சஹ்ரானின் போதனைகளில் கலந்துகொண்ட 51 முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெறுமனே போதனைகளில் மட்டுமே கலந்துகொண்டவர்களாக இருந்தாலும்கூட இவர்களை விடுதலை செய்ய முடியாது.
அவ்வாறு விடுவதென்றாலும் இவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியே விடுதலை செய்ய முடியுமென பிரதியமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்தே மீண்டும் அவசரகால சட்டத்தை கொண்டுவர வேண்டியேற்பட்டது. இது தொடர்பாக முப்படையினரும் மற்றும் பொலிஸாரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டம் முக்கியமானது. அவசரகால சட்டத்தில் பொலிசார் மட்டும் அல்ல முப்படைகளும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்துள்ளது.
இது ஆரோக்கியமான விடயமாகும். ஏனெனில் நாட்டின் நிலைமையில் பொலிசாரால் மட்டுமே நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அவசரகால சட்டத்தின் கீழ் இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்களுக்கும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய பொறுப்பை கொடுத்திருப்பது நல்ல விடயம் என்றே கருதுகின்றோம்.
அதேபோல் இந்த சம்பவத்தை தொடர்ந்து இதுவரையில் 2389 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 236 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 189 தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
3 பேர் அவசரகால சட்டத்தின் கீழும் 186 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இவர்களில் 263 பேருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 94 பேர் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைதாகியவர்களில் 79 பேர் பிரதான சந்தேக நபர்களாகும். குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பில் 29 பேரும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் 29 பேரும் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில் பொறுப்பில் 29 பேரும் இருக்கின்றனர்.
இந்தப் பின்னணிகளில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக உறுதியை வழங்க முடியமாக இருக்கின்ற போதும் மேலும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்தவும் தகவல்களை சேகரிக்கவும் வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் சஹ்ரானின் போதனைகளில் கலந்துகொண்ட பின்னர் அதிலிருந்து இடையில் வெளியேறிச் சென்றவர்கள் தொடர்பாகவும் ஆராய வேண்டியுள்ளது.
இராணுவம் மற்றும் பொலிசாரின் மூலமாக தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சஹ்ரானின் போதனையில் கலந்துகொண்ட 51 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாதுள்ளது. ஏனெனில், இவர்கள் போதனைகளில் மட்டுமே கலந்துகொண்டவர்கள். இதனால் இவர்களை விடுதலை செய்யும்போது எந்த முறையில் விடுதலை செய்வது என்ற பிரச்சினை இருக்கின்றது. குறைந்தது புனர்வாழ்வளிக்கும் வகையிலாவது நடவடிக்கைகளை எடுத்தே விடுதலை செய்ய முடியும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொலிஸாரும் முப்படையினரும் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக திருப்தியடைய முடியுமாக இருக்கின்றது. குண்டுத் தாக்குதலின் பின்னரான சம்பவங்கள் தொடர்பாகவும் நடவடிக்கையெடுக்க முடியுமாக இருந்துள்ளது. துரித நடவடிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய முடிந்துள்ளது. இவர்களை கைது செய்வதற்கு முஸ்லிம்கள் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும். இதேவேளை சம்பவத்தின்பின் இன வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பாகவும் சட்டத்தை செயற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அரசியல் நோக்கில் செயற்படுபவர்களும் இருக்கின்றனர். மேலும் ஸ்திரமற்ற நிலைமைகளை உருவாக்கும் வகையிலான செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. மீண்டும் மக்களின் அன்றாட வாழ்வை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
இதனால் அவசரகால சட்டத்தை தொடர வேண்டிய தேவையுள்ளது. அதன் மூலமே தேவையான பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு போதுமானளவுக்கு பொலிஸார் இல்லாமையினால் அவசரகால சட்டத்தின் ஊடாக இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும். இதனால் அதற்கான தேவையுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் இனங்கள், மதங்களை இலக்குவைத்து முன்னெடுக்கும் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் பொருத்தமற்றது என்பதனை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். 1983இல் நாங்கள் இழைத்த தவறுகள் காரணமாகவே விடுதலைப் புலிகள் பலமடைந்தனர். அவர்களுக்கு வெளிநாட்டு உதவிகளும் கிடைத்தன. இந்தியாவின் உதவிகளும் கிடைத்தது.
இதுபோன்ற நிலைமை மீண்டும் உருவாகிவிடக்கூடாது. தற்போது இனவாத கலவரங்கள் ஏற்படுவதை தடுத்தமையானது நாம் பெற்ற வெற்றியாகும். இனியும் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன். மீண்டும் சஹ்ரான் போன்றோர் உருவாக இடமளித்துவிடக் கூடாதென அவர் தெரிவித்தார்.
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
vidivelli