மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்

0 1,734
  • கலா­நிதி ஏ.சீ.எல். அமீர் அலி
  • தமிழில்: எஸ்.எம்.எம். யூசுப்

அபூ­பக்கர் முஹம்­மது அப்துல் அஸீஸ் இறை­யடி சேர்ந்து நாற்­பத்­தைந்து வரு­டங்­க­ளா­கின்­றன.  அன்­னாரின் மறை­வுடன் இலங்கைத் தாயகம், ஒரு தேச­பக்தனையும், முஸ்லிம் சமூகம் பேர­றிவு படைத்த பெரு­ம­க­னையும் இழந்து விட்­டது.

கொழும்பு ஸாஹிறாக் கல்­லூ­ரியின் மேம்­பாட்­டிற்கும், அபி­வி­ருத்­திக்கும் அன்னார் ஆற்­றிய அர்ப்­ப­ணிப்பு நிறைந்த அரும்­பெரும் சேவை அவரை என்றும் நினை­வு­ப­டுத்­து­கின்­றது.  இலங்கை முஸ்­லிம்­களின் முத­னிலைக் கல்­விக்­கூ­ட­மான ஸாஹிறாக் கல்­லூரி, அவர் அதி­ப­ராகப் பத­வி­யேற்ற 1948ஆம் ஆண்டு மற்றும் அதி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற 1961ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் வைத்­திய கலா­நி­தி­க­ளா­கவும், பொறி­யி­ய­லா­ளர்­க­ளா­கவும், அறி­வியல் அறி­ஞர்­க­ளா­கவும், அரச சிவில் சேவை அலு­வ­லர்­க­ளா­கவும் சிறப்­புடன் சேவை­யாற்­றி­யுள்ள, சேவை­யாற்றி வரு­கின்ற அன்­றைய இளை­ஞர்கள் தொடர்ச்­சி­யாக இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அனுப்­பப்­பட்டு வந்­த­வர்­களே.  அத்­துடன் மட்­டு­மல்­லாமல் அஸீஸின் கூற்றின் பிர­காரம், ஸாஹிறாக் கல்­லூரி “முஸ்­லிம்­களின் கலா­சாரம், எண்­ணக்­க­ருத்து மற்றும் செயற்­பா­டுகள் பரி­ண­மித்துப் பரி­ம­ளித்து  ஒளி­ப­ரப்­பிய மத்­திய நிலை­ய­மா­கவும், விளங்­கி­யது”.  சுருக்­க­மாகக் கூறினால், அந்தப் பதின்­மூன்று வருட காலப்­ப­குதி ஸாஹிறாக் கல்­லூ­ரியின் ‘பொற்­கால’மாகத் திகழ்ந்­தது.

