பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் வெளியிட்டிருந்த அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையிலுள்ள பெண்கள் சேலை அல்லது ஒசரி என்ற ஆடையே அணிந்து கடமைக்கு வரவேண்டும் என்று பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டிருந்த சுற்று நிருபத்தில் திருத்தங்களை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினை பொதுநிர்வாகம் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் அரசசேவையில் உள்ள பெண்கள் சேலை அல்லது ஒசரி அல்லது எவ்வகையான கௌரவமான ஆடைகளையும் அணியமுடியுமென்றும் அந்த ஆடை முகத்தை மறைக்கக் கூடியதாக இருக்கக்கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத்தாக்குதல்களையடுத்து பொதுநிர்வாக அமைச்சு அரச நிறுவனங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் சேலை அல்லது ஒசரி அணிய வேண்டுமென சுற்று நிருபமொன்றினை வெளியிட்டது. இச்சுற்று நிருபம் அரச ஊழியர்களின் அடிப்படை உரிமை மீறல் என பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அபாயாவும் பர்தாவும் அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்கள் இதனால் அசௌகரியங்களுக்குள்ளாகினார்கள். பெரும்பாலான அரச நிறுவனங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் வேலைக்குச் செல்லாது விடுமுறையில் இருந்தனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சுற்று நிருபத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு வேண்டியிருந்தார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தங்களைப் பிரயோகித்தனர். குறிப்பிட்ட சுற்று நிருபம் முஸ்லிம் பெண் ஊழியர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளதாக முறையிட்டனர்.
இதேவேளை அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை வெளியிட்ட பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிரி பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் கேள்விக்குட்படுத்தப்பட்டார். குறிப்பிட்ட சுற்று நிருபம் காரணமாக முஸ்லிம் பெண் ஊழியர்கள் பலர் கடமைக்குச் செல்லாது தவிர்ந்திருப்பது தொடர்பில் அவர் கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையிலே குறிப்பிட்ட சுற்று நிருபம் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் அரச பெண் ஊழியர்கள் சேலை அல்லது ஒசரி அல்லது முகத்தை மறைக்காத வகையில் எந்த வகையான கௌரவமான ஆடையையும் அணியலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்று நிருபம் திருத்தங்களுக்குட்பட்டதன் பின்பு முஸ்லிம் பெண் ஊழியர்கள் அபாயா ஹிஜாப் அணிந்து செல்லமுடியும்.
vidivelli