முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் எதிர்க்கட்சி
அரபு நாட்டுத் தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் எதிர்க்கட்சி செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த இனவாத செயற்பாடுகள் அடுத்த தேர்தலை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கொழும்பிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இராஜதந்திரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை கொழும்பிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இராஜதந்திரிகள் நேற்றுமுன்தினம் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அரபு நாட்டு இராஜதந்திரிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக இந்த சந்திப்புக்களின் போது தெரிவித்தனர். அத்துடன் சகல இனங்களும் சமாதானமாகவும் சகவாழ்வுடனும் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கைவாழ் மக்களிடையே இனவாத வன்முறைகளை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மற்றும பிரதமர் ஆகியோரிடம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இராஜதந்திரிகள் கூட்டாக கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
vidivelli