ஸாஹிறாக் கல்­லூ­ரியின் நிர்­வா­கத்தைத் திற­மை­யாகக் கையாண்டு வந்த அன்னார், கல்­வித்­து­றையில் சிறப்­பாகப் போதிக்­கக்­கூ­டிய திறன்­மிகு ஆசி­ரியப் பெருந்­த­கை­களைத் தெரி­வு­செய்து நிய­மிக்கும் ஆற்­ற­லையும் கொண்­டி­ருந்தார். பல்­க­லைக்­க­ழக மூத­வையின் உறுப்­பி­ன­ரா­கவும் பத­வி­வ­கித்த அஸீஸ்,  பல்­க­லைக்­க­ழகம் புகு­வ­தற்கு மாண­வர்­களைத் தயார்­ப­டுத்­திய ஸாஹிறாக் கல்­லூ­ரியில் மேற்­பி­ரிவில் கற்­பிக்க ஒவ்­வொரு வரு­டமும் பல்­க­லைக்­க­ழ­கத்தில் திற­மை­யாகச் சித்­தி­ய­டைந்த இளம் பட்­ட­தா­ரி­களைத் தன்­னு­டைய கல்­லூ­ரியில் இணைத்துக் கொண்டார்.  திங்­கட்­கி­ழ­மை­களில் மாண­வர்­க­ளுக்கு அஸீஸ்  வழங்­கிய அறி­வு­ரை­க­ளின்­போது, அன்­னா­ருக்குப் பின்னால் அரை­வட்­ட­மாகச் சூழ்ந்­தி­ருந்த இந்த இளம் பட்­ட­தா­ரிகள் அவரின் உரை­களில் உள்­ள­டங்­கி­யி­ருந்த அறிவு விருந்­தினை சுவைத்துப் போஷித்துக் கொண்­டி­ருந்­தார்கள்.  திங்­கட்­கி­ழ­மை­களில் அவர் மாண­வர்­க­ளி­டையே நிகழ்த்­திய அறி­வு­ரை­களில் இஸ்லாம் மதம் சம்­பந்­த­மான ஆத்­மீக அறிவும் மத­சார்­பற்ற உலகம் சம்­பந்­தப்­பட்ட நுண்­ண­றிவும் கலந்­தி­ருக்கக் காணப்­பட்­டன.  ஆர்வம் மிகுந்த வாச­க­ராக இருந்த அஸீஸ், கொழும்புக் கல்­லூ­ரி­களில் சிறந்த நூல் நிலை­ய­மொன்றை ஸாஹிறாக் கல்­லூ­ரியில் அமைத்­துக்­கொள்­வ­தற்கும் அய­ராத அர்ப்­ப­ணிப்பைக் கொண்­டி­ருந்தார்.  அஸீஸின் ஸாஹிறாக் கல்­லூ­ரியின் அதிபர் பத­விக்­கா­லத்தின் நிரந்­த­ர­மான சாசனப் பட்­டி­யல்­களில் ஒன்­றாக இது திகழ்­கின்­றது என்­பதில் ஐய­மில்லை.

முஸ்லிம் சமூகம் கல்­வித்­து­றையில் நான்கு பெருந்­த­கை­களின் சேவையைப் பெற்­றி­ருந்த கால­மது.  இந்த நால்­வ­ரையும் ‘நய­மிகு நால்­வர்கள்’ என நான் நினைவு கூரு­கின்றேன்.  இவர்கள், எம்.சீ. சித்­தி­லெப்பை (1838 – 1898), ராசிக் பரீத் (1893 – 1984), பதி­யுதீன் மஹ்முத் (1904 – 1997) மற்றும் ஏ.எம்.ஏ. அஸீஸ் (1911 – 1973) ஆவர்.  இவர்­க­ளி­டையே, அஸீஸின் பங்­க­ளிப்பு தனித்­து­வ­மு­டை­ய­தாக இருந்­த­மைக்குக் காரணம், அவர் முஸ்­லிம்­களின் மத்­தியில் சிந்­த­னை­யா­ளர்­க­ளையும், நுண்­ண­றிவு படைத்­த­வர்­க­ளையும் உரு­வாக்­கு­வ­தி­லேயே தன்­னு­டைய முழு­மை­யான நோக்­கத்தை செலுத்­தினார்.  இவர்கள் தன்னைப் போன்று, ஆங்­கில மொழியில் பாண்­டித்­தியம் பெற்று அந்த மொழியில் கிடைக்­கப்­பெற்ற பாரிய அள­வி­லான அறி­வையும் குறிப்­பாக இஸ்லாம் மற்றும் முஸ்லிம் நாக­ரிகம் என்­ப­வற்­றி­லுள்ள படைப்­புக்­க­ளையும் படித்துப் பயன்­பெற வேண்­டு­மென்று செயற்­பட்டார்.  மேற்­கத்­திய மொழி­களில் குறிப்­பாக, ஆங்­கில மொழியில் இஸ்லாம் மதம் தொடர்­பாக மேற்­கொண்ட ஆராய்ச்­சி­களின் அடிப்­ப­டையில் மடை திறந்த வெள்ளப் பிர­வா­க­மாக வெளி­வந்து கொண்­டி­ருந்த எண்­ணக்­க­ருத்­துக்­களை அவர் தெரிந்து கொண்­டி­ருந்தார்.

