இனக்கலவரங்களை துண்டுவதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்க
ஜனாதிபதி , பிரதமரின் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் வலியுறுத்து
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மாசுபடுத்தக்கூடியதும் இனக்கலவரங்களை தூண்டி வன்முறையை வளர்க்கக் கூடியதுமான எல்லா முயற்சிகளுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில், கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேற்றுமுன்தினம் மாலை சந்தித்து உரையாடினர்.
இது குறித்து இலங்கையிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சார்பாக துருக்கி தூதரகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு விடயம் தொடர்பில் அவர்கள் அங்கு பிரஸ்தாபித்தனர். அத்துடன், சமாதானத்தையும் அமைதியையும் எல்லா சமூகங்களுக்கு மத்தியிலும் ஏற்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
பல தசாப்தங்களாக தமது நாடுகளுக்கும் இலங்கை மக்களுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவி வரும் நட்புறவு மற்றும் பல்வேறு விதமான ஒத்துழைப்புகள் பற்றியும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எடுத்துரைத்தனர். ஓர் அமைதியான சூழலை ஏற்படுத்துவதன் அவசியம், பல்லின சமூகங்களைக் கொண்ட இலங்கைக்கு மாத்திரமன்றி பிராந்தியத்துக்கும் அதற்கப்பாலும் மிக நீண்டகால தேவையாக இருந்து வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மாசுபடுத்தக்கூடியதும் இனக்கலவரங்களை தூண்டி வன்முறையை வளர்க்கக் கூடியதுமான எல்லா முயற்சிகளுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் கேட்டுக் கொண்டனர். அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்த விடயங்களை கருத்திற் கொள்வதாகவும், தொடர்ச்சியாக தொடர்புகளை பேணுவதாகவும் ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களிடம் உறுதியளித்தனர்.
எம்.ஏ.எம்.அஹ்ஸன்
vidivelli