மினுவாங்கொடை , குருநாகல் , நாத்தாண்டிய வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள்
பிரதேச செயலகங்களினூடாக நஷ்டஈடு
கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்தந்தப் பிரதேசங்களின் பிரதேச செயலகங்களினால் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டு பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
சேதமாக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கான நஷ்டங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நஷ்டஈடுகள் வழங்கப்படுமெனவும் அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் இழப்பீட்டு பணியகத்தின் மேலதிகப் பணிப்பாளரும், இழப்பீடுகளை மதிப்பீடு செய்யும் குழுவின் உறுப்பினருமான எஸ்.எம். பதுர்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
சொத்துகளின் மதிப்பீடுகள் எதிர்வரும் 2 ஆம் திகதி மினுவாங்கொடையிலும், 4 ஆம் திகதி நாத்தாண்டியாவிலும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அழிவுகளுக்குள்ளான சொத்துகளின் ஆவணங்கள், உறுதிகள், உரிமையாளர்களின் தேசிய அடையாள அட்டை, சேதங்களுக்குள்ளான தளபாடங்கள், பொருட்களின் விபரங்கள், வாகனங்களின் பதிவுகள் என்பன பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை, பூகொடை பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் மொத்தம் 164 சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 51 வீடுகள், 73 கடைகள், 34 வாகனங்கள், 2 பள்ளிவாசல்கள் அடங்குவதுடன் 4 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் மொத்தம் 480 சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 26 பள்ளிவாசல்கள், 89 வாகனங்கள், 183 கடைகள், 178 வீடுகள் அடங்குவதுடன் 4 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டியா, சிலாபம் மற்றும் தங்கொட்டுவ போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் மொத்தம் 182 அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 13 பள்ளிவாசல்கள், 22 வாகனங்கள், 58 கடைகள், 86 வீடுகள் அடங்குவதுடன் இருவர் காயங்களுக்குள்ளானதுடன் ஒருவர் பலியாகியுள்ளார்.
வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட, அழிவுகளுக்குள்ளான சொத்துகளுக்கு உரிய நஷ்ட ஈடுகள் விரைவில் வழங்கப்படுமெனவும், நஷ்டஈடு வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார் எனவும் அவர் கூறினார்.
வர்த்தக நிலையங்களுக்கு முழுமையான நஷ்டஈடுகள் வழங்கப்படும் வரை வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முற்பணம் வழங்குமாறும் இழப்பீட்டு பணியகத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
vidivelli