அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள்
ஆராய பொலிஸ் சட்டப்பிரிவிடம் கையயளித்தது பொலிஸ் தலைமையகம்
முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அண்மையில் வெளியிட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவ்விரு முறைப்பாடுகளும் பொலிஸ் தலைமையகத்தால் பொலிஸ் சட்டப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கண்டி – தொடம்வல கித்சிறிமெவன் ரஜமகா விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உரையாற்றியிருந்தார். அதில் அவர் வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கடந்த 21 ஆம் திகதி எழுத்துமூலம் முறைப்பாடளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் பஸால் நிஸார் என்பவர் பொலிஸ் நிவாரணப் பிரிவில் முறையிட்டிருந்தார். அதன்படியே இவ்விரு முறைப்பாடுகளும் தற்போது பொலிஸ் சட்டப் பிரிவிடம் ஆராய்வதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.
vidivelli