அஸீஸ், ஓர் இக்பால் தத்­துவ நோக்­கா­ள­ராக விளங்­கி­ய­துடன், சோ் செய்யத் அஹமத் கான், முஹம்­பது அலி ஜின்னா மற்றும் அபுல் கலாம் ஆசாத் போன்ற கல்­வி­மான்­க­ளையும், தலை­வர்­க­ளையும் சிலா­கித்து மெச்­சு­ப­வ­ரா­கவும் இருந்தார்.  ஆகை­யினால், நவீ­னத்­துவப் பாதையில் தலை­மைத்­துவம் வகித்து சமூ­கத்தை வழி­ந­டாத்தி முன்­னெ­டுத்துச் செல்­லக்­கூ­டிய முற்­போக்குச் சிந்­த­னைகள் கொண்ட புதிய தலை­முறைத் தலை­வர்­களை உரு­வாக்­கு­வ­தற்கு வித்­துக்­க­ளை­யிட்டு, அவற்றைப் பேணி வளர்ப்­பதில் ஸாஹிறாக் கல்­லூ­ரிக்குப் பாரிய பொறுப்­புள்­ளது என்­பதை அவர் உணர்ந்து செயற்­பட்டார்.  இந்தக் கைங்­க­ரியம் அவ­ருக்குக் கடி­ன­மாக இருந்­தது.  ஏனெனில், அன்­றைய முஸ்லிம் சமூகம் வணி­கத்­து­றையில் ஈடு­பட்டு மதம் குறித்த விட­யங்­களில் பழ­மையைப் பின்­பற்­றி­ய­வர்­க­ளாக, இஸ்லாம் மற்றும் இஸ்­லா­மிய நாக­ரி­கத்தில் உண்­டான நவீ­ன­ம­ய­மான  சிந்­த­னை­களை ஏற்று­க்கொள்­ளாத ஒரு சமூ­க­மா­கவே இருந்­தனர்.  இந்த விடயம் அவ­ரு­டைய பல வாழ்க்கைச் சரித்­தி­ரங்­களில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.  அவ­ரு­டைய உரை­க­ளையும், ஆக்­கங்­க­ளையும் கூர்ந்து அவ­தா­னிக்­கும்­போது இது புலப்­ப­டு­வதை உணர முடியும்.

லண்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வர­லாற்­றுத்­து­றையில் சிறப்புப் பட்டம் பெற்று, இலங்கை சிவில் சேவைப் பரீட்­சையில் சித்­தி­யெய்­திய முத­லா­வது முஸ்­லி­மான அன்னார், தன்­னு­டைய தாய்­நாட்­டிற்­கான சேவையைக் கிழக்கு மாகாண நக­ர­மான கல்­மு­னையில் உதவி அர­சாங்க அதி­ப­ராக 1942 மற்றும் 1944 ஆம் ஆண்­டு­க­ளுக்­கி­டைப்­பட்ட காலப்­ப­கு­தியில் நிறை­வேற்­றினார்.  உலக யுத்தம் கார­ண­மாக நாடு உணவுத் தட்­டுப்­பாட்டை எதிர்­கொண்­டி­ருந்த கால­மது.  இந்தத் தட்­டுப்­பாட்டை பகு­தி­ய­ள­வி­லா­வது நிவர்த்தி செய்யக் கிழக்கு மாகாணக் கர­வா­கு­பற்று முஸ்­லிம்கள் விவ­சாயத் துறையில் கொண்­டி­ருந்த திற­மையை உப­யோ­கப்­ப­டுத்­தினார்.  வெற்று அரச காணி­களை விவ­சாய நிலங்­க­ளாகப் பரி­ம­ளிக்கச் செய்ய அந்தக் காணி­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை அந்த முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கினார்.  இன்­றும்­கூட அந்தப் பகுதி முஸ்­லிம்கள், அஸீஸ் ஆற்­றிய அரும்­பெரும் சேவையை அன்­புடன் நினைவு கூர்­வ­துடன், இன்னும் “அஸீஸ்­துரைக் கண்டம்” எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள பாரிய நெற்­செய்கை நிலப்­ப­குதி, அந்தப் பிர­தே­சத்தை இலங்­கையின் ‘நெல் விளைச்சல் களஞ்­சி­ய­மாக’ மாற்­றி­ய­மைத்த அன்­னாரின் சேவைக்கு ஒரு நிசப்­த­மான சாட்­சி­ய­மாக விளங்­கு­கின்­றது.

