அரபுக்கல்லூரி சட்டவரைபு துரிதப்படுத்தப்பட வேண்டும்
எமது நாட்டில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான அரபுக் கல்லூரிகள் தொடர்பாக தொடர்ந்தும் பல்வேறு தரப்பினரால் தவறான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரபுக் கல்லூரிகள் இன்று நேற்று உருவாக்கப்பட்டவையல்ல. அவற்றின் வரலாறு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்டதாகும்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்தே அரபுக்கல்லூரிகளுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘அரபுக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் கற்கை நெறிகள் மற்றும் அடிப்படைவாத மத போதனைகள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் என்று எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
மத்ரஸா பாடசாலைகளில் பொருத்தமற்ற கற்கை நெறிகளே கற்பிக்கப்படுகின்றன. இலவச கல்வியினை வழங்கும் நாட்டில் இவ்வாறான பாடசாலைகள் இயங்குவது தேவையற்றது. இப்பாடசாலைகளில் மதக் கொள்கைகளுக்கே முக்கியத்துவமளிக்கப் படுகின்றன. ஒரு குற்றத்தினைச் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது எமது பொதுச்சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்ரஸா பாடசாலை களில் இவ்வாறான குற்றங்களுக்கான தண்டனைகளும் மிகக்கொடூரமான முறையில் கற்பிக்கப்படுகிறது. இது அடிப்படைவாதத்தையே ஊக்குவிக்கிறது.
பயங்கரவாதி சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து அடிப்படை வாதத்தை போதிக்கும் பாடசாலைகள் தொடர்பில் அரசாங்கம் ஒரு மாதகாலம் மாத்திரமே பேசியது. தற்போது இவ்விடயம் தொடர்பில் எவரும் அக்கறை செலுத்துவதில்லை’ எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிரணியினர் அரசாங்கத்தை எதிர்க்கவேண்டுமென்றே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். அரபுக்கல்லூரிகளை சட்ட வரம்புக்குள் உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையினையடுத்து அரபுக் கல்லூரிகளுக்கான சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணியில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு சபை என்பன ஈடுபட்டு சட்ட வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இச் சட்டவரைபு ‘இஸ்லாமியக் கல்வி’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அச் சட்ட வரைபை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவை முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது. ‘இஸ்லாமியக் கல்வி’ சட்ட வரைபுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பெரும்பான்மையின அமைச்சர்களும் தங்களது பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க என்போர் தங்களது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளார்கள். ஜனாதிபதியும் குறிப்பிட்ட அமைச்சர்களும் அரபுக் கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்றே பரிந்துரைத்திருக் கிறார்கள். அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரபுக் கல்லூரிகளுக்கென தனியான சட்டமொன்று தேவையற்றதென்றும் ‘இஸ்லாமியக் கல்வி’ சில திருத்தங்களுடன் கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட வேண்டுமெனவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரபுக் கல்லூரிகள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தனித்தனியான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்ததை எம்மால் மறுக்க முடியாது. மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டு வெளிநாடு களிலும் உள்நாட்டிலும் நிதி சேர்த்து மத்ரஸா என்ற பெயரில் வியாபாரம் செய்வதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீமும் குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் ‘இஸ்லாமியக் கல்வி’ (அரபுக் கல்லூரிகள்) சட்ட மூலம் விரைவுபடுத்தப்பட்டு அரபுக் கல்லூரிகள் அனைத்தும் சட்ட வரையறைக்குள் உட்படுத்தப்பட வேண்டும்.
எமது நாட்டில் தற்போது 317 அரபுக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் தற்போது தனித் தனி நிர்வாகத்தின் கீழேயே இயங்கிவருகின்றன. இதனால் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் நிலவுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரபுக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
அரபுக் கல்லூரிகளில் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள் என்று தொடராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட வேண்டும். இதற்கு ஒரே வழி அரபுக் கல்லூரி களுக்கான தனியான சட்டமொன்றினை நிறைவேற்றிக்கொள்வதாகும். இனவாதி களின் பொய் பிரசாரங்களுக்கு பதிலடி வழங்குவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு ‘இஸ்லாமியக் கல்வி’ சட்டவரைபினைத் துரிதப்படுத்த வேண்டும்.
vidivelli