும் எவ்வித தடைகளுமின்றி தங்களது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமென கடந்த வெள்ளிக்கிழமை மாரவில நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான கேமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவினால் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தடை விதித்தமை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை மாரவில நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தற்காலிகமாகத் தடை செய்யுமாறு உத்தரவிட்டு வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் கே. வி. சுசந்த பெரேராவினால் தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடந்த திங்கட்கிழமை எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து தங்கொட்டுவ பொலிஸார் இது தொடர்பில் மாரவில நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாரவில நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாரவில நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அடுத்த மாதம் 23ஆம் திகதி இது தொடர்பில் எழுத்து மூலமான வாதங்களைச் சமர்ப்பிக்குமாறு இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் நீதிவான் உத்தரவிட்டார். அன்றைய தினம் இவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் நீதிவான் தெரிவித்தார். இதன் போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட ஆறு பேரும் எவ்வித பிணையுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
(மதுரங்குளி நிருபர்)
vidivelli