அவர் கல்­மு­னையில் கட­மை­யி­லீ­டு­பட்­டி­ருந்த குறு­கிய காலப்­ப­கு­தியில் இரண்டு பிர­ப­லஸ்­தர்­களின் தொடர்­புகள் அவ­ருக்கு அறி­மு­க­மா­கின.  அவர்­களில் ஒருவர், அந்தப் பகு­தியில் ஆசி­ரியப் பெருந்­த­கை­யாகப் பதவி வகித்­த­வரும், இக்­பாலின் மீள் நிர்­மாண இஸ்­லா­மியக் கருத்­துக்­களில் லயித்­தி­ருந்து விளங்­கி­ய­வரும், அஸீஸின் ஆயுட்­கால நண்­ப­ரு­மான புலவர் அப்துல் காதர் லெப்பை அவர்­க­ளாவர்.  மற்­றவர், இந்து மதப் பக்­தரும், நுண்­ண­றிவுப் பேர­றி­ஞ­ரு­மான சுவாமி விபு­லா­னந்தர் அடிகள் இந்தப் பேராசான், அஸீ­ஸுக்கு மேலும் அறி­வூட்டும் வண்ணம், தமிழ்­மொழி மற்றும் இலக்­கி­யத்தின் ஆழ்­கடல் அறிவுச் சுரங்­கத்­திற்கு அழைத்துச் சென்றார்.  ஏற்­க­னவே தன்­னு­டைய சின்னப் பெரி­யப்பா முறை­யான அசனார் லெப்பை  மூல­மா­கவும், புகழ்­பூத்த தமிழ் வித்­தகர் ஆறு­மு­க­நா­வ­லரின் பிறப்­பி­ட­மான வண்­ணார்­பண்ணைச் சுற்­றுச்­சூ­ழ­லிலும் பாரிய தமிழ் அறிவைப் பெற்றுக் கொண்­டி­ருந்த அஸீஸுக்கு தமிழ் மொழி மற்றும் இலக்­கி­யத்தின் மேலி­ருந்த ஆர்வம் மென்­மேலும் அதி­க­ரித்­தது.

தமிழ்­மொ­ழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்­வமும், முஸ்­லிம்­க­ளுக்கு  அது முக்­கி­ய­மா­ன­தென அம்­மொழி பேணப்­பட்டுப் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற அன்­னா­ரு­டைய உத்­வே­கமும், ஆர்­வமும், சிங்­களம் மட்டும் மசோ­தாவை எதிர்த்து இலங்கை “செனட்” எனும் மூத­வையில் வாதிட்டு உரை­யாற்­றிய நிகழ்வில் நன்கு புல­னா­கின்­றது.  பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய முஸ்லிம் தலை­வர்­களின் கருத்­துக்­க­ளுக்கு அஸீஸின்  நோக்கு முரண்­பட்­டி­ருந்­தது.  அஸீஸின் மொழிக்­கொள்கை அர­சியல் பிர­பல்­யத்­திற்கு அப்பால் சென்­ற­துடன், இலங்­கையில் இஸ்லாம் எதிர்­கா­லத்தில் நிலைத்­தி­ருக்க வேண்­டு­மென்ற தீர்க்­க­த­ரி­ச­னத்­தையும் கொண்­டி­ருந்­தது.  முஸ்லிம் பாட­சா­லை­களில் போதனா மொழி தமி­ழாக இல்­லாமல் சிங்­க­ள­மாக மாற்­றப்­படும் நிலை, எதிர்­கா­லத்தில் நிக­ழக்­கூ­டிய நீண்­ட­கால விளை­வு­களை அன்­றைய முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களில் அநே­க­மா­ன­வர்கள் அறிந்­தி­ருக்­க­வில்லை.  அஸீ­ஸி­னதும், அன்­னாரின் நீண்­டநாள் நண்­ப­ரு­மான அப்­துல்­காதர் லெப்­பை­யி­னதும்  நுண்­ண­றி­வு­மிக்க வாதமே அன்று சிங்­கள மொழி மட்டும் சட்­ட­மூ­லத்தை உக்­கி­ர­மாக ஆத­ரித்த அமைச்சர் பதி­யுதீன் மஹ்­மூதின் மனோ­நி­லை­யையும் மாற்­றி­ய­தென்று இங்கு குறிப்­பி­டும்­போது, அது மிகை­யாக இருக்­காது.

அஸீஸ்,  தமி­ழுக்கும் தமிழ் எழுத்­தாக்­கத்­திற்கும் ஆற்­றி­யுள்ள தொண்டு தனி­யான ஆராய்ச்­சிக்­கு­ரிய விட­ய­மாகும்  ஏ.எம். நஹி­யாவின் ‘அஸீஸும் தமிழும்’ எனும் படைப்பு, அஸீஸின் நினை­வுக்குப் பெறு­மதி மிக்க பங்­க­ளிப்­பாகும்.  இலக்­கி­யத்­து­றையில், தமிழ் பேசும் முஸ்­லிம்­க­ளினால் தமிழ் மொழிக்கும், அரபு மொழிக்கும், இஸ்லாம் மதத்­திற்கும் ஆற்­றிய மாபெரும் தொண்­டாக அரபுத் தமிழ் விளங்­கு­வ­துடன், இது தொடர்­பா­கவும் அஸீஸ்  ஆர்வம் கொண்­டி­ருந்தார்.  “அர­புத்­தமிழ் எங்கள் அன்புத் தமிழ்” எனும் அன்­னாரின் ஆக்கம், தமிழ் மற்றும் அரபுச் சொற்­களைச் சிறிது மாற்றம் செய்து அரபு எழுத்­துக்­களில் எழு­தப்­பட்­டி­ருக்கும் இந்த ஓர­ளவு “புனித” மொழி மறு­ம­லர்ச்சி செய்­யப்­பட வேண்­டி­ய­தொன்­றாக உள்­ளது.  அலு­வ­லக மொழிப் பிரச்­சி­னை­யின்­போது “அரபுத் தமிழ்” முஸ்­லிம்­களின் தெரி­வாக இருக்க வேண்­டு­மென்று அஸீஸ்  சில­ச­மயம் எண்­ணி­யி­ருந்­த­து­முண்டு.  ஆனால் அவ­ரு­டைய நண்பர், அப்­துல்­காதர் லெப்பை, அர­சியல் இலா­பத்­திற்­காகத் தமிழ்­மொ­ழியைப் பலிக்­க­டா­வாக ஆக்­குதல், இஸ்­லா­மிய கலா­சா­ரத்தைப் பாதிக்கும் எனக் கடிதத் தொடர்பு மூலம் வலி­யு­றுத்­திய கார­ணத்தால் அஸீஸ்  அந்தக் கருத்தை மாற்­றிக்­கொண்டார்.

முஸ்லிம் வாலிபர் சங்கம் (Y.M.M.A.) மற்றும் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம் (CMSF) ஆகிய இரண்டும் அஸீ­ஸி­னதும் அன்­னாரின் புலவர் நண்­ப­ரி­னதும் இரட்டைப் படைப்­புக்­க­ளாகும்.  வாலிபர் சங்­கத்தை உரு­வாக்­கு­வதும், வறு­மை­யான மாண­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கு­தலும் அவர்கள் இரு­வ­ரி­னதும் கல்­முனைக் கால நட்பில் உரு­வா­ன­வை­யாகும்.  நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்கள் நிதி­யு­தவி பெற்று இன்று தொழில் வல்­லு­நர்­க­ளா­கவும், சிரேஷ்ட சிவில் சேவை அலு­வ­லர்­க­ளா­கவும் நாட்டில் சேவை செய்­கின்­றனர்.  முத­லா­வது வாலிபர் சங்­கக்­கிளை, 1943ஆம் ஆண்டில் பது­ளையில் அவ­ரு­டைய புலவர் நண்­ப­ரினால் அவர் அங்கு ஆசி­ரி­ய­ராக மாற்றம் பெற்றுச் சென்ற பின்பு ஆரம்­பிக்­கப்­பட்­டது.  இந்தக் கிளை கொழும்­பி­லுள்ள வாலிபர் சங்கத் தலைமை அலு­வ­ல­கத்­திற்கு முன்பு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாக விளங்­கு­கின்­றது.

அஸீஸின் வதி­வி­ட­மாக இருந்த கொழும்பு பான்ஸ் பிளே­ஸி­லுள்ள “மெடோ­சுவீட்” வளவில் அஸீஸால்  நடப்­பட்டு வளர்ந்­தி­ருந்த பனை­மரம், அவ­ரு­டைய நண்­பர்­க­ளுக்கு அன்­னாரின் யாழ்ப்­பாண வம்­சா­வ­ளியை நினை­வூட்­டி­யது.  யாழ்ப்­பா­ணத்தில் கல்­வி­யிலும் அந்­தஸ்­திலும் சிறந்து விளங்­கிய குடும்­பத்தில் பிறந்த அஸீஸ், வைத்­தீஸ்­வர வித்­தி­யா­லயம் மற்றும் யாழ் இந்துக் கல்­லூ­ரியின் பிர­ப­ல­மான பழைய மாண­வ­ராவார்.   இந்துக் கலா­சார சூழலில் ஆரம்பக் கல்­வியைத் தொடங்­கிய அவ­ருக்கு, தமிழ்­மொ­ழியில் பாண்­டித்­தி­ய­மும் இந்து மெய்­யியல் மற்றும் மர­பி­யல்­களில் சிறந்த அறிவைப் பெறவும் முடியுமாக இருந்தது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் அன்னாரின் மறைவுக்குப் பின்னர், 1980 இல் வழங்கிய “கலாநிதிப் பட்டம்” இந்த உறவுக்கு சான்றாக அமைகிறது.

அஸீஸ்  ஒரு நிறு­வ­ன­மா­கவும், நட­மாடும் கலைக் களஞ்­சி­ய­மா­கவும் திகழ்ந்தார்.  அவ­ரு­டைய எண்­ணமும், நோக்­கமும் அவ­ரு­டைய காலத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வை­யாக இருந்­தன.  இலங்­கைக்கு இக்­பாலின் தத்­து­வத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வ­ரா­கவும், ஆங்­கிலம் கற்ற அநேக முஸ்லிம் தொழில் வல்­லு­நர்கள், அரச அலு­வ­லர்கள் ஆகி­யோர்­களை நாட்­டுக்கு வழங்­கிய கல்­வி­மா­னா­கவும், கிழக்­கி­லங்கை முஸ்லிம் விவ­சா­யி­க­ளுக்குப் பாரிய சேவை­களை வழங்­கி­ய­வ­ரா­கவும், தேசிய மற்றும் சர்­வ­தேச எழுத்­தா­ளர்கள் அமர்­வு­களில் அங்­கீ­காரம் பெற்­ற­வ­ரா­கவும், கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் நாட்­டுக்குப் பாரிய சேவை செய்­த­வ­ரு­மான அன்னார் நம்­மி­டையே இல்லை.  இந்தச் சர்­வ­தேச தூர­நோக்­கா­ள­ருக்குப் பொருத்­த­மான புகழ்­மா­லை­யாக, இந்­தி­யாவின் குறிக்­கோள்­க­ளுக்­கான கற்கை நிறு­வ­னத்­தினால் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்ள “20ஆம் நூற்­றாண்டின் 100 முஸ்லிம் தலை­வர்கள்” என்ற நூலில் அன்­னாரும் இடம்­பெற்­றுள்ளார்.  அவ­ரு­டைய இழப்பு நாட்டிற்குப் பாரிய நட்டமாக இருப்பதுடன், அவருடைய நுண்ணறிவு வெற்றிடம் இனிவரும் வருடங்களிலும் அவ்வாறே இருக்கும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.